அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, August 20, 2017

கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.

கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில் இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.''

அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ``பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.'' இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார்.

உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. ``நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

2017 - மறையுரைச் சிந்தனை (ஜூலை 31)

இறையாட்சி கடுகுவிதைக்கு ஒப்பானது

பெரும் நிலக்கிழார் ஒருவர் இருந்தார். அவருக்கென்று ஏக்கர் கணக்கில் நிறைய நிலங்கள் இருந்தன. ஆனால், அவருடைய தனிப்பட்ட வாழ்வில் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக அந்த நிலங்களை எல்லாம் பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நிலங்கள் எல்லாம் புதர்மண்டி தரிசு நிலங்களாகப் போயின.

ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் தனக்கு வந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டு வெளியே வந்தார். அப்போது அவர் தன்னுடைய மகனைப் பார்த்து, “மகனே! நம்முடைய நிலங்களில் பாடுபட்டு நிறைய வருடங்கள் ஆகிவிட்டன. நீதான் அவற்றைப் பண்படுத்தி, நல்லநிலைக்குக் கொண்டுவரவேண்டும்” என்றார். தந்தை சொன்னதற்கு மகன் சரி என்று சொல்லிவிட்டு, நிலத்தைப் பண்படுத்த தேவையான உபகரணங்களோடு புறப்பட்டான்.

அவன் நிலத்திற்குச் சென்று, ஏறெடுத்து பார்த்தபோது, நிலமெல்லாம் களைகளும் புதர்களும் மண்டிக் கிடப்பதைப் பார்த்து ஒருநிமிடம் அதிர்ச்சிக்குள்ளாகி நின்றான். இப்படி தரிசாகக் கிடக்கின்ற நிலத்தை, தனியொரு மனிதனாக எப்படிப் பண்படுத்துவது என்று திகைத்துப் போய், தான் கையோடு கொண்டுவந்திருந்த உபகரணங்களை ஓரமாக வைத்துவிட்டு, அருகே இருந்த மரத்தின் நிலத்தில் படுத்து தூங்கிவிட்டான்.

இதற்கிடையில் நிலத்தைப் பண்படுத்துவதற்காக தான் அனுப்பி வைத்த மகன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக தந்தை தன்னுடைய நிலத்திற்கு வந்தார்.  அப்போது அவர் தன்னுடைய மகன் மரத்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து, ஒருகணம் திகைத்துப் போய்நின்றார். உடனே அவர் தன்னுடைய மகனிடம் சென்று, “மகனே! நான் உன்னை நிலத்தைப் பண்படுத்தி, அதில் ஏதாவது பயிரிட அல்லவா சொன்னேன், இப்படி படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறாயே” என்று கேட்டார். அதற்கு மகன், “நானும் நிலத்தைப் பண்படுத்தி, பயிரிடலாம் என்றுதான் வந்தேன், ஆனால், இவ்வளவு நிலமும் களைகளும் புதர்களும் மண்டிக்கிடப்பதைப் பார்த்தபோது தனியொரு ஆளாய் எப்படி இவ்வளவு நிலத்தையும் பண்படுத்துவது என்று எனக்கே மலைப்பாய் போய்விட்டது. அதனால், மரநிழலில் படுத்துத் தூங்கினேன்” என்றான்.

அதற்குத் தந்தை அவனிடத்தில், “நிலத்தை ஒரேயடியாய் பன்படுத்தவேண்டும் என்று தேவையில்லை, சிறிது சிறிதாகப் பண்படுத்தியிருக்கலாமே?, அதையேன் செய்ய மறுத்தாய்?” என்றார். தந்தை கேட்ட கேள்விக்கு, ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் மகன் அமைதியாக இருந்தான்.

மாற்றத்தை உடனடியாகக் கொண்டுவர முடியாது, அதை சிறிது சிறிதாகத்தான் கொண்டு வரவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. முதலாம் நூற்றாண்டில் நற்செய்தி அறிவிப்புப் பணியும் ஈடுபட்டவர்களுக்கு திருச்சபைத் தலைவர்கள் சொல்லிவந்த இந்த நிகழ்வு நம்முடைய சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை கடுகுவிதைக்கு ஒப்பிடுகின்றார். கடுகுவிதை என்பது அளவில் மிகச் சிறியதாகும். ஆனால், அது வளர்ந்து பெரிய மரமாக மாறுகின்றபோது வானத்துப் பறவைகள் தங்கக்கூடிய அளவுக்கு உயர்ந்துநிற்கும். இறையாட்சியும் கூட சிறிய தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும் அது பரவி உலகெங்கும் வியாபித்திருக்கும் என்கிறார் இயேசு.

இயேசு சொல்லும் இந்த உவமை நமக்கு ஒருசில உண்மைகளை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. அது என்னவென்று இப்போது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இந்த உலகத்தில் தோன்றிய எந்த ஒரு மாற்றமாக இருக்கட்டும் அல்லது புரட்சியாக இருக்கட்டும் அதுவெல்லாம் உடனடியாகப் பெரிதாக தோன்றிவிடவில்லை. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒருவரால் சிறிதாக தோற்றுவிக்கப்பட்டதாகும். பின்னர்தான் அது வளர்ந்து இப்போதுள்ள நிலையை அடைந்திருக்கும். ஆகையால், நாம் தொடங்கக்கூடிய செயல் சிறிதாக இருக்கின்றதே,  இது எப்படி எல்லா மக்களையும் சென்றடையும் என்று கலங்கத் தேவையில்லை. நாம் செய்யக்கூடிய வேலையை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், நிச்சயம் அது பெரிதாகி உயர்ந்த பலனைத் தரும் என்பது உறுதி.

அடுத்ததாக, சமூதாயத்தில் சிறியவர்களாக, எளியவர்களாக, தாழ்ந்தவர்களாகக்  கருதப்படக்கூடிய மக்களோடு கடவுள் எப்போதும் உடனிருக்கின்றார், அவர்களை மேலும் மேலும் உயர்த்துகின்றார்  என்கிற உண்மையையும் இந்த உவமை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.  கடுகுவிதை சிறிய விதையாக இருந்து பெரிய மரமாவது போன்று தன்னை எளியவர்களாக, தாழ்சியுள்ளவர்களாகக் கருதுவோரை கடவுள் மேலும் மேலும் உயர்த்துகின்றார். மரியாளின் பாடலில் வரும், “தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகின்றார்” (லூக் 1:53) என்கிற வார்த்தைகள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

ஆகவே, நாம் செய்யக்கூடிய பணிகள் சிறிதாக இருந்தாலும், தொடர்ந்து அதனைச் செய்துகொண்டே இருக்கின்றபோது ஒருநாள் அது உயர்ந்து நிற்கும் என்பதை உணர்வோம், உள்ளத்தில் தாழ்ச்சியை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment