அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, April 5, 2018

திருப்பலி விளக்கம் -. திருவிருந்து சடங்கு

இ.திருவிருந்து சடங்கு
மூன்றாவதும் இறுதிபகுதியுமாகிய நற்கருணை பிடுதல், அதை உட்கொள்ளுதல். நற்கருணைக் கொண்டாட்டம் ஒருபலி மட்டுமல்ல; பாஸ்கா விருந்துமாகும். ஆண்டவரின் கட்டளைப்படி தக்கமுறையில் தங்களைத் தயாரித்த நம்பிக்கையாளர் அவருடைய உடலையும் இரத்ததையும் ஆன்ம உணவாகப் பெற்றுக் கொள்ளவது அவசியம் (GIRM 80). இத்திருவிருந்து சடங்கில் மூன்று பகுதிகளைக் காணலாம். 1. தயாரிப்பு 2. பகிர்தல் 3. இறுதி நன்றி கூறுதல்.

1. திருவிருந்துக்குத் தயாரிப்பு
இங்கு ஒன்றிப்பு, அமைதி அன்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நற்கருணை உட்கொள்பவர்களிடம் இப்புண்ணியங்கள் சிறப்பிடம் பெற்றிருக்க வேண்டும். எனவே இத்தயாரிப்பு பகுதியில் ஆண்டவர் கற்றுத்தந்த செபம், சமாதான பரிமாற்றம், அப்பத்தைப்பிடுதல் ஆகியவை இடம் பெறுகின்றன.

1.1. ஆண்டவர் கற்றுத்தந்த செபம்
“ஆண்டவர் கற்றுதந்த இறைவேண்டலில் அன்றாட உணவுக்காக மன்றாடுகின்றோம். அது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாக நற்கருணைவுணவைக் குறிக்கும். மேலும் இவ்வேண்டலில் பாவத்திலிருந்து தூய்மை பெறவும் மன்றாடுகிறோம்” (GIRM 81).
‘அன்றாட உணவு’ என்ற சொற்கள் இந்த இறைவேண்டலில் வருவதால்தான் இது நற்கருணையை உட்கொள்ளும் முன் தயாரிப்பு பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டிலிருந்து இந்த இறை வேண்டல் எல்லா வழிபாடுகளிலும் காணப்படுகிறது. இங்கு ‘உணவு’ என்ற சொல் நற்கருணையைக் குறிக்கிறது என்று பல திருஅவையின் தந்தையர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

திருப்பலியில் நற்கருணை வசீகரத்துக்குப் பிறகு இந்த இறைவேண்டலை சொல்லும் பழக்கம் திருத்தூதர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்துள்ளது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன் இந்த இறைவேண்டலை அருள்பணியாளர் மட்டுமே சொல்லி வந்தார். அதன் கடைசியில் வந்த “தீமையிலிருந்து எங்களை மீட்டருளும்” என்ற பகுதியை மட்டும் மக்கள் சொல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது திருப்பலியில்அருள்பணியாளரும் நம்பிக்கையாளர்களும் சேர்ந்து செபிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திருப்பலியில் பொதுவாக மற்ற செபங்களின் முடிவில் ‘ஆமென்’ என்று மக்கள் சொல்லுகின்றனர். ஆனால் “ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலில்” ‘ஆமென்’ சொல்வதில்லை. இதற்கு என்ன காரணம்? மற்ற செபங்களில், எடுத்துக்காட்டாக ‘திருக்குழும மன்றாட்டு’, ‘காணிக்கை மீது மன்றாட்டு’, ‘திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு’, இறுதிபுகழுரை போன்றவைகளில், அருள்பணியாளர் வழிபாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களின் பெயரால் அவற்றைச் செபிக்கிறார். இறைமக்கள் எல்லாரும் சேர்ந்து ‘ஆமென்’ (அப்படியே ஆகட்டும்) என்று சொல்லி அவற்றைத் தங்கள் செபமாக மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு எல்லாரும் சேர்ந்து சொல்வதால் ‘ஆமென்’ சொல்ல தேவையில்லை.

முன்னுரைகளும் பின்னுரைகளும்
ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டலை சொல்ல அல்லது பாட அருள்பணியாளர் மக்களை அழைக்கிறார். பொதுவாக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்ட அழைப்பு “ மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைபடிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்” என்பது. இதற்கொத்த முன்னுரையை பிசாந்தின் (Byzantine) திருஅவையில் காணலாம். “ஆண்டவரே, நாங்கள் முழுமனவுறுதியோடு, எவ்வகைத் தண்டணைத் தீர்ப்புக்கும் உள்ளாகாமல், விண்ணின் இறைவனாம் உம்மைத் தந்தாய் என்று அழைத்துச் சொல்லத் துணிகிறோம்”. இதிலிருந்து நமது பாடம் விளக்கம் பெறுகிறது. இரண்டாம் வத்திகான் சங்கத்திற்குப் பின் ஆயர்களின் இசைவு பெற்ற வேறுமுன்னுரை பாடங்களும் திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டவர் கற்றுத்தந்த இறை வேண்டலுக்குப் பின்னுரையாக “ஆண்டவரே தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து.....” என்று தொடங்கும் செபத்தை அருள்பணியாளர் சொல்லுகிறார். இதன் முடிவில் நம்பிக்கையாளர்கள் “ஏனெனில் ஆட்சியும் ஆற்றலும் மாட்சியும் என்றென்றும் உமதே” என்று பதில் சொல்லுகிறார்கள். இது ஒரு வாழ்த்தொலியாக அமைகிறது.

இந்த செபம் ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலின் பிற்பகுதியை விரிவுப்படுத்துகிறது. இத்தகைய பழக்கம் தொடக்கத்திலிருந்து வருகிறது. இந்த செபம் ‘எம்போலிஸம்’(Embolism) என்று அழைக்கப்படுகிறது. ‘திருத்தூதர்களின் போதனை’(Didache) என்ற முதல் நூற்றாண்டு நூலில் ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலை இதே இறை புகழ்ச்சியோடு முடித்திருப்பது, இன்று இது திருப்பலியில் இடம் பெற்றிருப்பதற்கு ஒரு காரணமாகக் கொள்ளப்படலாம்.

1.2. சமாதானம் பரிமாற்றம்
இதன்பின் அருபணியாளர் சமாதனத்திற்காக செபிக்கிறார். அதாவது, திருஅவைக்கு அமைதியையும் ஒற்றுமையையும் தரவேண்டுமென்று மன்றாடுகிறார். இதன் பின்னணி யோவா 14:27; லூக் 24:36; யோவா 20:19; 21:26 ஆகிய பகுதிகள் ஆகும்.

இதன்பின் உறவின் வாழ்த்தை அறிவித்து, சமாதனத்தைப் பகிர்ந்துக் கொள்ள இறைமக்களை அருள்பணியாளர் அழைக்கிறார். ஏனெனில் தம் சகோதர சகோதரிகளோடு சமாதானம் செய்துக்கொள்ளாமல் ஒருவர் நற்கருணை விருந்தில் பங்கேற்பது தவறானது மட்டுமல்ல, பொருளற்றதும் ஆகும் (காண். மத் 5:24). சமாதானத்தைப் பகிர்ந்து கொள்ளும் இச்சடங்கு மிகப் பழமையானது. கி.பி.4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “திருத்தூது அமைப்பு விதித்தொகுப்பு” (Apostolic Constitution) என்ற நூலில் இச்சடங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆயர் சமாதானம் வாழ்த்துக் கூற, ஒருவருக்கொருவர் சமாதான அடையாளத்தை அளித்துக்கொள்ள திருத்தொண்டர் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து, ஆயரும் அருள்பணியாளர்களும், திருத்தொண்டர்களும் மக்களும் ஒருவருக்கொருவர் சமாதானத்தை பகிர்ந்துக் கொண்டனர்.

இன்று இந்த சமாதானம் பகிர்ந்தலின் பொருளை மக்கள் சரியாக புரிந்துக் கொள்ளாததால் இதுவெறும் சடங்கு ஆசாரமாக மாறிவிட்டது. அதனால் தங்கள் அருகில் ஆள் இருக்கிறார்களா என்று கூட அறியாமல், மக்கள் வலது புறமும் இடது புறமும் தலை வணங்குவதைப் பார்க்கிறோம். இது பொருளற்ற ஒரு செயல். இக்குறைபாடு பற்றி மக்களுக்கு அருள்பணியாளர் அடிக்கடி எடுத்துரைக்க வேண்டும்

1.3. அப்பம் பிடுதலும், உலகின் பாவம் என்ற மன்றாட்டும்
முற்காலத்தில் மக்கள் திருப்பலிக்குப் பெரிய அப்பங்களைக் கொண்டு வந்தனர். எனவே அந்த அப்பங்களை உனடக்க வேண்டியிருந்தது. இதற்கு அதிக நேரமும் தேவைப்பட்டது அப்பங்களை உடைத்து முடிக்கும்வரை ‘உலகின் பாவம் போக்கும்’ என்ற செபம் தொடர்ந்து சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது அப்பங்கள் சிறிய அளவில் தயார் செய்யப்படுவதால் அவற்றை உடைக்கும் தேவையில்லை. அருள்பணியாளர் தனக்கு பயன்படுத்தும் பெரிய அப்பத்தை மட்டும் பிடுகிறார். எனவே “உலகின் பாவம் போக்கும் ” என்ற செபம் மும்முறை மட்டும் சொல்லப்படுகிறது. “உலகின் பாவங்களைப் போக்கும் ” என்ற செபம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை செர்ஜ் (Sergius)அவரால் திருப்பலியில் அறிமுகப் படுத்தப்பட்டது. இச்செபத்தின் இறுதியில் வரும் வரும் “எங்கள் மேல் இரக்கமாயிரும்” என்பது கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை மும்முறை சொல்லப்பட்டது. கி.பி.11ஆம் நூற்றாண்டு முதல் இச்செபம் மூன்றாவது முறை சொல்லப்பட்டபோது “எங்களுக்குச் சமாதானத்தை அருளும்” என்று மாற்றிச் சொல்லும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. எனவே இந்த செபம் சொல்லப்படும்போது தான் அருள்பணியாளர் பெரிய அப்பத்தை பிட்க வேண்டும். வசீகர சமயம் “அப்பத்தை எடுத்து, ஆசிவழங்கி பிட்டு” என்று சொல்லப்படும் போது அப்பத்தைப் பிடக் கூடாது. இது தவறு.
அப்பத்தைப் பிட்ட பிறகு ஒரு சிறு துண்டு இரசக்கிண்ணத்தில் போடப்படுகிறது. இது “கொம்மிக்ஸியோ” (Commixo Commingling) என அழைக்கப்படுகிறது. இது மிகப் பழமையான ஒரு பழக்கமாகும். இது உரோமை ஆயராம் திருத்தந்தைக்கும் மற்ற தல திருஅவைகளுக்கும் இடையேயுள்ள “ஒன்றிப்பின் அடையாளம்” . இருப்பினும் இச்சடங்கின் உட்பொருள் யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இங்கு ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். உலகின் பாவமா, பாவங்களா? என்பதுதான் அது.
நற்செய்தியின் மூலமொழியாகிய கிரேக்கத்திலும், இலத்தீன் மற்ற மொழி பெயர்ப்புகளிலும் தமிழிலும் (யோவா 1:29) ‘பாவம்’ என்று ஒருமையில் உள்ளது. ஆனால் திருப்பலி நூலில் இலத்தீனில் ‘பெக்காத்தா முந்தி’ (Peccata Mundi) என்று உள்ளது. இருமுறை ‘எம்மேல்’,‘எமக்கு’ என்று இருப்பது ஒருமையைக் குறிக்கிறது. பாடுவதற்கு ‘பெக்காத்தும் முந்தி’ (Peccatum Mundi) என்பது எளிதல்ல என்பதால் “பாவங்கள்” என்று பன்மைக்கு மாற்றப்பட்டது என சில அறிஞர் கூறுவர். ஆனால் பொருளைக் கருதினோமாயின் ஒருமையே மிகச் சிறந்தது என்று தோன்றுகிறது. ‘பாவங்கள்’ என்பது எண்ணப்பட்ட ஒரு தொகுப்பைச் சுட்டுகிறது. மாறாக ஒருமையில் ‘பாவம்’ என்பது உலகின் பாவநிலையைக் குறிப்பதாகும். நமது ஆண்டவர் உலகைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்தார்.


2. நற்கருணை விருந்து
நற்கருணை விருந்தில் பின்வரும் பகுதிகள் இடம் பெறுகின்றன:
1. அருள்பணியாளர் தம்மை தயாரிக்கும் செபம்.
2.. நம்பிக்கையாளர்களுக்கு நற்கருணையைக்காட்டி அவர்களை திருவிருந்துக்கு அழைத்தல்.
3. திருவிருந்து பாடல்.
4. நற்கருணையை உட்கொள்ளுதலும் வழங்குதலும்.

2.1. அருள்பணியாளர் தம்மைத் தயாரிக்கும் செபம்
அருள்பணியாளர் நற்கருணையை உட்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள இரு செபங்களில் ஒன்றைச் சொல்லி தம்மைத் தயாரிக்கிறார். அவர் சொல்லும் செபமாவது:
“ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் உம் உடலும் இரத்தமும் என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டணைக்கு உள்ளாக்காமல் உமது இரக்கத்தினால் என் உள்ளத்துக்கும் உடலுக்கும் பாதுகாப்பாகவும் நலம் அளிக்கும் அருமருந்தாகவும் இருப்பதாக.”

2.2. திருவிருந்துக்கு அழைப்பு
அருள்பணியாளர் நற்கருணை அப்பத்தை திருத்தட்டின் மேல் அல்லது திருக்கிண்ணத்தில் மேல் பிடித்துக் கொண்டு நம்பிக்கையாளர்களுக்குக் காண்பித்து அவர்களைக் கிறிஸ்துவின் திருவிருந்தில் பங்கு கொள்ள பின்வரும் வார்த்தைகளில் அழைக்கிறார். “இதோ, இறைவனின் செம்மறி, இதோ உலகின் பாவங்களைப் போக்குகிறவர்; செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.” பழைய ஏற்பாட்டு பாஸ்காவில் உண்ணப்பட்டது ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டி. ஆனால் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவே உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறி ஆடு ஆகிறார். எனவேதான் இவ்விருந்து “செம்மறியின் விருந்து” என்று அழைக்கிறோம்.

அருள்பணியாளரின் அழைப்பிற்குப் பதிலாக நம்பிக்கையாளர் “ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலமடையும்” எனச் சொல்கின்றனர். இங்கு ஒரு கேள்வி எழுப்பலாம் எனத் தோன்றுகிறது. திருப்பலியின் தொடக்கத்தில் மனத்துயர் செபம் “எல்லாம் வல்ல இறைவனிடமும்.....”என்று சொல்லப்பட்டபின், ஏன் மறுபடியும் அது போன்ற ஒரு செபத்தைச் சொல்ல வேண்டும்? வரலாற்றை சற்று நோக்கினால் விடை கிடைக்கும். அதாவது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மக்களிடையே நற்கருணை உட்கொள்ளும் பழக்கம் மிகமிக அரிதாகியது. நோயாளிகள் மட்டுமே நற்கருணையை உட்கொள்ளும் பழக்கம் வழக்கில் இருந்தது. எனவே இச்சடங்கில் நோயாளிகளை நற்கருணை உட்கொள்ள ஆயத்தம் செய்யும் வகையில் இச்செபம் சொல்லப்பட்டது. இதுவே பிற்காலத்தில் நற்கருணையை உட்கொள்ள அனைவரையும் தயார் செய்யும் ஒரு செபமாக திருப்பலியிலும் அறிமுகப் படுத்தப்பட்டது. ஏற்கனவே நம்பிக்கையாளர் மனத்துயர் சடங்கில் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டிருந்தாலும் நற்கருணையை உட்கொள்ளும் மீண்டும் ஒருமுறை கேட்பதில் தவறில்லை.

2.3. திருவிருந்து பாடல்
அருள்பணியாளர் நற்கருணையை உட்கொள்ளும் போது திருவிருந்துப் பாடல் தொடங்கும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்பவரின் ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது; உள்ளத்து மகிழ்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றது; நற்கருணை உட்கொள்வதற்காகப் பவனியாகச் செல்பவரின் குழும இயல்பையும் தெளிவாகக் காட்டுகின்றது. நம்பிக்கையாளர்களுக்கு நற்கருணை வழங்கப்படும் போது பாடல் தொடரும் (GIRM 86). இந்த பாடலை எங்கிருந்து தேர்வு செய்வது? இது உரோமை படிகீத ஏட்டிலிருந்து எடுக்கப்படலாம். அதில் பல்லவியும் அதற்குரிய திருப்பாடலும் இருக்கும். அல்லது ஆயர் பேரவையால் அங்கிகரிக்கப்பட்ட பாடல் நூலிலிருந்து ஒரு பாடலைப் பாடலாம். ஆனால் இப்பாடல் நற்கருணையின் பொருளையும் அதுக்குறித்துக் காட்டும் உண்மையையும் கொண்டதாக அமைய வேண்டும். நற்கருணையோடு எந்த முறையிலும் தொடர்பற்ற, வெறும் சமூக, விடுதலை சிந்தனையுடைய பாடல்கள் இங்கு ஏற்புடையவை அன்று. இத்தகைய பாடல் எல்லாராலும் சுலபமாகப் புரிந்துக் கொள்ள கூடியதாகவும் இருக்க வேண்டும்.
திருவிருந்துபாடல் இடபெறவில்லை என்றால் திருப்பலில் நூலில் உள்ள பல்லவியை வாசிக்க வேண்டும். இது நம்பிக்கையாளர்களாலும், அல்லது அவர்களில் ஒருவராலும் வாசிக்கப்படலாம். யாரும் இதைச் செய்யாவிட்டால் அருள்பணியாளரே தான் நற்கருணையை உட்கொண்டபின், மக்களுக்கு நற்கருணை வழங்கும் முன் வாசிக்க வேண்டும்.

2.4. நற்கருணை வழங்குதல்
அருள்பணியாளர் நற்கருணையை உட்கொண்டபின் பீடபணியாளர்களுக்கும், நம்பிக்கை யாளர்களுக்கும் நற்கருணையை வழங்குவார். அவ்வாறு வழங்கும் போது, நற்கருணைத் துண்டை கையில் எடுத்துக் காட்டி “கிறிஸ்துவின் திருவுடல்” என்று நம்பிக்கையாள் கேட்கக் கூடிய அளவில் சப்தமாகச் சொல்வார். நம்பிக்கையாளரோ அதே தொனியில் “ஆமென்” என்று சொல்லி விட்டு நாக்கை நீட்டி நற்கருணையை வாங்குவார் இந்த ஆமனுக்கு ‘ஆம், நான் கிறிஸ்துவின் உடல் என்று நம்புகிறேன்’ என்று பொருள்.

அதே திருப்பலியில் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தை அருள்பணியாளர் உட்கொள்வது மிக அவசியமானது. அப்பொழுதுதான் அவர் ஒப்புக்கொடுத்த திருப்பலியை நிறைவு செய்கிறார். அதேபோல் அவர் அப்ப இரசகுணங்களில் நற்கருணை உட்கொள்ள வேண்டும். சில நேரங்களில் சில அருள்பணியாளர் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தை மட்டும் உட்கொண்டு நற்கருணையை மக்களுக்கு வழங்கச் செல்வதைப் பார்க்கிறோம். இது சரியல்ல.

கூடிய வரையில் நம்பிக்கையாளர்களுக்கும் அதே திருப்பலியில் வசீகரம் செய்ய அப்பங்களை வழங்குவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

அடுத்து யார் யார் நற்கருணையை வழங்கலாம்? கைகளில் நற்கருணையை வாங்கலாமா? அப்படியானால் அதை எப்படி வாங்கி உட்கொள்வது? போன்ற கேள்விகள் எழுகின்றன.

சாதாரணமாக திருப்பலியை நிறைவேற்றும் அருள்பணியாளரும், மற்ற அருள்பணியாளர்களும், திருத்தொண்டரும்(களும்) திவ்விய நற்கருணையை மக்களுக்கு வழங்குவார்கள். மற்ற அருள்பணியாளர் களோ, திருத்தொண்டரோ இல்லாதபோது இதற்காக நியமிக்கப்பட்ட அருள்சகோதரிகளும், இருபால் பொது நிலையினரும் நற்கருணையை மக்களுக்கு வழங்கலாம். இவர்கள் (அசாதாரன) சிறப்பு பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர் (Extra - Ordinary Ministers of Holy Communion). மறைமாவட்ட ஆயர் மட்டுமே (பங்கு பணியாளர் அல்ல) ஒரு குறிப்பிட்ட தருணத்திற்குத் தனித்தனியாக இவர்களுக்கு அங்கிகாரம் கொடுப்பார். அவசியமானபோது நிரந்தரமாகவும் நற்கருணை வழங்க அனுமதிக்கலாம். ஆனால் இவர்களைத் தேர்வு செய்து பங்கு அருள்பணியாளர் இவர்களின் பெயருடைய பட்டியலை ஆயரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் திருப்பலியில் மட்டுமல்ல, நோயாளிகளுக்கும் நற்கருணையை எடுத்துச் சென்று வழங்கலாம். ஆனால் இவர்களைத் தேர்வு செய்து அனுமதிக்க சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். அவையாவன :

1. வேறு அருள்பணியாளரோ, திருத்தொண்டரோ, பீடத்துணைவரோ (ழிஉலியிதீமிe) இல்லாத சூழ்நிலை,
2. இவர்கள் மற்றொரு மேய்ப்பு பணியின் காரணத்தால் அல்ல உடல் நலக்குறைவு காரணத்தினால் திருப்பலி
யில் நற்கருணை வழங்க முடியாத நிலை.
3. நற்கருணையை உட்கொள்வோரின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால் திருப்பலியை நிறைவேற்றும்
அருள்பணியாளர் நற்கருணை வழங்கினால் நீண்ட நேரம் கெடுக்கும் என்ற நிலை.
சில சமயங்களில் மறைமாவட்ட ஆயர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டும் நற்கருணை வழங்க மற்றவர்களைத் தேர்வு செய்து அனுமதி வழங்கும் அதிகாரத்தைத் தனிப்பட்ட அருள்பணியாளருக்கு வழங்கலாம். மற்றவர்கள் நற்கருணையை வழங்க அனுமதியளிக்கும் போது பின்வரும் வரிசைக் கிரமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வாசகர் (Lector), பெரிய குருமட மாணவர், ஆண்பால் துறவி, பெண்பால் துறவி, வேதியர், இருபால் பொது நிலையினர். மறைமாவட்ட ஆயர் சூழ்நிலைக்கேற்ப இந்த வரிசைக் கிரமத்தை மாற்றலாம்.

இவ்வாறு நற்கருணை வழங்கும் அசாதாரண பணியாளர்களுக்குத் தகுந்த பயிற்சியும், நற்கருணை பற்றிய அறிவுரையும் வழங்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட விதிவிலக்கு நம்பிக்கையாளர்களுடைய ஆன்ம நலன்களுக்காகவும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காகவும் மட்டுமே வழங்கப்படுகிறது. (காண் Immensae Caritatis ஜனவரி 25, 1973).

இந்த அசாதாரண நற்கருணை பணியாளர் தங்களுக்குத் தாங்களே நற்கருணையை வழங்கக் கூடாது. அருள்பணியாளரிடமிருந்து நற்கருணையை வாங்கி உட்கொள்ள வேண்டும்.

உரோமை திருவழிபாட்டு பேராலயத்தினால் அனுமதிக்கப்பட்ட மறைமாவட்டங்களில் நம்பிக்கையாளர் கைகளில் நற்கருணையை வாங்கி உட்கொள்ளலாம். அவர் தமது வலது கையால் தாங்கி பிடிக்கப்பட்டுள்ள தமது இடது கையின் மேல் நற்கருணையை வாங்க வேண்டும். பிறகு தமக்கு அடுத்து வருகிறவருக்கு இடம் கொடுத்து சற்று விலகி அங்கேயே தமது வலது கையால் எடுத்து உட்கொள்ள வேண்டும். எக்காரணத்திற்கும் நற்கருணையை தம் அமரும் இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது.

நற்கருணையை நாக்கில் வாங்கும்போது ஒருவர் நின்று கொண்டோ முழங்காலிலிருந்தோ வாங்கலாம். நின்று கொண்டு வாங்குவோர் அதற்குமுன் தலைவணங்கி வாங்க வேண்டும். முழங்காலில் இருந்துக்கொண்டு நாக்கில் நற்கருணை வாங்குவோர் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் முழங்காலில் இருப்பதே வணக்கத்தின் அடையாள மாகிறது.

2.5. திருவிருந்துக்குப் பின் அமைதி
மக்கள் அனைவரும் நற்கருணை உட்கொண்ட பின் திருபாத்திரங்களை அருள்பணியாளரோ, திருத்தொண்டரோ சுத்தம் செய்யும் போது, திருவிருந்து பாடல், நிறுத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மக்கள் அமைதியான முறையில் தங்கள் உள்ளத்தில் உரையாடுவர். இந்த அமைதி, வழிபாட்டைத் தன்மயமாக்க அவசியம்.

3. இறுதி நன்றி கூறுதல்
திருவிருந்து பாடலையும், அதன் முடிவில் இடம் பெறும் அமைதியான தனிச் செபத்தையும் தொடர்வது
‘திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு.’ இந்த மன்றாட்டை ‘மன்றாடுவோமாக’ என்று அருள்பணியாளர் கூறிவிட்டு தந்தையாகிய இறைவனுக்கு நன்றி கூறிச் செபிக்கிறார். அதாவது வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் கிறிஸ்துவின் திரு உடலுக்கும், திரு இரத்தத்திற்கும் நன்றி கூறி செபிக்கிறார். மேலும் திருப்பலிக்காகவும், அதன் வழியாகக் கிடைக்கும் அருள் அடையாளக் கொடைகளுக்காகவும் நன்றி கூறுகின்றார். இதன் பயனாகக் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவருக்குச் சான்று பகர்ந்து வாழத் தேவையான வரங்களுக்காகவும் செபிக்கிறார். இதன் முடிவில் மக்கள் ‘ஆமென்’ என்று சொல்லி நன்றி மன்றாட்டை நிறைவு செய்கின்றனர்.




No comments:

Post a Comment