அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, July 14, 2024

திருத்தந்தை புனித அனிசேட்டஸ் (Pope Saint Anicetus)

 திருத்தந்தை புனித அனிசேட்டஸ் (Pope Saint Anicetus) உரோமை ஆயராகவும் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாகவும் கிபி சுமார் 150இலிருந்து 167 வரை பணிபுரிந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 11ஆம் திருத்தந்தை ஆவார். லூயி டுக்கேன் (Louis Duchesne) என்னும் வரலாற்றாசிரியர் கருத்துப்படி, முதல் இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த திருச்சபை வரலாற்றுச் செய்திகளைத் துல்லியமாகக் கால வரையறை செய்வது மிகக் கடினம்.

புனித அனிசேட்டஸ்
Saint Anicetus
11ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்கிபி சுமார் 154
ஆட்சி முடிவுகிபி சுமார் ஏப்ரல் 20, 167
முன்னிருந்தவர்புனித முதலாம் பயஸ்
பின்வந்தவர்சொத்தேர்
பிற தகவல்கள்
இயற்பெயர்அனிசேட்டஸ்
பிறப்புபிறப்பு ஆண்டு உறுதியாகத் தெரியவில்லை;
ஏமெசா நகர், சிரியா
இறப்புகிபி சுமார் ஏப்ரல் 20, 167
உரோமை, உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாசனவரி 5

அனிசேட்டஸ் பண்டைய சிரியா நாட்டில் ஏமெசா என்னும் நகரில் பிறந்தார். ஏமெசா இன்று ஹோம்ஸ் (Homs) என்று அழைக்கப்படுகிறது. மரபுப்படி, அனிசேட்டசின் தந்தை இன்றைய சுவிட்சர்லாந்து பகுதியிலிருந்து சிரியா நாட்டுக்குப் பெயர்ந்துசென்றவர்.

அனிசேட்டஸ் (பண்டைக் கிரேக்கம்: Anicetus; இலத்தீன்: Anicetus) என்னும் பெயர் கிரேக்க மொழியில் "தோல்வியுறாதவர்" என்று பொருள்படும்.

ஞானக்கொள்கைக்கு எதிர்ப்பு

அனிசேட்டஸ் உரோமைக்கு ஏன் வந்தார் என்பது பற்றித் தெளிவில்லை. ஒருவேளை அவர் ஞானக்கொள்கை என்னும் தப்பறையை எதிர்த்ததால் கீழைத் திருச்சபையை விட்டு உரோமைக்குச் செல்லும் கட்டாயம் எழுந்திருக்கலாம்.

அந்நாட்களில் உரோமையில் மார்சியோன் என்பவர் ஞானக்கொள்கையைப் பரப்பிவந்தார். அதை அனிசேட்டஸ் எதிர்த்தார். உரோமையில் புனித ஜஸ்டின் நிறுவியிருந்த கல்விக்கூடம் இந்த எதிர்ப்பில் அவருக்குத் துணையாக இருந்தது. திருத்தூதர்களிடமிருந்து பெறப்பட்ட கத்தோலிக்க கிறித்தவ கொள்கையின் பெயரால் அவர் ஞானக்கொள்கை போன்ற தவறான மெய்யியல் அணுகுமுறைகளை எதிர்த்துப் போராடினார்.

குருக்கள் நீண்ட முடி வளர்க்க தடை

"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டின்படி, கத்தோலிக்க குருக்கள் நீண்ட முடி வளர்த்தலாகாது என்று அனிசேட்டஸ் தடைவிதித்தார். இது ஒருவேளை ஞானக்கொள்கையினர் நீண்ட முடி வளர்த்ததால் அவர்களிடமிருந்து கிறித்தவப் பணியாளர்களை வேறுபடுத்தும் நோக்கத்துடன் நிகழ்ந்திருக்கலாம்.

புனித பொலிக்கார்ப்போடு சந்திப்பு

ஸ்மிர்னா (Smirna) நகரத்தின் ஆயரும் 80 வயது நிரம்பியவருமான புனித பொலிக்கார்ப்பு ஆசிய சபைகளின் தூதுவராக உரோமைக்கு அனுப்பப்பட்டு, அங்கே திருத்தந்தை அனிசேட்டசை சந்தித்துப் பேசினார். புனித பொலிக்கார்ப்பு நற்செய்தியாளராகிய புனித யோவானின் சீடராக இருந்தார் என்பது மரபு. ஒருவேளை அவர் குரு யோவான் (John the Presbyter) என்பவரின் சீடராக இருந்திருக்கலாம் என்று சில அறிஞர் கருதுகின்றனர்.

பொலிக்கார்ப்பின் சீடராக இருந்த புனித லியோன் நகர இஞ்ஞாசியார் இத்தகவலைத் தருகிறார்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடப்பட வேண்டிய நாள்

பொலிக்கார்ப்பு கீழைத் திருச்சபையிலிருந்து திருத்தந்தை அனிசேட்டசைத் தேடி உரோமைக்கு வந்தது இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்த நாளில் கொண்டாடுவது என்பது பற்றித் தெளிவுபெறுவதற்கு ஆகும். பொலிக்கார்ப்பும் அவர் தலைமை வகித்த ஆசிய நாட்டு ஸ்மிர்னா பகுதியும் இயேசுவின் உயிர்த்தெழுதலை நிசான் மாதத்தின் 14ஆம் நாள் கொண்டாடினர். அந்நாளில்தான் யூதர்கள் பாஸ்கா விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் நிசான் மாதத்தின் 14ஆம் நாள் வாரத்தின் ஏதாவது ஒரு நாளாக இருக்கலாம். அது ஞாயிற்றுக் கிழமையாக எல்லா ஆண்டுகளிலும் இராது. எனவே இந்நிலைப்பாடு "பதினான்காம் நாள் கொள்கை" என்னும் பெயர் பெற்றது.

இவ்வாறு கொண்டாடும் பழக்கம் திருத்தூதர் காலத்திலிருந்தே பெறப்பட்டது என்றும், குறிப்பாக, யோவான் (திருத்துதர் அல்லது குரு) சமூகத்தில் அவ்வழக்கம் நிலவியது என்றும் கீழைச் சபை வாதாடியது.

ஆனால் உரோமைத் திருச்சபை இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை ஆண்டுதோறும் ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடியது. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்த்தெழுந்ததால் அது "ஆண்டவரின் நாள்" (Day of the Lord) என்று அழைக்கப்பட்டதோடு கிறித்தவர்களின் பாஸ்கா விழாவாகவும் மாறியிருந்தது. நிசான் மாதத்தின் 14ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் அன்று உயிர்த்தெழுதல் விழாக் கொண்டாடப்படும். அவ்வாறு இல்லாவிடின், நிசான் 14ஆம் நாளுக்குப் பின் வருகிற முதல் ஞாயிறு உயிர்த்தெழுதல் ஞாயிறு ஆகும்.

ஆண்டுதோறும் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை நிசான் மாதம் 14ஆம் நாள் கொண்டாடுவதா, அல்லது நிசான் 14ஆம் நாளை அடுத்துவரும் ஞாயிறன்று அவ்விழாவைக் கொண்டாடுவதா என்பது பற்றி அனிசேட்டசுக்கும் பொலிக்கார்ப்புக்கும் இடையே ஒத்த கருத்து உருவாகவில்லை. இருந்தாலும் திருத்தந்தை அனிசேட்டஸ் உரோமைத் திருச்சபையின் வழக்கத்தைக் கீழைச் சபையின்மீது திணிக்க விரும்பவில்லை. எனவே இரு சபைகளும் தம் மரபுக்கு ஏற்ப உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடி வரலாயின.

பிற்காலத்தில் உயிர்த்தெழுதல் விழாவை எந்த நாளில் கொண்டாடுவது என்பது பற்றிய விவாதம் மீண்டும் எழுந்தது.

வரலாற்றாசிரியர் ஹெகேசிப்பஸ் உரோமை வருகை

பண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் ஹெகேசிப்பஸ் (Hegesippus) என்பவரும் திருத்தந்தை அனிசேட்டசைச் சந்திக்க உரோமை சென்றார். உரோமைப் பீடம் தொடக்க காலத்திலிருந்தே முதன்மை பெற்றதற்கு இதுவும் ஒரு அடையாளமாகக் கொள்ளப்படுகிறது.

மொந்தானியக் கொள்கை கண்டிக்கப்படுதல்

திருத்தந்தை அனிசேட்டஸ் மொந்தானியக் கொள்கையைக் கண்டனம் செய்தார். கீழைத் திருச்சபையில் மொந்தானுஸ் (Montanus) என்பவர் கிபி இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் "புதிய இறைவாக்கு இயக்கம்" (New Prophecy) என்றொரு போக்கினைத் தோற்றுவித்தார். தாம் தூய ஆவியால் தூண்டப்பட்டு இறைவாக்கு உரைத்ததாகவும், கடுமையான அறநெறி நடத்தையே கடவுளுக்கு உகந்தது என்றும் அவர் போதித்தார். கிறித்தவக் கொள்கைக்கு எதிராக அவர் போதித்தார் என்று அனிசேட்டஸ் மொந்தானியக் கொள்கையை (Montanism) கண்டனம் செய்தார்.

இறப்பு

திருத்தந்தை அனிசேட்டஸ் உரோமைப் பேரரசன் லூசியஸ் வேருஸ் என்பவரின் ஆட்சியில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டுக் கொல்லப்பட்டார் என்பது மரபு. ஆனால் இதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. ஏப்பிரல் மாதம் 16, 17, 20 ஆகிய நாள்கள் அவரது இறப்பு நாளாகக் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், ஏப்பிரல் 20ஆம் நாள் அவர் இறந்ததாகக் கொண்டு அன்று அவருடைய திருவிழா கொண்டாடப்படுகிறது. பழைய வழக்கப்படி, ஏப்பிரல் 17ஆம் நாள் அவர் திருநாள் கொண்டாடப்பட்டது.


No comments:

Post a Comment