ஹைஜீனஸ் (Hyginus) என்பவர் உரோமை ஆயரும் கத்தோலிக்க திருச்சபையின் ஒன்பதாம் திருத்தந்தையும் ஆவார். இவர் ஒரு புனிதராகவும் போற்றப்பெறுகிறார். இவர் கிபி 138இலிருந்து 142 அல்லது 149 வரை ஆட்சிசெய்தார் என்று வத்திக்கானில் இருந்து வெளியாகின்ற "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (Annuario Pontificio) என்னும் அதிகாரப்பூர்வ நூலின் 2008ஆம் ஆண்டுப் பதிப்பு கூறுகிறது. உரோமை நகரில் மன்னர் ஹேட்ரியன் என்பவருக்கு நினைவுக் கூடம் (Castel Sant'Angelo) எழுப்பப்பட்ட காலத்தில் இவர் திருத்தந்தையாக இருந்தார்.
ஹைஜீனஸ் (பண்டைக் கிரேக்கம்: ‘Υγινος [Hyginos]; இலத்தீன்: Hyginus) என்னும் பெயர் கிரேக்கத்தில் "நலமானவர்" என்னும் பொருள்தரும்.
வாழ்க்கைக் குறிப்புகள்
திருத்தந்தை ஹைஜீனஸ் கிரேக்க நாட்டில் ஏதென்சு நகரில் பிறந்தார் எனத் தெரிகிறது. இவர் ஒரு மெய்யியல் வல்லுநராக அல்லது மெய்யியல் வல்லுநர் ஒருவரின் மகனாக இருந்தார். "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏட்டின்படி, ஹைஜீனஸ் குருப்பட்டத்தின் படிகளாக "கீழ்நிலைப் படிகள்" (minor orders) என்னும் சடங்குகளை ஏற்படுத்தினார். அதுபோலவே திருத்தொண்டர், துணைத் திருத்தொண்டர் என்னும் பட்டங்களை ஏற்படுத்தி அவற்றைக் குருத்துவப் பட்டத்திலிருந்து வேறுபடுத்தினார்.
இவர் ஆட்சிக்காலத்தில் "ஞானக்கொள்கை" (Gnosticism) என்னும் கோட்பாடு வாலண்டைன் மற்றும் சேர்தோ என்பவர்களால் உரோமையில் பரவியது என்றும் பண்டைக்கால கிறித்தவ அறிஞர் புனித இரனேயு குறிப்பிடுகிறார். சேர்தோ தன் தவற்றை ஏற்று மனம் திரும்பினார் என்றும், பின்னர் மீண்டும் தவறான கொள்கைகளைப் பரப்பியதால் சபை விலக்கம் செய்யப்பட்டார் என்றும் புனித இரனேயு கூறுகிறார். பண்டைய மரபுப்படி, திருத்தந்தை ஹைஜீனஸ் அந்தொனீனோ பீயோ என்னும் மன்னரின் காலத்தில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்நீத்தார். வத்திக்கானில் புனித பேதுருவின் கல்லறை அருகில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
பணிகள்
திருமுழுக்குப் பெறுவோரின் ஆன்ம நலனைக் காக்கும் பொறுப்பை ஆற்றிட ஞானப் பெற்றோர் அச்சடங்கில் கலந்துகொள்வர் என்னும் பழக்கத்தை இவர் தொடங்கி வைத்தார்.
இவருடைய திருநாள் சனவர் 11ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இவர் எழுதியதாகக் கருதப்படும் மூன்று கடிதங்கள் கிடைத்துள்ளன.
No comments:
Post a Comment