இளைஞரின் உயிர்ப்பு
இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள்.
அப்பொழுது இயேசு, “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
பரிசேயருக்கு பதில்
அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்” என்றார்கள். அவரோ அவர்களிடம், “ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.
இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றி வந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகவே தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.
ஒழுக்க நெறிகள்
தம்மை நாடி வாழ்ந்த மக்களுக்கு இயேசு வழங்கிய அறிவுரைகள் பின்வருமாறு: “‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப் பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.”
“‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். ‘தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.”
அப்பம் பலுகியது
இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார்.
இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள்.
விண்ணக உணவு
மக்கள் கூட்டமாய் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக் கொண்டார்கள்.
இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்” என்றார். அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார்.
யூதேயாவில் பணி
இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.
இயேசு, பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், “நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப் பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.
No comments:
Post a Comment