திருமண அழைப்பு
மத்தேயு 22 : 1, 14
இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது:
“விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.
அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார்.
அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.
அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”
விளக்கம்
இயேசு சொன்ன உவமைகளில் இந்த உவமை மிகவும் பிரபலம். யூதர்களைப் பொறுத்தவரை திருமண விழா என்பது மிகப்பிரபலம். ரொம்பவே கொண்டாட்டமாக இருக்கும். ஒருவார காலம் உண்டும் குடித்தும் இந்த விழாவை அவர்கள் கொண்டாடுவார்கள்.
சாதாரண யூத மக்கள் ஏற்பாடு செய்யும் திருமண விழாவே இப்படி இருக்குமெனில், ஒரு அரசன் வைக்கும் திருமண விருந்து எப்படி இருக்கும்? அப்படித் தான் விண்ணகம் இருக்கும் என்கிறார் இயேசு. விண்ணக வாழ்வு என்பது மகிழ்ச்சியுடன் எதிர் நோக்க வேண்டிய ஒன்று என்பதே இயேசு வலியுறுத்த விரும்பும் முதல் செய்தி.
இந்த உவமையில் விருந்தை ஏற்பாடு செய்யும் தந்தை, நமது பரலோக பிதா!
திருமணம் இறைமகன் இயேசுவுக்கு என்பது ஒப்பீடு.
முதலில் அழைக்கப்பட்டவர் யூதமக்கள். முதலில் அழைக்கப்பட்ட யூதர்கள் அந்த அழைப்பை நிராகரிக்க, பின்னர் அந்த அழைப்பு மற்றவர்களுக்கு விடுக்கப்பட்டது.
“அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்கிறது யோவான் 1 : 11.
அழைக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கின்றனர். ஏற்றுக் கொண்டவன் திருமண ஆடை அணியாமல் வருகிறான், என இரண்டு பாகங்களுடன் இந்த உவமை விரிகிறது.
இந்த உவமை நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.
1. விண்ணக வாழ்வு என்பது ஆனந்தமான வாழ்வு. ஒரு விருந்துக்கு செல்ல எப்படி ஆர்வமாய் இருப்போமோ அந்த அளவுக்கு ஆர்வத்தை விண்ணக வாழ்வுக்குக் காட்ட வேண்டும். அரசன் வைக்கின்ற விருந்து என்பது விருந்துகளில் மிகவும் உன்னதமானது. இப்படி ஒரு உணவை சாப்பிட்டதேயில்லை என வியக்க வைக்கும் விருந்து. அப்படிப்பட்ட விருந்துடன் இயேசு விண்ணக வாழ்க்கையை ஒப்பிடுகிறார்.
2. தந்தையாம் இறைவனின் அன்பு இந்த உவமையில் அழகாக வெளிப்படுகிறது. தனது விருந்துக்கான அழைப்பை முதலில் விடுகிறார். பின்னர் பணியாளர்களை அனுப்பி அழைக்கப்பட்டவர்களை அழைத்துவரச் சொல்கிறார். அழைப்பை அனுப்பியதுடன் நின்று விடவில்லை, அவர்களை நினைவூட்டு, அழைத்துவரவும் விரும்புகிறார். அவர்கள் நிராகரித்ததும் விட்டு விடவில்லை. விருந்து எப்படிப்பட்டது என்பதை விளக்கிச் சொல்ல மேலும் பணியாளர்களை அனுப்புகிறார். அவர்கள் சற்று உயர் அதிகாரிகளாக இருந்திருக்க வேண்டும். எப்படியாவது மக்களை விண்ணக வாழ்வுக்குள் அழைத்து வரவேண்டும் எனும் தந்தையின் அன்பு இதில் புலப்படுகிறது.
3. அழைக்கப்பட்டவர்கள் ஏற்கனவே தாங்கள் நல்ல நிலமையில் இருப்பதாகவும், தங்களுக்கு விருந்து தேவையில்லை எனவும் நினைத்திருப்பார்கள். தாங்கள் சாப்பிடுவதை விடப் பெரிய விருந்து எங்கும் கிடைக்காது எனும் மனநிலையில் இருந்திருக்கலாம். சுருக்கமாக, இறைவனின் அழைப்பை விட அழகான வாழ்க்கை தனக்கு அமைந்திருக்கிறது என இறுமாந்திருந்த கூட்டம் எனலாம்.
4. அல்லது அவர்கள் அழைப்பை நம்பாதவர்களாக இருக்கலாம். “அரசனின் விருந்தையோ, அரசனின் விருந்து நன்றாக இருக்கும் என்பதையோ, தன்னை அரசர் அழைக்கிறார் என்பதையோ” நம்பாத மக்களாய் இருக்கலாம். அதனால் தான், “சும்மா ஜோக்கடிக்காதப்பா…” என அவர்கள் தங்களுடைய வேலையைப் பார்க்கப் போயிருக்கலாம்.
5. தங்களுடைய உலக வாழ்க்கையும், அதன் வேலைகளுமே முக்கியம் வாய்ந்தவை. விண்ணகம் எல்லாம் தேவையற்ற இரண்டாம் விஷயம் எனும் சிந்தனை அவர்கள் மனதில் இருந்தது. எனவே தான் அழைப்பு மீண்டும் மீண்டும் வந்தாலும் அவரவர் வேலைகளையே அவரவர் செய்தனர். வயலுக்குப் போவதோ, கடைக்குப் போவதோ அவர்களுக்கு திருமண விருந்தை விட முக்கியமானதாய் இருந்தது. உலக கவலைகளில் உழல்பவர்களால் விண்ணக வாழ்வை சுவைக்க முடிவதில்லை.
6. அவர்கள் அத்துடன் நிற்கவில்லை. அழைக்க வந்தவர்களை அழிக்க நினைத்தார்கள். நற்செய்தி கொண்டு வந்த தூதுவர்களை அவர்கள் வன்முறையினால் எதிர்கொண்டு கொலை செய்தார்கள். அவர்களை இழிவுபடுத்தி கொன்றனர். இப்போது தந்தையின் கோபம் அவர்கள் மீது திரும்பியது. அழைப்பு என்பது கட்டாய அழைப்பாய் இருக்கவில்லை, அன்பின் அழைப்பாய் இருந்தது. ஆனால் அழைப்பை நிராகரித்தபோது கூட கடவுள் அமைதிகாத்தார். ஆனால் அழைக்க வந்தவர்களை கொன்றபோதோ, கடவுளின் சினம் சீறியது. ‘கொலையாளர்களை’ கொன்றொழித்தார் என்கிறது வசனம். கடவுளின் பொறுமையை தப்புக்கணக்கு போடக்கூடாது, நற்செய்தி அறிவிப்பவர்கள் மீது வன்முறை கூடாது எனும் எச்சரிக்கையே இது.
7. தனது விருந்தை வீணாக்க இறைவன் விரும்புவதில்லை. எனவே நல்லவர், தீயவர் பாகுபாடின்றி வீதியில் இருக்கும் எல்லோரும் அழைக்கப்படுகின்றனர். விருந்து மண்டபம் நிறையும் வரை தந்தை பொறுமையும் காக்கிறார். அழைப்பு யாருக்கு வேண்டுமானாலும், எந்த நிலையில் வேண்டுமானாலும் வரலாம். நாம் அழைக்கப்பட்டவுடன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இதன் பாடம். அழைப்பு பெறாமல் விருந்து அறையில் நுழைய முடியாது என்பதும் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு பாடம்.
8. தனது விருந்துக்கு வந்திருப்பவர்களைப் பார்க்க அரசன் இறங்கி வருகின்ற நிகழ்வு அவர் தனது மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு அழகிய நிகழ்வு. அவரது ஆழமான அன்பை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. அங்கே ஒவ்வொருவராய் அவர் பார்க்கிறார். ஒவ்வொருவரையும் தனித்தனியே நேசிக்கும், வரவேற்கும் அவருடைய அன்பின் விஸ்வரூபம் இதன் மூலம் வெளிப்படுகிறது.
9. திருமண ஆடை அணியாத ஒருவரை அரசன் பார்க்கிறார். அழைக்கப்பட்டவர்கள் அழைப்பை நிராகரித்ததால், சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுக் கிடந்த மக்களை இறைவன் அழைக்கிறார். ஆனால் அழைப்பு மட்டுமே அவர்களை விருந்துக்கு உரியவர்கள் ஆக்குவதில்லை. விருந்துக்கு ஏற்ற உடை அணிய வேண்டும். அந்த உடை இறைவன் அருளும் இரட்சிப்பு, அதாவது மீட்பு. இறைமகன் இயேசுவை நம்பி, அவரிடம் சரணடைந்து, தனது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு தனது வாழ்க்கையை இறைவனுக்காக மாற்றியமைப்பது. அப்படிப்பட்ட சரணடைதல் இல்லாமல் எனது சுய நீதியும், எனது செயல்களும் போதும் என நினைப்பவர்கள் திருமண ஆடையை புறக்கணித்து தனது ஆடையை அணிந்து வருபவர்கள். இத்தகைய மக்கள் விருந்தைச் சுவைக்க இறைவன் அனுமதிப்பதில்லை. இறைவன் தரும் ஆடையை நிராகரிப்பது இறைவனையே நிராகரிப்பதற்குச் சமம். அவர்கள் வெறுமனே விரட்டப்படுவதில்லை, அவர்களுக்கு நரகமே தண்டனையாக வழங்கப்படுகிறது. இறைவனின் விண்ணக வாழ்க்கை வேண்டும், ஆனால் நான் மாறமாட்டேன் எனும் மனநிலை இரட்டை ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.
10. அழைக்கப்பட்டவர் பலர், தேர்ந்து கொள்ளப்பட்டவர் சிலர். இயேசுவின் போதனைகளைக் கேட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். ஆனால் இயேசுவால் தேர்ந்து கொள்ளப்பட்ட அப்போஸ்தலர்கள் பன்னிருவர் மட்டுமே இருந்தார்கள். தாங்கள் செய்கின்ற பணியையும், தனது உலக செல்வங்களையும் சட்டென விட்டு விட்டு அழைப்பை ஏற்றுக் கொள்பவர்களையே இயேசு தேர்ந்தெடுக்கிறார். விருந்துக்கு அழைக்கப்பட்ட மக்கள் கடைசியில் விருந்தை சுவைக்கவில்லை. விருந்து கிடைக்காது என புறக்கணிப்பு நிலையில் இருந்த பிற மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. இறைவனின் அழைப்பை ஏற்று, அவர் அளிக்கும் மீட்பின் ஆடையை அணிந்து வருபவர்கள் இங்கே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் எனும் உயரிய நிலையைப் பெறுகின்றனர். “விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.( ஏசாயா 61:10) என்கிறது விவிலியம். ஆடை என்பது இறைவனின் மீட்பு என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.
No comments:
Post a Comment