இரக்கமற்ற பணியாளர்
மத்தேயு 18:21.35
இராயப்பர் அவரை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு எதிராகக் குற்றஞ் செய்துவந்தால், நான் அவனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறைவரைக்குமா?" என்று கேட்டார்.
அதற்கு இயேசு கூறியதாவது: "ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்.
"ஆகவே விண்ணரசு, தன் ஊழியரிடம் கணக்குக் கேட்க விரும்பிய ஓர் அரசனுக்கு ஒப்பாகும். கணக்குக் கேட்கத் தொடங்கிய பொழுது, அவனிடம் பத்தாயிரம் 'தாலாந்து' கடன்பட்ட ஒருவனைக் கொண்டுவந்தனர். அவன் கடன் தீர்க்க வகையற்றிருந்ததால், அவனையும் அவன் மனைவி மக்களையும் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் விற்றுக் கடனைத் தீர்க்குமாறு தலைவன் கட்டளையிட்டான். அவ்வூழியனோ அவன் காலில் விழுந்து, 'பொறுத்துக்கொள்ளும்; கடன் எல்லாம் தீர்த்துவிடுகிறேன்' என்று வேண்டினான். அவ்வூழியனுடைய தலைவன் மனமிரங்கி அவன் கடனை மன்னித்து அவனை விட்டுவிட்டான்.
அவ்வூழியன் வெளியே சென்றதும், தன் உடனூழியரில் தன்னிடம் நூறு வெள்ளிக்காசு கடன்பட்ட ஒருவனைக் கண்டான். அவனைப் பிடித்துக் கழுத்தை நெரித்து, 'நீ பட்ட கடனைத் தீர்த்துவிடு' என்று கேட்டான். அந்த உடனூழியன், காலில் விழுந்து, 'பொறுத்துக்கொள்ளும்; எல்லாம் தீர்த்துவிடுகிறேன்' என்று அவனை வேண்டினான். அவனோ இணங்கவில்லை. ஆனால், கடனைத் தீர்க்குமட்டும் அவனைச் சிறையில் அடைத்தான்.
அவனுடைய உடனூழியர் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தித் தலைவனிடம் சென்று நடந்ததை யெல்லாம் அறிவித்தனர். அப்போது, அவனுடைய தலைவன் அவனை அழைத்து, 'கெட்ட ஊழியனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் உன் கடனையெல்லாம் மன்னித்தேன். ஆகவே, நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல, நீயும் உன்னுடைய உடனூழியனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?' என்று கேட்டு, சினந்து, கடன் முழுவதும் தீர்க்கும்வரை வதைப்போரிடம் அவனைக் கையளித்தான்.
உங்களுள் ஒவ்வொருவனும் தன் சகோதரனை முழு உள்ளத்தோடு மன்னிக்காவிட்டால், என் வானகத் தந்தையும் அவ்வாறே உங்களுக்குச் செய்வார்."
“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்” என இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பேதுரு இந்தக் கேள்வியைக் கேட்டார்.
“ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். ”
பேதுரு, யூத சட்டங்களின் படி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். பழைய ஏற்பாட்டில், “காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்” என கடவுள் கூறியிருந்தார். ஏழு என்பது பழைய ஏற்பாட்டில் முழுமை எனும் பொருளைக் குறிப்பதாய் இருந்தது.
ஏழு முறை நீர் தெளித்து தொழுநோயால் ஏற்பட்ட தீட்டை அகற்றுவது, ஏழு நாள் கூடாரத்துக்கு வெளியே அமர்ந்து தீட்டைக் கழிப்பது, குரு எண்ணையை ஏழு முறை ஆண்டவர் முன் தெளிப்பது, ஏழு நாள் புளிப்பற்ற அப்பம் உண்பது, ஏழு நாட்கள் கூடார விழா தொடர்வது என எல்லாவற்றிலும் ஏழு என்பது பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த யூத பின்னணியிலிருந்து வந்த பேதுரு மன்னிப்பையும் அந்தச் சட்டத்துக்குள் அடக்கிவிட நினைத்து அந்தக் கேள்வியைக் கேட்கிறார்.
இந்த கேள்வியில் இரண்டு சிந்தனைகள் இருக்கின்றன.
1. தனக்கு எதிராகப் பாவம் செய்து வரும் சகோதரனை மன்னிக்க வேண்டும் எனும் பேதுருவின் மனம்.
2. தன் சகோதரன் பாவம் செய்கிறான் எனும் தொனியில், தான் பாவம் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தும் சுயநீதிச் சிந்தனை.
தனக்கு எதிராய்ப் பாவம் செய்து வரும் சகோதரனை மன்னிப்பது அழகான செயல். ஆனால் தன்னிடம் பாவம் இல்லை, அடுத்த சகோதரன் தான் தனக்கு எதிராகப் பாவம் செய்கிறான் என்று சொல்வது தவறான பார்வை. “நம்மிடம் பாவம் இல்லை என்போமானால், நாம் பொய்யர்கள்” என்கிறது விவிலியம்.
இயேசு இந்த கேள்விக்கு அழகான ஒரு பதிலாக இந்த உவமையைச் சொல்கிறார். இந்த உவமையில் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலாத பணியாளனை அரசன் மன்னிக்கிறார். ஆனால் அந்த பணியாளரோ ஒரு சின்ன தொகைக்காக இன்னொரு பணியாளரை கடுமையாகத் தண்டிக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் மன்னன், மன்னிப்பை வாபஸ் வாங்கிவிட்டு, இரக்கமற்ற பணியாளரைத் தண்டிக்கிறார். “இரக்கமுடையோர் இரக்கம் பெறுவர்” எனும் இயேசுவின் போதனையைப் போல.
உலக பொருளாதார ஒப்பீட்டின் படி அந்த அரசனுக்கு பணியாளன் கொடுக்க வேண்டிய தொகை பத்தாயிரம் தாலந்துகள். இன்றைய மதிப்பில் சுமார் நூறு கோடி ரூபாய் என வைத்துக் கொள்ளலாம். அந்த பணியாளனின் பணியாளன் கொடுக்கவேண்டிய தொகையோ நூறு தெனாரியம். வெறும் 1200 ரூபாய்கள் மட்டுமே. அன்றைய தினக் கூலியின் அடிப்படையில், முதல் மனிதன் தனது கடனை அடைக்க வேண்டுமெனில் 1,50,000 இலட்சம் ஆண்டுகள் உழைக்க வேண்டும். இரண்டாவது நபரோ 4 மாதங்கள் உழைத்தால் போதும். இதுவே அந்த இரண்டு கடன்களுக்கும் இடையேயான ஒப்பீடு.
தன்னுடைய நூறு கோடிரூபாய் கடன்கள் மன்னிக்கப்பட்டது. ஆனால் அந்த மனிதன் ஒரு 1200 ரூபாய் கடனை மன்னிக்க மனம் இல்லாமல் இருக்கிறான்.
இயேசு நமது பாவங்களை மன்னிக்க மனிதனாக மண்ணிற்கு வந்து, பாவமில்லாமல் வாழ்ந்து இறுதியில் தன்னையே பலியாகக் கொடுத்தார். அதன்மூலம் மனிதனின் பாவக் கடன்களை அவர் தீர்த்தார். அந்த அன்பும், அந்த பலியும் மிக உயர்ந்தவை. விலைமதிப்பற்றவை. அந்த அரசன் அளித்த மன்னிப்பு போல. அந்த அரசனிடம் கடன்பட்டவர்கள் நாம். நம்மால் எந்தக் காலத்திலும் தீர்க்கமுடியாத தொகை அது. அந்த தொகையை தனது இரத்தத்தினால் அழித்துவிட்டார் இறைவன்.
நாமோ, நம்மிடம் சக மனிதர்கள் கொண்டிருக்கும் சின்னச் சின்ன கடன்களை மன்னிக்க மனம் இல்லாமல் இருக்கிறோம். இது மிகப்பெரிய பாவம். இதையே இறைவன் இந்த உவமையில் விளக்குகிறார்.
நாம் விண்ணகம் செல்லவேண்டுமெனில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமெனில் நாம் மற்றவர்களை மன்னித்தாக வேண்டும். நாம் பிறரை மன்னிக்காவிடில், இயேசு நம்மை மன்னிப்பதில்லை. நாம் மன்னிக்கப் படாவிடில் விண்ணரசில் நுழைய முடிவதில்லை. இதுவே இந்த உவமை சொல்லும் சேதி.
மூன்று விஷயங்களை சிந்திப்போம்.
1. அரசன் மன்னித்த கடனின் அளவு எவ்வளவு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், நாம் மன்னிக்க வேண்டிய செயல்கள் எவ்வளவு சிறியவை என்பது புரியும். எனவே நமது முதல் தேவை இறைவன் நமக்காக செய்த தியாகங்களை, மன்னிப்பின் விலையை புரிந்து கொள்வது. அந்த மன்னிப்பின் விஸ்வரூபம் தெரியும் போது மற்ற அனைத்துமே சிறியதாகிப் போய்விடும்.
2. அரசனின் அன்பைப் புரிந்து கொள்வோம். அரசன் தன்னிடம் வேண்டிக்கொள்ளும் பணியாளனை மன்னிக்கிறார். அதுவும் மிக மிகப்பெரிய தொகை. அதில் மன்னனுடைய அன்பின் விஸ்வரூபம் தெரிகிறது. அந்த அன்பைப் புரிந்து கொண்டால் தான் அடுத்தவர்களிடம் நாம் அன்பை பகிர முடியும். இரண்டாவது வேலைக்காரன் தன்னிடம் கெஞ்சியவனிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை. “பரவாயில்லை, பிறகு கொடுத்துவிடு” என்று சொல்கின்ற மனித சிந்தனை கூட அவனிடம் எழவில்லை.
3. மன்னிப்பை நிராகரித்தால் முடிவில்லா அழிவு வந்து சேரும் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை. தான் மன்னிப்பை நிராகரித்தால் தன்னுடைய அரசரும் தனது மன்னிப்பை நிராகரிப்பார். தன்னை அழிவில் தள்ளுவார் என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அவனுடைய சுயநலம் அவனுடைய சிந்தனையை அழித்தது. “எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் மன்னிப்பது போல” என போதிக்கக் கற்றுத் தந்தவர் இயேசு. மன்னிப்பை நிராகரித்தால், வாழ்க்கை உங்களை நிராகரிக்கும்.
மன்னிப்பு என்பது சாய்ஸ் அல்ல, அது ஒரு கட்டளை. மீட்பில் நுழைய விரும்பும் அனைவருக்குமான கட்டாயக் கட்டளை அது. மன்னிப்பை நிராகரிக்கும் மனிதர்களுக்கு மீட்பின் பயணத்தில் இடமில்லை. “எழுபது தடவை ஏழுமுறை” என்பது முடிவில்லா மன்னிப்பைப் போதிக்கிறது. நமது வாழ்க்கையில் நம்மை சொற்களாலோ, செயல்களாலோ, பொருளாதாரத்தாலோ காயப்படுத்திய நபர்களை நாம் முழுமையாய் மன்னிக்க வேண்டும்.
மன்னிப்பு இயல்பாக வருவதில்லை. அது இறைவனின் மீதான அன்பினால் மட்டுமே வரமுடியும். தனது கணவர் ஸ்டெயின்ஸையும், இரண்டு பிள்ளைகளையும் எரித்துக் கொன்றவர்களை அவருடைய மனைவியான கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் மன்னித்தார். அதற்குக் காரணம் அவர் இயேசுவின் அன்பை புரிந்து கொண்டது தான்.
நாமும் இயேசுவின் அன்பைப் புரிந்து கொள்வோம். மன்னிப்பை எல்லோருக்கும் வழங்குவோம். நாம் தப்பு செய்யாத சூழல்களிலும் மன்னிப்பை வழங்க தயங்காதிருப்போம்.
கணக்கு பார்த்துக் கொடுப்பது தண்டனை
கணக்கு பார்க்காமலேயே கொடுப்பதே மன்னிப்பு.
மன்னிக்கத் தயங்கும் ஒவ்வொரு கணமும், இயேசு மன்னித்த நமது பாவங்களின் பட்டியலை நினைத்துப் பார்ப்போம். மன்னிக்கும் மனம் நமக்கு வாய்க்கும்.

No comments:
Post a Comment