அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

திருப்பலியின் உட்கூறுகள்

† திருப்பலியின் உட்கூறுகள் †


†திருப்பலி கடவுளும், மனிதரும் இணைந்து நடத்தும் கூட்டுச் செயற்பாடு †

திருப்பலியில் ஆழமான முறையில் பங்கேற்க வேண்டுமெனில், அதைப்பற்றி நாம் ஆழமாக கற்க வேண்டும். எனவே இந்த பதிவின் ஊடக எம் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவின் சீடர்களாக உருமாற்றம் காண அழைப்பு தருகின்றது. அந்த விதத்தில் எங்களை விசுவாச வாழ்க்கையில், வளப்படுத்தும் திருப்பலி உட்பட திருவழிபாடு பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அர்த்தத்தோடு கற்றிட, பங்கெடுக்க அதன் வழி கிறிஸ்தவ வாழ்வில் ஆழமாக்கப்பட இப்பதிவு துணை நிற்கும் என்று நம்புகின்றேன்.

இன்று திருப்பலிக்குச் சென்று வீடு திரும்பும் பலரிடம் எங்கே போயிட்டு வாறீங்க? என்றால், பூசை பார்த்துவிட்டு வாறோம் என்பார்கள். அதேவேளை பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்று வருபவரை கேட்டால் 'Birthday Party'க்கு போய் வருகிறேன் என்பார்கள். இதிலிருந்து ஒர் உண்மை புலனாகிறது. நாம் இன்னும் திருப்பலி பற்றிய உண்மைகளைப் புரிந்து கொள்ளவில்லை.

திருப்பலி ஒரு பொருள் அல்ல நாம் பார்த்துவிட்டு வர. மாறாக அது ஒரு நிகழ்வு. ஆகவே நாம் பார்க்க போவது இல்லை. மாறாக பங்கேற்க கொண்டாட போகின்றோம். பிறந்த நாள் உற்சவத்துக்கு செல்லும் நாம், ஒரு போதும் பிறந்தநாள் நிகழ்வுக்கு போனோம் என்று சொல்வதை விடுத்து, Birthday Partyக்கு போனோம் என்றே சொல்வது வழமை.

ஆக பல வேளைகளில் நமது திருப்பலி உயிரற்ற ஒன்றாக, இதயம் தொடாத வழிபாடாகவே மாற்றிவிட்டோம். திருப்பலி வெறும் சடங்காக மாறிவிட்டது.

கடவுளை அனுபவிக்க, சுவைக்க வழி சமைத்த அப்பம் பிட்கும் நிகழ்வு, இன்று உயிர்த்த இயேசுவை கண்டுணர முடியாதவாறு திருப்பலியை மழுங்கடித்துவிட்டோம். ஏனென்றால் நாம் நம் இயேசுவின் இலட்சியத்தை ஆழ்ந்த அமைதியிலும், சிந்தனையிலும் நமதாக்க தவறியிருக்கின்றோம்.

திருப்பலி என்பது ஓர் பார்வைப் பொருள் அல்ல. அது வெறும் சடங்கும் அல்ல. இந்த மனநிலையை நம்மில் இருந்து அகற்ற வேண்டும்.

ஒவ்வொரு திருப்பலியும் கடவுளும், மனிதரும் இணைந்து நடத்தும் கூட்டுச் செயற்பாடு என்பதை ஆழ்ந்து உணர வேண்டும்.

'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" (1கொரி 11:24) எதனை தன் நினைவாகச் செய்ய ஆண்டவர் கட்டளை இடுகின்றார்?

அவர் அப்பத்தை பிட்டு, தம் சீடர்களுக்கு கொடுத்து, 'இது என் உடல்" என்றார். பின் திராட்சை இரசம் கொண்ட கிண்ணத்தை எடுத்து 'இது என் இரத்தம்" என்றார். ஆக ஓர் சடங்கை தன் நினைவாக தொடர்ந்து செய்ய கிறிஸ்து கட்டளையிட்டாரா?

குழப்பமாக இருக்கிறதா? தெளிவு வேண்டும். அதற்கு விளக்கம் தேவை. இனிவரும் பதிவுகளில் விளக்கத்தின் ஊடாக தெளிவை ஏற்படுத்த முயற்சிப்பேன்.

திருப்பலி என்பது என்ன? திருப்பலிக்கு கொடுக்கப்படும் பெயர்கள் தான் என்ன? திருப்பலி ஒர் கொண்டாட்டம், திருப்பலி ஒர் விருந்து, திருப்பலி ஒர் நினைவுப்பலி, அப்பம் பிட்குதல், நற்கருணை விருந்து, நன்றி வழிபாடு என்று பல விதமாக அழைக்கலாம்.

இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்து கொண்டாடும் வழிபாடு திருப்பலி. நற்கருணை என்பது கிறிஸ்துவின் தியாக அன்பினை வெளிப்படுத்தும் ஒர் அருள் அடையாளம்.

இந்த நற்கருணை கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும், உச்சியுமாக இருக்கின்றது (திருச்சபை எண் 11) என்கிறது சங்க ஏடு.

இந்த நற்கருணை வெறும் உணவு மாத்திரமல்ல, விருந்தாகவும் தருகின்றார் இயேசு. 'உணவை தனித்து உண்ணலாம்" ஆனால் விருந்தை சேர்ந்துதான் உண்ண வேண்டும்.

எனவேதான் 'நற்கருணை திருச்சபையை உருவாக்குகிறது. திருச்சபை நற்கருணையை உருவாக்குகின்றது" எனச் சொன்னார் மறைந்த திருத்தந்தை 2ம் ஜோன் போல்.

இறைமக்கள் சமூகம் ஒன்று கூடுமிடத்தில் நற்கருணை ஏற்படுத்தப்படுகிறது. அதேபோன்று நற்கருணை எம்மை ஒன்று சேர்க்கின்றது. ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் அர்த்தம் புரிந்து திருப்பலியில் ஈடுபாட்டோடு பங்கேற்கவும் இத்தொடர் உதவும் என நம்புகின்றேன்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நோக்கம் இதுவே. எனவே தான் திருவழிபாட்டு கொள்கைத்திரட்டு (எண் 14) 'இறைமகன் திருவழிபாட்டில் முழுமையாக, உணர்வுப்பூர்வமாக செயலூக்கமான முறையில் பங்கேற்க வழி வகை செய்யப்பட வேண்டும்" என அழைப்புத் தருகின்றது.
† திருப்பலி கருத்துக்களும், பணமும் †

இறைவனுக்கு இறைமக்கள் நாம் செலுத்தும் உன்னத ஆராதனை திருப்பலி என்றால் அது மிகையாகது. இந்ந திருப்பலியின் பலனை நாம் எத்தனை கோடி பணம் கொடுத்தும் வாங்க முடியாது. தன்னையே தாரை வார்த்த தியாகத் தலைவனின் பலி இது. இப்பலிக்கு இவ்வுலகில் எதுவும் நிகராகாது. அத்துணை மாண்புமிக்கது. இத்திருப்பலியை நாம் பல்வேறு கருத்துக்களுக்காக ஒப்புக் கொடுத்து ஜெபிக்கலாம்.

திருச்சபையின் வரலாற்றை நாம் நோக்கும் போது ஏறத்தாழ 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறைமக்கள் திருப்பலிக்காக பணம் செலுத்தத் தொடங்கினார்கள். இதனுடைய நோக்கம் என்னவாக இருந்திருக்கலாம்? உண்மையிலேயே இது குருவானவருக்கு ஒரு வருவாயாகவும், மேலும் திருப்பலியை ஒர் கருத்துக்காக ஒப்புக் கொடுக்க விரும்புகின்றவர், அதற்காக தான் செய்கின்ற ஒர் தியாகச் செயலாகவும் கருதப்பட்டது. இன்று இச்செயலை நாம் எவ்வாறு புரிந்து

கொள்ளலாம். திருச்சபை சட்டத்தொகுப்பு பின்வரும் வினாக்களைத் தருகின்றது. 'தங்களுடைய கருத்துக்களுக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கக் காணிக்கை அளிக்கும் கிறிஸ்தவ விசுவாசிகள் திருச்சபையின் நலனுக்காக உதவுகின்றனர். மேலும் அக்காணிக்கை மூலம் தன் பணியாளர்களையும், அலுவல்களையும் பராமரிப்பதில் திருச்சபைக்குள்ள அக்கறையில் பங்கு பெறுகின்றனர்" (தி.ச. 946) அப்படியானால் காணிக்கை எதுவும் கொடுக்க வசதியற்ற வறியவர் ஒருவரின் கருத்துக்காக திருப்பலி ஒப்புக் கொடுப்பது சாத்தியமா? நிச்சயமாக. 'காணிக்கை எதையும் பெறாமலும், கிறிஸ்தவ விசுவாசிகளின் கருத்துக்களுக்காக, சிறப்பாக வறியவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுமாறு குருக்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது". (தி. ச.945.2)

திருப்பலியினை வாங்கவோ, விற்கவோ முடியாது. ஒரே திருப்பலியில் பல்வேறு கருத்துக்களுக்காக மன்றாட முடியுமா? ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் இறந்தோர்க்காகவும், வாழ்வோர்க்காகவும் மன்றாடுகின்றோம். வாழ்வோரின் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும், கருத்துக்களுக்காகவும் ஒரே திருப்பலியில் மன்றாடுகின்றோம். சிலர் நன்றி சொல்லலாம், சிலர் நற்சுகத்திற்காக மன்றாடலாம், இன்னும் நீதி நிலவ, அமைதிக்காக, நல்ல தொழில் வாய்ப்புக்களுக்காக, மழை பெய்து விளைச்சல் பெருக, குருக்களுக்காக, பொதுநிலையினருக்காக, இறந்தோருக்காக இப்படி பல கருத்துக்களை சேர்த்துக் கொள்ள முடியும். அதேவேளை பல கருத்துக்களை ஒரே திருப்பலியில் குவிக்க வேண்டும் என்பதில்லை. காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, அவை காலத்திற்கு காலம் மாற்றம் காணலாம்.

திருப்பலி என்ன கருத்துக்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படுகின்றதோ அதை திருப்பலியின் முன் சொல்வது வரவேற்கப்படத்தக்கது. நாங்கள் எந்தக் கருத்துக்காக செபிக்க காணிக்கை கொடுத்தோமோ அக்கருத்தை குருவானவர் சொல்லத்தானே வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. அவ்வாறு உங்கள் கருத்து தவறுதலாக சொல்லப்படாமல் இருக்குமிடத்தில் குருக்களோடு முரண்பட தேவையில்லை. நீங்களும் திருப்பலி ஒப்புக் கொடுக்கின்றீர்கள். ஆகவே நீங்கள் உங்களுடைய கருத்துக்களுக்காக செபித்து ஒப்புக் கொடுக்கின்றீர்கள். குருக்கள் மாத்திரம் திருப்பலியை ஒப்புக் கொடுப்பதில்லை. இறைமக்கள் சமூகமே திருப்பலியை ஒப்புக் கொடுக்க, குருவானவர் தலைமையேற்று நடத்துகின்றார். உதாரணமாக தங்களுடைய திருமண ஆண்டு நினைவு நாளில், ஒர் தம்பதியினர் அமைதியாக தாங்கள் இருவரும், எவ்வித ஆரவாரமில்லாமல், திருப்பலியில் கலந்து கொண்டு, ஜெபித்து ஒப்புக் கொடுத்தால், அத்திருப்பலியின் பலனை பெறாமல் இருப்பார்களோ? நிச்சயமாக திருப்பலியின் பலனை எவரும், எதையும் கொண்டு தடுக்கமுடியாது.

மேலும் எனது பெற்றோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்கும் திருப்பலியில் அவர்களுடைய பெயர் வாசிக்கப்பட்டால் எனது மனம் ஆறுதல் அடைகின்றது. அதேநேரம் இரண்டொரு தடவை வாசித்தால் நலம் எனக்கருதி அவ்வாறு தான் நடைமுறை இருக்க வேண்டும் என வாதிடுவது தேவையற்றது. யாது கருத்துக்களையும் குருவானவர் உச்சரித்தால் தான் அவை நிறைவேற்றப்படும் என்ற நியதியும் இல்லை. அவ்வாறு கருதுவதும் தவறு. இன்று ஒர் புதிய நடைமுறையும் நம்மிடையே ஊடறுந்துள்ளது. கருத்துக்களுக்காக காணிக்கை செலுத்தி திருப்பலி ஒப்புக் கொடுக்க விரும்பும் சிலர் அத்திருப்பலியில் பங்கேற்பது இல்லை. இத்தவறான நடைமுறை களையப்படவேண்டும்.

ஈற்றிலே மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய விடயம் யாதெனில் திருப்பலியினை எதனோடும் ஒப்பிடமுடியாது. இயேசுவின் திருஇரத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட உன்னத உடன்படிக்கையான திருப்பலிக்கு நான் செலுத்தும் காணிக்கை நான் செய்யும் ஒர் சிறிய தியாகம் என்பதை மனதிற் தெளிவாய் இருத்திக் கொள்வோம்.
✠ இதை என் நினைவாகச் செய்யுங்கள் ✠

திருப்பலியில் ஆழமான முறையில் பங்கேற்க வேண்டுமெனில், அதைப்பற்றி நாம் ஆழமாக கற்க வேண்டும்.

திருப்பலியும் கடவுளும், மனிதரும் இணைந்து நடத்தும் கூட்டுச் செயற்பாடு என்பதை ஆழ்ந்து உணர வேண்டும்.
தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள், இயேசுவும், சீடர்களும் பாஸ்கா உணவில் பங்கேற்றனர். யூத பாஸ்கா பெருவிழாவின் ஆரம்பம். இது ஒவ்வொரு யூதனுடைய வாழ்விலும் இன்றியமையாத முக்கியமான நிகழ்வு. ஏன்?

1. எகிப்தின் அடிமை வாழ்வில் இருந்து கிடைக்கப்பெற்ற அற்புதமான விடுதலை வாழ்வு.
2. இறைவனின் வலிய கரத்தினால் செங்கடலை கடந்து வந்த அற்புதச் செயல்.
3. வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அழைத்து வரப்படுகையில் அனுபவித்த இறைபராமரிப்பு இவற்றை தலைமுறை தோறும் நினைவு கூற வேண்டுமென இறைவன் பணித்தார்.

'நினைவு கூறல்"என்பதற்கு எபிரேய மொழியில் 'சிக்கரொன்" (Zikkaron) என்று பொருள்படும். இச்சொல்லின் பொருள் யாதெனில் 'இறந்தகால நிகழ்வினை, நிகழ்காலத்தில் நிஜமாக்குதல். "இதை இவ்வாறு தெளிவுபடுத்தலாம்.

பாஸ்கா உணவில் பங்கேற்பவர்கள் புளிப்பற்ற அப்பத்தையும், கசப்பான கீரையையும் உண்டனர். கசப்பான கீரை இஸ்ராயேல் மக்கள எகிப்தில் அனுபவித்த துன்பகரமான பாடுகளை நினைவூட்டியது. மேலும் புளிப்பற்ற அப்பம் எகிப்தில் அவர்கள் அனுபவித்த உணவுப்பற்றாக்குறையை குறித்துக் காட்டுகிறது. எனவே ஒவ்வொரு யூதரும் இந்த பாஸ்கா விழாவின் போது இன்று கூட, அன்று தம் மூதாதையர் அனுபவித்த வேதனைகளை இவ்வுணவின் மூலம் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த உணவின் போது வீட்டுத் தலைவர் தன் பிள்ளைகளில் கடைக்குட்டியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். எகிப்திலிருந்து தாம் பெற்ற விடுதலையை தலைமுறை தோறும் சொல்ல கடவுள் தாமே பணித்துள்ளார். இதை வெறுமனே ஓர் வரலாற்று நிகழ்வாக அல்ல, மாறாக இன்றும் இதனை கொண்டாடும், அனைவரோடும் இறைவன் தனது உடன்படிக்கையை புதுப்பிக்கின்றார். 'ஒவ்வொரு தலைமுறையினரும், தனிமனிதரும் தான் எகிப்திலிருந்து மீட்கப்பட்டதை உணர வேண்டும்" என இறைவன் பணித்ததை திருவிவிலியத்தில் (வி.ப நூல் 13:8, இ.ச.நூல் 6:23) காண்கின்றோம்.

இதன் பின்னணியிலேயே கிறிஸ்து ஓர் யூதர் என்ற முறையில் தன் சீடர்களோடு அருந்திய இறுதி இராவுணவின் போது புதியதோர் உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதனை தன் நினைவாகச் செய்யக் கட்டளையிட்டார், (மத் 26:26-28, மாற் 14:22-24, லூக்கா 22:19-20, 1 கொரி 11:23-26, யோவா 6:48-58)

'நினைவு" என்ற சொல்லுக்கு புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல் 'அனம்னேசிஸ்" (Anamnesis). இந்த சொல்லின் அர்த்தத்தை யூத பாஸ்காவின் பின்னணியில் பார்ப்பதே நலம். 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகள் அவருடைய சிலுவை மரணத்தை குறித்துக் காட்டுகின்றன. 'இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல், உங்களுக்காக சிந்தப்படும் என் இரத்தம" இதன் பொருள் அன்று கல்வாரியில் நடந்த நிகழ்வு மீண்டும், மீண்டும் இன்று திருப்பலியில் நடக்கின்றதென்பதல்ல. இதனை புதிய ஏற்பாட்டு வார்த்தைகள் தெளிவாகவே கூறுகின்றன. 'இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்: இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கின்றோம். அவர் இறந்தார் பாவத்தை ஒழிக்க ஒரே ஒரு முறை இறந்தார்.

இப்போது அவர் வாழ்கின்றார். அவர் கடவுளுக்காகவே வாழ்கின்றார். (உரோ 6ஃ9-10) 'தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்தோடு ஆண்டுதோறும் தூயுகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும், மீண்டும் செய்யவில்லை...". கிறிஸ்து பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத் தாமே பலியாகக் கொடுத்தார். (எபிரேயர் 9:25-28) ஆகவே கிறிஸ்து சிலுவையிலே ஒப்புக்கொடுத்த பலி எக்காலத்திற்கும் பொருந்தும்.

எனவே திருப்பலியிலே நாம் எம்மையே கிறிஸ்துவின் பலியோடு இணைக்கின்றோம். எவ்வாறு? எமது தியாக வாழ்வு, மற்றவர்களுக்காக கிறிஸ்துவைப் போன்று நாம் எம்மையே வெறுமையாக்கும் போது, மற்றவர்களுக்காக எம்மையே உடைத்து, பகிர்ந்து கொடுக்கும் போது, கிறிஸ்துவின் பலி, எம்மில் செயலாற்றுகின்றது. நாமும் கிறிஸ்துவின் நினைவாய் வாழ்கின்றோம்.
✠ பாவப் பரிகாரப் பலியும், திருப்பலியும் ✠

இஸ்ரயேல் வழிபாட்டு முறையிலே பாவப் பரிகாரப் பலி முக்கிய இடம் பெற்று இருந்தது. குருக்களுக்காக, மக்களுக்காக, அரசர்களுக்காக என பல தரப்பட்டவர்களுக்காக (வேலி 4:1-35), பல்வேறு விதங்களில் பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டன. உதாரணமாக எரிபலி, பாவப் பரிகாரப்பலி, சமாதானப் பலி, என வகைப்படுத்தலாம். இதில் பலியாக்கப்பட்ட விலங்கின் இரத்தம் தெளிக்கும் சடங்கு மிக முக்கியமாகும். பழைய ஏற்பாட்டின் படி இரத்தம் வாழ்வைக் கொண்டதாகவும், பாவங்களைபோக்க வல்லமை உடையதாகவும் கருதப்பட்டது (வேலியர் 17:11). மேலும் விலங்கின் இரத்தம் பீடத்தின் மேல் தெளிக்கப்பட்டது. மக்கள் மேலும் தெளிக்கப்பட்டது (விப 29:19-21). இதன் பயனாக பலியாதல், இரத்தம் சிந்துதல், புனிதமடைதல், சுத்தமாக்கிக் கொள்ளுதல், ஏற்புடையவராதல், அனைத்தும் பலியினால், இரத்தம் சிந்துதலினால் நடக்கும் என ஏற்கப்பட்டது.

புதிய ஏற்பாடனது, கிறிஸ்துவின் மரணத்தை, உன்னத பாவம் போக்கும் பலியாக காட்டுகின்றது. 'இதோ கடவுளின் ஆட்டுக் குட்டி; ஆட்டுக் குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" (யோவா 1:29). 'சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும், விண்ணுலகிலுள்ளவை, மண்ணுலகிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொரி 1:20). 'அவர் பலியாகப் படைத்த இரத்தமும் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக் குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கச் செய்தார்..... ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகின்றது. ஏனெனில்
என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாக கொடுத்தவர் அவரே" (எபி 9:12-14). தொடர்ந்து எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலே ஆசிரியர், கிறிஸ்துவின் பலி,சீனாய் உடன்படிக்கையைவிட மேலானது என்பதைக் காட்டுகின்றார். பின்வரும் பகுதியிலே (எபி 8:7-13) சீனாய்
உடன்படிக்கை பழையது, குறைவானது. கிறிஸ்துவின் கல்வாரிப் பலி புதியது, நிறைவானது. தொடர்ந்து புதிய உடன்படிக்கையில் கிறிஸ்துவே நமக்காக பரிந்து பேசுபவர். கிறிஸ்துவினுடைய பலியினால் சட்டங்கள் மனிதர்களுடைய இதயத்தில் பதிக்கப்படும், கற்களில் அல்ல என்று எரேமியா இறைவாக்கினரை மேற்கோள் காட்டுகின்றார் ஆசிரியர் (எரே 31:33-34). இயேசுக் கிறிஸ்து எல்லா பலிகளின் நிறைவாக, முக்காலத்திற்குமான ஒரே பலியாக தன்னை மனமுவந்து கையளித்தார். இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்திற்கு கழுவாயாகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார் (உரே 3:25).

இறுதி இராவுணவின் போது கிறிஸ்து இரசம் நிறைந்த பாத்திரத்தை எடுத்து 'இது புதிய உடன்படிக்கைக்காக என் இரத்தம்" (மத் 26:28, மாற் 14:24, லூக் 22:20, 1கொரி 11:25) என்றார். இயேசு சிந்திய 'புதிய உடன்படிக்கைக்காக இரத்தம்" என்பதை நாம் பழைய உடன்படிக்கையான சீனாய் உடன்படிக்கையினைக் கொண்டு விளங்கிக் கொள்ள முடியும். சீனாய் உடன்படிக்கையில் விலங்கின் இரத்தம் பலிப்பீடத்தின் மேலும், மக்கள் மேலும் தெளிக்கப்பட்டது (விப 24:6-8). புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. விலங்கின் இரத்தத்தினால் அல்ல, மாறாக கடவுளின் மகனாகிய இயேசுக் கிறிஸ்துவின் இரத்தத்தினால் இயேசுக் கிறிஸ்து தன்னுடைய இரத்தம் சிந்துதலினால் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதை முக்காலத்திற்கும் உரிய ஒரு உன்னத, நிறைவான பலியாக ஏற்படுத்தி விட்டார். இதுவே கல்வாரிப்பலியின் சிறப்பு. கிறிஸ்து தம்மையே 'தற்கொடையாக" நமக்கு தந்து விட்டார். ஆகவே இந்தக் கல்வாரிப்பலியை நாம் மீண்டும், மீண்டும் நிகழ்த்திக் காட்ட முடியாது. ஒருமுறைதான் நடந்தேறியது. திருப்பலியில் நாம் பங்கெடுக்கும் போதெல்லம் அந்த கல்வாரிப்பலியை நினைவு கூர்கின்றோம்.

இயேசுவின் இப்பலி பாவ மன்னிப்புக்கு அவசியம். வாழ்வடைய இயேசுவின் இரத்தத்தை, உடலை உண்டு, பருக வேண்டும் (யோவா6:53). கடவுளின் இரத்தத்தால், நாம் அவர்க்கு ஏற்புடையவர்களாக அவரோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் (உரே5:9-10) இயேசுவின் இரத்தத்தினால் தூய்மை அடைகின்றோம் (1பேதுரு 1:2). நம்மை விடுவிக்க கொடுக்கப்பட்ட விலை மாசுமறுவின்றி இயேசு கிறிஸ்துவின் உயர் விலையேற்றப்பட்ட இரத்தமாகும் (1பேதுரு 1:18-19). ஒவ்வொரு திருப்பலியிலும் பங்கேற்கும் போது மேற்சொன்ன உண்மைகளை புரிந்து கொண்டு பங்கேற்கும்போது, அதன் மகத்துவத்தை மென்மேலும் அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். இத்தகைய அன்பின் தகனப்பலியில் நாம் இணைந்து கொண்டால் கடவுள் தரும் மீட்பை நமதாக்கிக் கொள்ள முடியும்.
✠ நற்கருணை தாபகம் ✠

புதிய ஏற்பாட்டில் நான்கு இடங்களில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வினை நாம் காண்கின்றோம். (மத் 26:26-28; மாற் 14:22-24; லூக் 22:19-20; 1கொரி 11:23-26) இப்பகுதிகளை வாசிக்கும் போது, பல வித்தியாசங்களை நாம் உடனடியாக அவதானிக்க முடியும். ஏன் இத்தகைய வேறுபாடுகள் என்ற கேள்வி எழும்? வெவ்வேறு வழிபாட்டு பழக்கங்கள் இவ்வேறுபாட்டுக்கு காரணம் எனலாம். அதேவேளை சில ஒற்றுமைகளையும் இப்பகுதியில் நாம் காணலாம்.

ஒற்றுமையை நோக்கும் இடத்தில் இந்த நான்கு புதிய ஏற்பாடு பகுதிகளை இரண்டாக பிரிக்கலாம். மத்தேயு, மாற்கு நற்செய்தி பகுதிகள் ஒன்றாகவும், லூக்கா, 1கொரிந்தியர் பகுதிகள் இன்னுமொரு கூறாகவும் காணலாம்.

மத்தேயு, மாற்கு நற்செய்தியில் இயேசு அப்பத்தை எடுத்து கடவுளைப் பேற்றுவதையும், (மத் 26:26; மாற் 14:22) கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்துவதையும் (மத் 26:27; மாற் 14:23) கூறுகையில், லூக்காவும் பவுலும் இயேசு அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார் என்று கூறி, ஈற்றில் 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று கட்டளையிடுவதை லூக்காவும் பவுலும் மாத்திரமே சொல்கின்றனர். (லூக் 22:19; 1கொரி 11:24-25) இக்கட்டளை மத்தேயு, மற்றும் மாற்குவில் காணப்படுவதில்லை. ஏன் இந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன?

மத்தேயுவும், மாற்குவும் பாலஸ்தீன வழிபாட்டு மரபுகளை பின்பற்றி எழுதுகின்றார்கள். யூத வழிபாட்டு மரபைப் போன்று அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றுதலும், கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்துவதையும் காணலாம்.

லூக்காவும் பவுலும் அந்தியோக்கியா, அலெஸ்சாந்திரியா வழிபாட்டு முறைமைகளை கடைப்பிடிப்பது போன்று இயேசு அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார் என்று சொல்கின்றார்கள். இதுவே யூதரல்லாத கிறிஸ்தவர்கள் கொண்டாடிய விதமாக காட்டப்படுகின்றது. இதில் இருந்து எங்களுக்கு கிடைக்கின்ற விளக்கம் என்ன? அதாவது யூதர்களுக்கு 'நினைவு கூறல்" மிக இன்றியமையாத ஒர் அனுபவம். வாழ்வின் முக்கிய கூறு. எனவேதான் மத்தேயு, மாற்கு 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று வெளிப்படையாக கூறுவதில்லை. ஏனெனில் 'நினைவு கூறல்" அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒர் அனுபவம். அதற்கு மாறாக லூக்காவும் பவுலும் தாம் எழுதிய யூதரல்லாதோர்க்கு இவர்கள் இருவரும் வெளிப்படையாகவே சொல்கின்றார்கள்.

மத்தேயு நற்செய்தியின் படி இயேசு கிண்ணத்தை எடுத்து நன்றி செலுத்தி கூறிய வார்த்தைகள் '.......... பலருடைய பாவமன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மத் 26:28) இது மாற்கு நற்செய்தியில் காணப்படுவதில்லை.

காரணம் மத்தேயு தன் நற்செய்தியை யூத மக்களுக்கு எழுதுகின்றார். இதில் மூன்று முக்கிய காரணிகளைக் காணலாம்.

முதலாவது, இயேசு துன்புறும் ஊழியனோடு அடையாளப்படுத்தப்பட்டு காட்டப்படுகின்றார். இரண்டாவது கிறிஸ்துவின் பலி, ஏனைய பலிகளை விட சிறந்தது. மூன்றாவது இயேசுவை உரோமையர்கள்/யூதர்கள் கொடுமையாக கொன்றனர் என்ற நிலைப்பாடு தவறானது.

மாறாக துன்புறும் ஊழியனாகிய இயேசு மக்களின் பாவங்களுக்காக தன்னுயிரைக் கையளித்தார் (எசா 53:6-12) என்ற உண்மைகளை வெளிப்படுத்த மத்தேயு இதனைச் சொல்கின்றார்.

யோவான் நற்செய்தி இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை கூறுவதில்லை. கடைசி இராவுணவின் போது இயேசு சீடர்களின் பாதம் கழுவியதையும், அதன்பின் நீண்டதோர் உரை நிகழ்த்துவதையும் காண்கின்றோம். (யோவா 13:1-17, 26) மாறாக யோவான் நற்செய்தி 6ம் அதிகாரம், இயேசு உண்மையான உணவு என்பதை வலியுறுத்துகின்றது. இது இயேசு அப்பம் பலுகச் செய்த புதுமையோடு (யோவா 6:1-15) தொடர்புடையது. இப்புதுமை நற்கருணையோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த இரண்டு நிகழ்வின்போது ஒரே வகையான செயலில் கிறிஸ்து ஈடுபடுகின்றார். இயேசு அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, அதனை தன் சீடர்களுக்கு கொடுத்தார். யோவான் நற்செய்தியில் 6:51-58 பகுதியில் இயேசு தன்னை விண்ணிலிருந்து இறங்கி வந்த அப்பமாக அடையாளப்படுத்துகின்றார்.

'விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர். (யோவா 6:57) மானிட மகனுடைய உடலை உண்டு, இரத்தத்தை குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்" (யோவா 6:53-54) இயேசுவின் இவ்வார்த்தைகள் சிலருக்கு கடினமாக இருக்கின்றது. ஏனெனில் மோயீசனின் சட்டப்படி மனித உடல், இரத்தம் இவைகளை உண்பது தவறானதாகும். (லேவி 11:1-47; லேவி 17:10,12) கிறிஸ்துவிற்குப் பின் முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடுபவர்கள் என்ற குற்றஞ் சாட்டப்பட்டனர். ஆனால் இயேசு சொன்ன வார்த்தைகளின் பொருளினை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். உடலை கொண்டுதான் ஒருவர் உயிருடன் இருக்கின்றாரா? என நாம் அடையாளம் காண முடியும். அதற்கு இன்றியமையாதது இரத்தம் (லேவி 17:11) இது ஒருவர் உயிருடன் உள்ளார் என்பதற்கு அடையாளம். அப்பமும், இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறி கிறிஸ்துவை நம் ஆன்மீக உணவாக பெறுகின்றோம்.
✠ தொடக்க கால கிறிஸ்தவ வழிபாடு ✠

திருப்பலி ஒரு விழா. அது ஓர் விருந்து. திருப்பலி ஓர் கொண்டாட்டம். சாதாரண கொண்டாட்டங்களில் பங்கேற்க செல்லும் போது, தூய்மையாக, கண்ணியமாக ஆடை அணிந்து செல்வது வழமை. மேலும் நேரகாலத்தோட செல்கின்றோம். கொண்டாட்டம் முடியும் வரை அங்கிருக்கின்றோம். மகிழ்ச்சியோடு ஈடுபடுகின்றோம், கொண்டாடுகின்றோம். சாதாரண கொண்டாட்டத்தில் இத்துணை ஆயத்தமெனில், திருப்பலி எனும் இறைவன் தரும் கொண்டாட்டத்தில் எவ்வளவு ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும். ஆனால் நமது திருப்பலிகளில் அத்துணை பங்கேற்பு உண்டா? அப்படி இல்லையெனில் ஏன்? இதற்கு முதன்மை காரணம், திருப்பலி பற்றி போதியளவு அறிவு நமக்கில்லை. இதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் நோக்கோடு இனிவரும் கட்டுரைகள் அமையும்.

தொடக்க காலத்திருச்சபையில் பல யூதர்கள் இயேசுவை ஏற்றுக் கொன்டனர். வழமைப் போன்று சனிக்கிழமை (ஓய்வு நாள்) தொழுகைக் கூடத்திற்குச் சென்றனர். திருத்தூதர்கள் ஆங்காங்கே சிறிய கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கினர். கிறிஸ்தவ சமூகங்களை இறைவார்த்தையில் ஊன்றச் செய்து, ஒருவர் ஒருவர் மட்டில் அக்கறை கொண்டு வாழ்ந்து மற்றும் செபித்து, வழிபாட்டில் ஈடுபட கட்டியெழுப்புவதை நாம் திருத்தூதர் பணிகளில் 2:42-47 இல் வாசிக்க கூடியதாக உள்ளது. மனம் மாறிய யூதர்கள், கிரேக்கர்கள், தங்கள் பழக்க வழக்கங்களை கிறிஸ்தவ மயமாக்கினர். மனம் மாறிய யூதர்கள் தொழுகைக்கூட வடிவத்தை தங்கள் வழிபாடுகளில் பின்பற்றினர். ஆனால் மனம் மாறிய கிரேக்கர்கள் தனித் தலைமையைக் கொண்டு ஒன்று கூடினர்.

மனம் மாறிய யூதர்கள், நாளடைவில் செபக்கூடம் செல்வதைக் கைவிட்டனர். சனிக்கிழமை சூரியன் மறைந்த பிறகு ஒன்று கூடினர். வீடுகளில் ஒன்று கூடி செபித்தனர். தூய யஸ்டின் உரோமையில் நடந்த திருப்பலியை பற்றி குறிப்பிடுவதை நாம் பார்க்கும் பொழுது, அவர்கள் அன்று கொண்டாடியது போல் இன்றும் நாம் கொண்டாடுகின்றோம். அவர்கள் அன்று என்ன செய்தாங்க? இயேசுவின் பாடுகளை தியானித்து, ஏழைகளுக்கு உதவி செய்து, செபத்தில் நிலைத்திருந்து, அதுபோல் தலைவர்களின் கடிதங்களை வாசித்து, இறைவார்த்தைகளை தியானித்து, மறையுரையை கேட்டு மன்றாடி திருப்பலியை கொண்டாடினர். முதன் நான்கு நூற்றாண்டுகளில் கிரேக்க மொழியில் இருந்து வழிபாட்டு முறைமைகள் மாற்றம் காணத் தொடங்குகிறது. இப்பொழுது உரோமை மொழி முன்னுரிமை பெற தொடங்குகிறது. இக்காலம் உரோமை வழிபாட்டின் 'பொற்காலம்" எனக் கூறினால் அது மிகையாகாது. உரோமைய வழிபாட்டின் பொற்காலமாக இருந்தாலும், ஒட்டு மொத்த கிறிஸ்தவ வழிபாட்டின் பொற்காலம் என கூறமுடியாது. ஏனென்றால் கொன்ஸ்டன்டைன் பேரரசனின் மனமாற்றத்திற்கு பிறகு அரசாங்கமே பொதுக்கட்டிடங்களை கொடுத்தது. கோயில் (Church) என்ற அமைப்பு உருவாகிறது. வீடுகளில் ஒன்று கூடி செபிக்கும் பழக்கம் குறையத் தொடங்குகிறது. பலிக்காக ஒன்று கூடும்போது 'அன்புவிருந்தில்" (Agape) குளறுபடிகள் ஏற்படுகின்றன. மக்கள் நிறைய கூடி வருகிறார்கள். ஆகவே 'அன்பு விருந்து" நிறுத்தப்படுகிறது. வீடுகளில் கூடிய போது மேசை இருந்தது, பலிப்பீடம் இல்லை. பொது இடங்களில் கோயில் கட்ட தொடங்குகிற பொழுது நடுவில் கற்களைக் கொண்டு பலீப்பீடம் அமைத்தனர். இது இயேசுவை குறிப்பதாக கருதப்பட்டது. தெய்வீகம், இறைபிரசன்னத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. வீடுகளில் கூடியபோது இருந்த பாசம், பகிர்வு, நெருக்கம், உறவு இங்கே வெது வெதுப்போயிற்று. இயேசுவின் தெய்வீகத்தை குறைவாக மதிப்பிட்ட ஆரிய பேதகத்திற்கு எதிராக, தெய்வீக தன்மையை வலியுறுத்தும் நோக்கில் மெழுகுவர்த்திகள், தூபம், தெண்டனிட்டு வணங்குதல், பவனி, வழிபாட்டு ஆடைகள் என்பன வழிபாட்டில் சேர்க்கப்பட்டமையினால் ஆதியில் இருந்த தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆரம்பத்தில் மக்களே வீடுகளில் இருந்து அப்பம் கொண்டு வந்தனர். 8ஆம் நூற்றாண்டு காலம் தொடங்கி எளிதில் உடையக்கூடிய மென்மையான வெண்மை அப்பங்கள் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் முழுத் திருப்பலியிலும் இறைபிரசன்னம் இருப்பதை மறந்து எழுந்தேற்ற நேரத்தில் அப்பத்தில் இறைவனைக் காணும் பழக்கம் உருவாகியது. எனவே எழுந்தேற்ற நேரங்களை பார்த்து, ஆலயம் செல்லும் பழக்கம் உண்டானது. வீடுகளில் கூடிய பொழுது இருந்த பாச பிணைப்பு அற்று போனது. நற்கருணையில் இயேசு முழுமையாய் பிரசன்னமாக இருக்கின்றார் என்று அப்ப இரசத்தில் இயேசுவை பார்க்க முனைந்தனர். 12ஆம் நூற்றாண்டில் நற்கருணையை உற்று நோக்கிபார்த்து செபிக்கிற பழக்கம் உருவானது. எனவே நற்கருணை வாங்கும் பழக்கம் குறைந்து போனது.

இக்கலகட்டத்தில் இருந்து, 2ம் வத்திக்கான் சங்கம் வரை திருப்பலியை புரிந்து கொள்வதிலும், மீண்டும் அதன் பழைய இயல்புக்கு அழைத்துச் செல்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது. பழங்கால திருப்பலியில் இருந்து அழிந்துபோன நல்லவற்றை மீண்டும் திருப்பலியோடு இணைத்தது. அது மட்டுமன்றி இக்காலத்தில் தேவைக்கேற்ப, மக்கள் நன்முறையில் பங்கேற்கும் வண்ணம் திருவழிபாடு சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே 1970க்கு பிறகு நாம் தமிழ் மொழியில் திருப்பலியை கொண்டாடுகின்றோம்.
✠ திருப்பலியின் உட்கூறுகள் ✠

உரோமை பூசைப்புத்தகத்தின் பொதுப்போதனை மிகவும் இரத்தினச் சுருக்கமாக திருப்பலியின் உட்கூறுகள் பிரதானமாக இரண்டென்றும், அவைகள் இறைவார்த்தை பகுதி, மற்றது நற்கருணை விருந்தென்றும் சொல்கின்றது. ஆதி திருச்சபையின் காலம் தெடங்கி இன்று வரை திருப்பலியின் பிரதான உட்கூறுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இறைவார்த்தைக்கு செவிமடுப்பது, நன்றி கூறுவது, இதன் நிறைவாக நற்கருணை விருந்தில் பங்கேற்பது. காலங்கள் செல்ல செல்ல சிற்சில கூறுகள் சேர்க்கப்பட்டன. உதாரணமாக தொடக்கச்சடங்கு, இறுதிச்சடங்கை நாம் சொல்லலாம். எமது திருப்பலி 20 நூற்றாண்டு வரலாற்றை கொண்டது.

காலத்துக்கு காலம் திருப்பலி கொண்டாடும் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதன் பிரதான கூறுகளில் எவ்வித மாற்றம் இல்லை.

தொடக்கச் சடங்கு:

இச்சடங்கை ஆரம்ப அல்லது நுழைவுச் சடங்கென்றும் அழைக்கலாம். இதனுடைய பிரிவுகளாக வருகைப்பவனி, வருகைப்பாடல், பீடத்தை முத்தி செய்தல், திருச்சிலுவை அடையாளம், வாழ்த்து, முன்னுரை, பாவமன்னிப்புச்சடங்கு, ஆண்டவரே இரக்கமாயிரும், வானவர் கீதம், சபை மன்றாட்டு.

திருப்பலியில் வருகைப்பவனி 7ம் நூற்றாண்டின் இறுதியில் தான் உள்வாங்கப்படுகின்றது. திருப்பண்ட அறை (Sacristy) அந்த நாட்களில் ஆலயத்தின் நுழைவாயிலில் தான் அமைந்திருந்தது. இதுவும் காரணம் திருப்பண்ட அறையிலிருந்து பவனியாக செல்வது. மேலும் திருப்பலியில் பங்கேற்க வந்திருப்போரையும் பங்காளிகளாக உள்வாங்கும் நோக்குடன், வருகைப்பவனி இடம் பெற்றது.

இந்த வேளையில் வருகைப்பாடல் பாடப்பட்டது. பெரும்பாலும் திருப்பாடல்கள் 120, 134 என்பன பாடப்பட்டன. திருப்பண்ட அறை பீடித்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டதும் வருகைப்பவனி ரொம்பவும் எளிமையானதாக, குறுகியதாக மாறியது. எனவே வருகைப்பாடல், திருப்பாடலின் ஓரிரு வரியாக குறைக்கப்பட்டது. இன்று வருகைப்பாடல் உண்டு, அதே போன்று வருகைப் பல்லவியும் உண்டு. வருகைப்பாடல் பாடப்பட்டால் வருகைப் பல்லவி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று நாம் குறைந்தது ஞாயிறு தினங்களிலாவது பவனியை மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. வருகைப்பாடல் பொருத்தமானதாக, மகிழ்வானதாக மக்கள் அனைவரும் சேர்ந்து பாடக்கூடிய பரீட்சயமான விறுவிறுப்பான பாடல்களாக இருப்பது வழிபாட்டை மேலும் மெருகூட்டும் பாடல்வரிகள் நாம் பாடும்போது மறைப் பொருளை எடுத்துரைப்பதாக இருப்பது மிகவும் சால சிறந்தது.
✠ பீடத்தை முத்தி செய்தல் ✠

உரோமையர் கிரேக்க கலாச்சாரத்தின் படி வீட்டில் உண்ணும் பிரதான உணவு வேலை ஓர் புனிதமான நிகழ்வாக இருந்தது. எனவே உணவுருந்த அமர்ந்திருப்போர் உணவு மேசையை முத்தி செய்வர். கொன்ஸ்டன்டைன் மன்னின் காலத்தில் வழிபாட்டிற்காக இடங்கள் அமைக்கப்பட்டபோது இப்பழக்கமும் உள்வாங்கப்பட்டு அதற்கு கிறிஸ்தவ பொருள் கொடுக்கப்பட்டது. காரணம் திருப்பீடம் கிறிஸ்துவை அடையாளப்படுத்தியது. மேலும் திருப்பீடம் வீரசாட்சிகளின் கல்லறைமேல் அல்லது அவர்களுடைய புனித பண்டம் திருப்பீடத்தில் பதிக்கப்பட்டது. திருப்பீடத்திற்கு தூபம் இடுதல் இன்னும் ஒரு மரியாதைக்குரிய செயலாக மாறியது. உரோமைய அரசனுக்கும் வேற்று தெய்வங்களுக்கும் தூபம் இடுவதனால் இச்சடங்கு மிகவும் மெதுவாகவே திருச்சபையின் வழிபாட்டுமுறைகை;குள் புகுந்தது. இதற்கு கிறிஸ்தவ பொருள் கொடுக்கப்பட்டது. முதன்மையாக தூபம் இறைவனை நோக்கி எழும் ஜெபமாக (திருவெளிபாடு 5:8) அடையாளப்படுத்தப்பட்டது. மேலும் பலிப்பீடம் கிறிஸ்துவை குறிப்பதனால் அது பலியிடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் வேறு எதற்கும் அதனை பயன்படுத்தக்கூடாது. எனவே திருப்பலிக்கு தேவையான திருப்பலி புத்தகம். திருமேனிதுகில், திருப்பாத்திரங்கள், திருமேனித்தட்டு போன்றவை மட்டுமே பீடத்தின் மேல் வைக்கப்பட வேண்டும் என்ற பொதுப்போதனை சொல்கிறது.

ஆகவே தான் பீடத்தின் மேல் பூக்கள் கூட வைக்க கூடாது பீடத்திற்கு அருகில் வைக்கப்படல் வேண்டும். அதுவும் உயிருள்ள, உயிர் தருகின்ற இறைவனுடைய பிரசன்னத்தில் செயற்கை பூக்கள் அல்ல இயற்கை பூக்கள் மாத்திரமே வைக்கப்படல் வேண்டும். மேலும் திருப்பலியின் ஆரம்பத்தில் திருப்பீடம் வெறுமையாக இருக்க வேண்டும். காணிக்கையின் போது தான் ஏனையவை திருப்பீடத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

✠ மூவொரு கடவுள் பெயரால் ✠

பீட வணக்கம் முடிந்ததும் குரு வழிபாட்டு 'தலைவருக்குரிய இடத்திலிருந்து தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே" என்று திருப்பலியை தொடங்குகின்றார். நாம் மூவொரு இறைவன் பெயரால் திருமுழுக்கு பெற்றோம் என்பதை இது நினைவூட்டுகின்றது. சிலுவை வழியாகத்தான் நமக்கு மிட்பு உண்டாகிற்று. 'நாம் வாழ்வதும். நாம் இருப்பதும், நாம் இயங்குவதும் அவரிலே தான்" என்ற உண்மையை இது உணர்த்துகின்றது. மேலும் நாம் எதை செய்ய தொடங்கினாலும் அதை கடவுளின் பெரால் செய்யத்தொடங்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகின்றது.
✠ இறைவார்த்தை வழிபாடு ✠

திருப்பலியின் இருமுக்கிய கூறுகளில் ஒன்றாகிய இறைவார்த்தை வழிபாடு பற்றி நாம் அலசுவோம். இறைவார்த்தை வழிபாட்டின் முக்கிய நோக்கம் என்ன இப்பகுதியினூடாக இறைவனோடு இறைமக்கள் சமூகம் உரையாடலுக்கு உட்படுகின்றது. இறைவார்த்தை வழியாக பேசும் இறைவனோடு உறவாடுகின்றது. அவருடைய உயிருள்ள வார்த்தைக்கு செவிகொடுக்கின்றது. அமைதியில் தியானிக்கின்றது, பதிலுரைப்பாடல் மூலம் பதிலளித்து, தம் வாழ்வில் இறைவார்த்தையை கடைப்பிடித்து நல்வழி நடந்திட, நம்பிக்கை அறிக்கை (விசுவாசப்பிரமாணம்) செய்து, அவர் அருள் வேண்டுவது இப்பகுதியின் சிறப்பாகும்.

ஆதித்திருச்சபை, திருப்பலி கொண்டாட்டத்தில் இறைவார்த்தைக்கு முக்கிய இடம் கொடுத்ததை காணக் கூடியதாக உள்ளது. ஏனெனில், அருள் அடையாளக் கொண்டாட்டத்திற்கு முக்கிய கூறாக இருப்பது இறைவார்த்தையே. நற்செய்தி அறிவிப்பில்லாமல் திருமுழுக்கு அளிப்பதாக புதிய ஏற்பாட்டில் எங்கும் கூறப்படுவதில்லை. ஏனெனில் இறைவாக்கு அறிவிக்கப்பட்டு, விளக்கப்படும் போது தான் நம்பிக்கை (விசுவாசம்) ஏற்படுகின்றது. அதுவே திருமுழுக்கு பெற வழிசமைக்கின்றது. (தி.பணி 8: 35- 38. 10: 44- 48, 19: 4-5) இதிலிருந்து முதலாம் நூற்றாண்டில் இருந்தே திருவழிபாட்டில் இறைவாக்கு முன்னுரிமை பெற்றிருந்ததை காணக் கூடியதாக உள்ளது.

✠ இரண்டாம் வத்திக்கான சங்கமும் இறைவார்த்தையும்

"திருச்சபை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம்" செலுத்தி வந்துள்ளது போலவே இறைநூல்களுக்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது" இக்கூற்று இறைவார்த்தையின் முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்துகின்றது. எனவே திருப்பலியிலும் வேறு எந்தவொரு அருட்சாதனக் கொண்டாட்டத்திலும் இறைவார்த்தை வழிபாடு என்பது கட்டாயம் நடைபெற வேண்டியதே.

✠ இதன் இயல்பு

இறைவார்த்தைகள் வழியாக இறைவனே நம்மோடு பேசுகின்றார். எனவே இந்த வார்த்தைகள் வாசிக்கப்படும் போது நாம் மிகக் கவனத்துடன் செவிமடுத்துக் கேட்க வேண்டும். கூர்ந்து கவனிக்க வேண்டும். அவ்வாறன்றி நாம் கைகளில் விவிலியத்தை வைத்துக்கொண்டோ, பக்கங்களைப் புரட்டிக்கொண்டோ, வாசிக்கப்படும் வாசகத்தை தேடிக்கொண்டோ அல்லது வாசிப்பவரோடு சேர்ந்து வாசித்துக் கொண்டோ இருக்கக்கூடாது. ஏனெனில் இறைவார்த்தை நாம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்பதற்காகவே பறைசாற்றப்படுகின்றது. இவ்வார்த்தைகளை உள்வாங்கி சமுதாயத்தில் நாமும் வார்த்தைப் பணியாளர்களாக வாழ்வதற்கு அழைக்கப்படுகின்றோம்.

✠ வழிபாட்டிற்கு விவிலியத்தை எடுத்துச்செல்ல வேண்டுமா?

ஆலயங்களுக்கு விவிலியத்தை எடுத்துச்செல்வது மிகவும் சிறப்பான செயல். ஏனெனில் இறைவார்த்தையை நாம் கொண்டாடுகின்றோம். வரலாற்றில் இறைவன் செயற்பட்ட விதங்களை எண்ணிப்பார்த்து இன்று அந்த வார்த்தை நம்மோடு பேசும் விதங்களை கண்டுணர்வதே இறைவார்த்தைக் கொண்டாட்டம் ஆகும். ஒவ்வொரு வழிபாட்டிலும் இறைவார்த்தை முழக்கம் இடப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. எனவே இறைவார்த்தையின் கொண்டாட்டமான திருவழிபாட்டிற்கு விவிலியத்தை எடுத்துச்செல்ல ஊக்கப்படுத்த வேண்டும். விவிலியத்தை எடுத்துச் செல்வதே, நாம் அதை கொண்டாடச் செல்கின்றோம் என்பதை அடையாளப் படுத்துகின்றது.

இன்று பல ஆலயங்களில் வாசக தாள்கள் அச்சடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இது முறையா? தகுமா? தாள்களில் இருந்து வாசிக்கக்கூடாது என்றால் ஏன் இவை அச்சடிக்கப்படுகின்றன? நல்ல கேள்வி. ஒரு கணம் இத்தாள்கள் உண்மையிலேயே ஏன் அச்சடிக்கப்படுகின்றன. ஞாயிறு பறைசாற்றப்படும் இறைவார்த்தைகளை தாங்கி வரும் இத்தாள் குறிப்பிட்ட ஞாயிறுக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டும். எதற்காக இந்த ஏற்பாடு வீட்டிலே வைத்து வாசிக்கவும், தியானிக்கவும், செபிக்கவும், இவ்வாறு ஞாயிறு திருப்பலிக்கு முன்கூட்டி தயாரிப்பு செய்து, திருப்பலியில் செயலூக்கத்துடன் பங்கேற்கவே இவ்ஏற்பாடு. இத்தாள்கள் இறைவார்த்தையைப் பிரசன்னப்படுத்துவதாக திருச்சபை ஏற்றுக்கொள்ளவல்லை. எனவே திருவழிபாட்டில் அச்சடித்த வாசக தாள்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

✠ இறைவார்த்தை ஏன் பறைசாற்றப்படுகின்றது?
✠ மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.
✠ அவசியமான போதனைகளை வழங்குகின்றது.
✠ திருச்சபைக்கு ஆக்க மும் ஊக்கமும் அளிக்கப்படுகின்றது.
✠ இறைமக்களை நம்பிக்கையில் (விசுவாசம்) உறுதிப்படுத்துகின்றது.
✠ ஆன்மாவிற்கு உணவளிக்கின்றது
✠ புனிதத்துவ வாழ்விற்கு ஊற்றாக அமைந்துள்ளது.
✠ இறைவார்த்தை வழிபாடு - 2 ✠

இயேசு நாசரேத்து செபக்கூடத்தில் எசாயா எழுதிய ஏட்டுச்சுருளின் ஓர் பகுதியை வாசித்து, 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக் 4:21) என்றார். அதே போன்றே இன்றும் இறைவார்தை முழக்கமிடும் போது 'கிறிஸ்துவே தம் வாக்கில்" உள்ளார். ஆக இறைவார்தையானது எழுதி முடிக்கப்பட்ட ஒர் புத்தகம் அல்ல. இறைவனின் வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது. எனவே நாம் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் ஒன்றுகூடும் போது முழங்கப்படும் இறைவார்த்தை கேட்போரின் உள்ளத்தில் பயனளிக்கின்றது, மேலும் புதிய வலிமையைத்தந்து வளப்படுத்துகின்றது. ஆகவே, திருவழிபாட்டில் இடையறாது அறிவிக்கப்படும் இறைவார்த்தை தூய ஆவியின் வல்லமையால் ஓர் உயிருள்ள, பயனுள்ள வார்தையாக என்றும் இருக்கிறது. இதனை பவுலடிகளார் இப்படிச் சொல்வார் 'நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன" (2 கொரி 1:19-20)

மேலும் திருவழிபாடுகளில் இறைவாக்கை கேட்பதால் திருச்சபை கட்டியமைக்கப்படுகிறது. வளர்ச்சி அடைகிறது. நம் செவிகளில் ஒலிக்கும் இறைவாக்கு மெய்யாகவே உள்ளத்தில் பயன் அளிக்க, தூய ஆவியின் செயல் தேவைப்படுகிறது. அவருடைய தூண்டுதலாலும், துணையாலும் தான் இறைவாக்கு திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் அடித்தளமாகவும் நம் வாழ்விற்கு அளவு கோலாகவும், உறுதுணையாகவும் அமைகின்றது. நாம் திருப்பலிக்காக ஒன்று கூடும் போது இரு மேசைகளிலிருந்து ஆன்ம ஊட்டம் பெறுகின்றோம். ஓன்றில் இருந்து சோதனை பெறப்படுகின்றது, மற்றதிலிருந்து மிக நிறைவாக புனிதப் படுத்தப்படுகின்றது. இறைவாக்கில் கடவுளின் உடன்படிக்கை அறிவிக்கப்படுகின்றது. நற்கருணையில் அது புதிய, நித்திய உடன்படிக்கையாகப் புதுப்பிக்கப்படுகிறது.

இனிச்சற்று நடைமுறைகளைப் பார்ப்போமே! பொது போதனையின்படி, திருப்பலிக்காக தரப்பட்டிருக்கும் வாசகங்களையும், திருப்பாடல்களையும் திருப்பலியில் விட்டுவிடுவதோ, குறைப்பதோ முறையல்ல. விவிலியத்திற்குப் பதிலாக வேறு இடங்களிலிருந்து வாசகங்களை எடுப்பது மிகவும் கனமான குற்றமாகும். ஏனெனில், விவிலியம் ஊடாக இன்றும் 'இறைவன் தம் மக்களோடு பேசுகின்றார்" அடுத்து, இறைவாக்கு வாசகங்களை வாசிக்கும் புத்தகங்களும், இறைவன் தம் மக்களோடு பேசுகிறார் என்னும் எண்ணத்தைத் தூண்டி எழுப்புகின்றன. இப்புத்தகங்கள் விண்ணைச் சார்ந்தவற்றின் அடையாளமாகவும், அறிகுறியாகவும் இருப்பதால், அவையும் மெய்யாகவே தகுதி உள்ளவையாகவும், பொருத்தமாக அணி செய்யப்பட்டு அழகாக வைத்திருக்க வேண்டும்.

வாசகத்தாள்கள், கையேடுகள் வாசக புத்தகத்திற்கு பதிலாக பயன்படுத்துவது இறைவாக்கின் மாண்புக்கும் பொருந்துவதாக இல்லை. அடுத்து இறைவாக்கு வழிபாட்டில் இறைமக்களுடைய பணி என்ன என்பதை ஆராய்வோம்..
✠ இறைவார்த்தை வழிபாடு - 3 ✠

இறைவாக்கு வழிபாட்டில் இறைமக்களுடைய பணி என்ன என்பதை ஆராய முற்படும் பொழுது, பொதுப் போதனை பின்வரும் படிப்பினைகளை முன்வைக்கிறது. கிறிஸ்துவின் வாக்கு இறைமக்களை ஒன்றிணைக்கின்றது, வளர்க்கின்றது, ஊட்டம் பெறச் செய்கின்றது. இறைவாக்கை இறைமக்கள் ஏற்றுத் தம் வாழ்வோடு இணைத்து நிறைவாக்க, உயிருள்ள விசுவாசம் தேவை. அறிவிக்கப்படும் இறைவாக்கை கேட்பதால் இந்த விசுவாசம் இடையறாது ஊக்கம் பெறுகிறது.

திருநூல் சிறப்பாக திருவழிபாட்டில் அது அறிவிக்கப்படும் போது, வாழ்வுக்கும் ஆற்றலுக்கும் ஊற்றாயிருக்கின்றது. 'நற்செய்தி விசுவசிப்போர் அனைவர்க்கும் மீட்பளிக்கும் வல்லமையாய் உள்ளது" (உரோ1:16). இறைவாக்கைக்கேட்டு ஆழ்ந்து தியானிப்பதால் இறைமக்கள் நிறைவான விசுவாசம், நம்பிக்கை, மற்றும் அன்போடு தங்கள் பதிலை மன்றாட்டாலும். தற்கையளிப்பினாலும் செயல்முறையில் பதிலுரைக்க ஆற்றல் பெறுகின்றனர். அது திருப்பலியோடு நின்று விடாமல், தங்கள் கிறிஸ்தவ வாழ்வு அனைத்துமே இத்தகைய பதிலுரைகளாக மாறிட வழி பிறக்கும். அடுத்தப்படியாக, திருப்பலியில் இறைவார்தை அமைக்கப்பட்டிருக்கின்ற விதத்தை சற்று அலசுவோம்.

மிகவும் சுருக்கமாகச் சொன்னால், 'இறைமக்கள் தங்கள் விசுவாசத்தையும். மீட்பின் வரலாற்றையும் மேன்மேலும் ஆழ்ந்து அறிய வேண்டும" என்ற நோக்குடனேயே இது அமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் வாசக நூல் மீட்பு வரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகளையும், சொற்றொடர்களையும் விவிலியத்திலிருந்து எடுத்து, பொருத்தமாக அளிக்கிறது. இவ்வாறு திருப்பலியில் சிறிது சிறிதாக மீட்பின் வரலாறு இறைவாக்கு வழியாக நினைகூறப்படுவதனால், நற்கருணையில் பாஸ்கா மறைபொருள். மறுபிரசன்னமாகி அது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு என்பதை தெளிவுபடுத்துகிறது.

வாசகங்களின் அமைப்பை நோக்குமிடத்து, ஞாயிற்றுக் கிழமைளுக்கும், பெருவிழாக்களுக்கும் முக்கியமான பாடல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் ஓர் குறிக்கப்பட்ட காலத்திற்குள் இறைவாக்கின் மிகச் சிறந்த பகுதிகள் மக்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட ஏதுவாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பெருவிழா நாட்கள் மூன்று ஆண்டு கால வட்டத்திற்குள் பிரிக்கப்பட்டு வகுக்கப்பட்டுள்ளன. வார நாட்களுக்கான வாசகங்கள் கீழ்க்கண்டவாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஓவ்வொரு வாரநாள் திருப்பலியிலும் இரண்டு வாசகப்பகுதிகள் உள்ளன. ஆண்டின் பொதுக் காலத்திலுள்ள 34 வாரங்களில் வரும் வார நாட்களுக்கு நற்செய்தி ஒரே கால வட்டமாக அமைந்துள்ளன. இதில் முதலாவதாக மாற்கும் (வாரம் 1-9), பின்னர் மத்தேயுவும் (வாரம் 10-21), இறுதியாக லூக்காகவும் (வாரம் 23-34) வாசிக்கப்படுமாறு வாசகங்கள் அமைந்துள்ளன.

பொதுக்காலத்தின் வார நாள்களுக்கான வாசகத் தொகுப்பில் பழைய ஏற்பாட்டின் ஒரு சில தவிர எல்லாப் புத்தகங்களும் உட்பட்டிருக்கின்றன. மேலும் புதிய ஏற்பாட்டின் திருமுகம் ஒவ்வொன்றின் பொருள் விளங்குமாறு, ஏடுகளிலிருந்து வாசகங்கள் மிக விரிவாக எடுக்கப்பட்டுள்ளன. இத்தோடு திருவழிபாட்டின் வெவ்வேறு காலங்களுக்கேற்றவாறு திருவருகை, திருபிறப்பு, தவக்காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றில் அவ்வவ் மீட்பின் மறையுண்மைகளை தெளிவுபடுத்தும் விதங்களில் இறைவாக்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஈற்றிலே மேற்கூறியவை உங்களுக்கு ஓரளவாவது பயன்படும் என நம்புகின்றேன். அப்படி இல்லையெனில் மன்னிக்கவும்.
✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு ✠

திருப்பலியில் இறைவார்த்தை வழிபாட்டை தொடர்ந்து இடம் பெறுவது நற்கருணை வழிபாடாகும். இதனை நாம் இரு கூறுகளாக பிரிக்கலாம். ஒன்று, அப்ப இரசத்தை காணிக்கையாக கொண்டு வருதல், அதனை ஆயத்தம் செய்து பீடத்தின் மேல் வைத்தல். இரண்டாவது, நற்கருணை மன்றாட்டு.
✠ காணிக்கைகளை தயார் செய்தல்:

முன்னர் அதாவது தொடக்க காலத்தில் இருந்தே, பீடத்திற்கு காணிக்கைகளை கொண்டு வரும் பழக்கம் இருந்தது. திருப்பலியில் பயன்படுத்த தேவையான அப்பம், இரசம் இதில் முதன்மையானது. முன்னர் “காணிக்கைகளை ஒப்புக்கொடுத்தல்” என்று சொல்லப்பட்ட இப்பகுதி இப்பகுதி இப்பொழுது “காணிக்கைகளை தாயார் செய்தல்” என்று அழைக்கப்படுகிறது. இதில் அப்பமும் தண்ணீர் கலந்த இரசமும் பீடத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. கிறிஸ்துவும் அப்பத்தையும் இரசத்தையும் பயன்படுத்தினார். ஏழைகளோடு பகிர்ந்து கொள்வதற்கும், ஆலய பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் பொருட்களும் நாளடைவில் காணிக்கைப் பவனியில் இடம் பெறலாயின. அப்பமும், இரசமும் பவனியில் இறுதியில் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால் காணிக்கைப் பொருட்கள் பீடத்திற்குக கீழ் அல்லது வேறு இடத்தில் வைக்க வேண்டும். பீடத்தில் அல்ல.

✠ அர்த்தமுள்ள அடையாளக் காணிக்கை

அண்மைக் காலங்களில் புதியதொரு பழக்கம் உருவாகியுள்ளது. அதாவது, சில பொருட்களையும் விசுவாசிகளின் மன்றாட்டையும் இணைப்பது ஒர் தவறான செயலாகும். ஏனென்றால் இறைவார்த்தை வழிபாட்டை நிறைவு செய்வது விசுவாசிகளின் மன்றாட்டு. நற்கருணை வழிபாட்டை ஆரம்பிப்பது காணிக்கை பவனி. மேலும் காணிக்கைகள் ஏழைகளோடு பகிர்வதற்கு என்பதை மறக்ககூடாது.

✠ உண்டியல்

திருப்பலியின் போது ஏன் உண்டியல்? “இப்போது இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்து பார்ப்போம்...” “நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். “உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.” (1 கொரி16:1-4) இது தொன்று தொட்டு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. சரியான முறைப்படி பார்ப்போமேயானால் இறைமக்களிடம் சேகரித்த பின்பே காணிக்கைப் பவனி இடம்பெற வேண்டும். காணிக்கைக்காக உண்டியல் சேகரிக்கும் போதும் பவனியின் போதும் பாடல்கள் இடம் பெறலாம். ஒவ்வொரு திருப்பலியிலும் ஒருவர் கொடுக்கக்கூடிய சிறப்புக் காணிக்கையாக அமைவது “தன்னைக் கொடுப்பதே” ஆகும். இதனையே தூய பவுலும் வலியுறுத்துகிறார். “கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.” (உரோ 12:1) இறைவன் எம்மிடம் எதிர்பார்ப்பது பொன்னையும், பொருளையும் அல்ல, மாறாக நொறுங்குண்ட என் இதயத்தையே இறைவன் என்னிடம் எதிர்பார்க்கிறார். அப்படியானால் காணிக்கை தேவையில்லை தானே எனச் சொல்வது தவறு. நம்மையே நாம் இறைவனுக்கு காணிக்கையாக்குகின்றோம் என்பதனை சில அடையாளப் பொருட்கள் வழியாக வெளிப்படுத்துகிறோம்.

✠ அப்ப, இரசத்தை தயார் செய்தல்.

இது காணிக்கை நேரமல்ல, மாறாக, காணிக்கையை ஆயத்தம் செய்தல். அப்ப, இரசம் ஆகிய இறைவனின் கொடைகளுக்காக இறைவனை போற்றுவதாகும். இறைவனின் பராமரிப்பினால் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு நன்றி கூறுவதோடு, அவையே எங்களுக்கு “வாழ்வளிக்கும் அப்பமாகவும், ஆன்மிக பானமாகவும் மாற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

திராட்சை இரசத்தோடு தண்ணீர் சேர்க்கப்படுவது எதற்காக? யூதர்கள் இரசத்தோடு தண்ணீர் கலந்தே பருகினார். இரசத்தின் செறிவுத் தன்மையை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டது திருச்சபை தந்தையர்கள் இதில் ஆன்மீக தன்மையை கண்டனர். புனித சிப்ரியன் “இது கிறிஸ்துவுடன் நாம் ஒன்றாகக் கலந்து விடுகிறோம்” என்று பொருள்படும் என்பார்கள். தண்ணீரும், இரசமும், மனித, தெய்வீக பண்புகளை வெளிப்படுத்துகிறது. இதனை இரசத்தில் தண்ணீர் கலக்கும்போது சொல்லப்படுகின்ற செபம் தெளிவுபடுத்துகிறது.

“கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத் திருவுளமானார் இத்தண்ணீர், இரச மறைப்பொருள் வழியாக, நாமும் அவருடன் இறை இயல்பில் பங்கு பெறுவோமாக” அடுத்து குருவானவர் தன்கைகளை கழுவுகிறார். இறைவனின் முன்னிலையில் வருமுன், இஸ்ரயேலர் தம்மைக் கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் (வி.பி 19:10-11) நாடு கடத்தப்பட்டு மீண்டும் இஸ்ரயேலுக்கு வந்த பொழுது, கடவுள் மக்களின் அகத்தூய்மையை வலியுறுத்துகிறார். (எசேக் 36:25) அதே போன்று இன்று குருவானவர் தன்கைகளை கழுவும் போது பின்வரும் செபத்தை செல்வார். “ஆண்டவரே என் குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் துய்மையாக்கும்” (தி.பா 51:2)
✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு - II ✠

திருப்பலியின் மையம் நற்கருணை மன்றாட்டாகும். இது ஒருசிலர் நினைப்பது போன்று பல செபங்களின் தொகுப்பு அல்ல. மாறாக பல கூறுகளைக் கெண்ட ஒரு நீண்ட செபமாகும். இப்படி எழுதும் போது ஏனைய திருப்பலிச் செபங்கள் முக்கியமற்றவை என்று பொருள் கொள்ள கூடாது.

நற்கருணை மன்றாட்டு தொடக்கவுரையில் அமைந்துள்ள 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்ற உரையாடலோடு ஆரம்பமாகிறது. 'ஆண்டவர் உம்மோடு இருப்பாராக" என்ற வார்த்தைகள் திருவிவிலியத்தில் பல்வேறு வடிவங்களில் பரவிக் கிடக்கின்றன.

மனிதரிடத்தில் குறிக்கப்பட்ட, பணிக்கப்பட்ட பணியில் இருப்பதாக கடவுள் அளிக்கும் வாக்குறுதி மோயீசனுக்கு கடவுள் 'நான் உன்னோடு இருப்பேன்" (வி.ப 3:12), யோசுவாவுக்கு அதே வாக்குறுதி (1:5) எரேமியா இறைவாக்கினரின் கடின பணி வாழ்வில் இறைவன் வாக்குறுதி அளிக்கின்றார்(1:8, 'நான் உன்னோடு இருக்கின்றேன்"), இஸ்ரயேலை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கிதியோனுக்கு இறைவன் அவருடைய தூதர் மூலம் உத்தரவாதம் 'வலிமைமிக்க வீரனே" 'ஆண்டவர் உன்னோடு இருக்கின்றார்" (நீதித்தலைவர்கள் 6:12) அதே போன்று கிறிஸ்துவின் உன்னத பணிக்காய் அனுப்பப்பட்டவிருக்கின்ற, திருப்பலி நிறைவேற்ற கூடியிருக்கும் இறைமக்கள் சமூகத்தோடு இறைவன் உறைகின்றார் என்பதை வலியுறுத்துகின்றது.

அடுத்து குரு 'இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்" என்று கூறி தகுதியோடு, ஆக்கபூர்வமாக பங்கேற்ற அழைக்கின்றார். ஆதற்கு இறைமக்கள் 'நாம் ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்" என்று பதில் அளிக்கின்றனர். இறுதியாக 'நம்இறைவனாகிய ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம்" என்றுரைத்து கிறிஸ்து வழியாக இறைவன் நமக்கு செய்துள்ள எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி கூறுமாறு அழைக்கின்றார். திருப்பலி என்பது நாம் பெற்றுக் கொண்ட மீட்பு எனும் பெரும் கொடைகளாக, கிறிஸ்துவின் மீட்பளிக்கும் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவது தகுதியும், நீதியுமானதே என்று மக்கள் பதில் அளிக்கின்றனர்.

1. பின்னணி :

1.1 கடைசி இராவுணவு

நற்கருணை மன்றாட்டுக்கள் தோன்றுவதற்கு மூலக் காரணம் யாது? நற்செய்தி பகுதியிலே கடைசி இராவுணவு நிகழ்வின் போது இயேசு தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் 'அப்பத்தை தம் திருக்கரங்களில் எடுத்து, 'இறைவனுக்கு நன்றி கூறி, வாழ்துரைத்து" (மாற் 14:17) என்ற நற்செய்தி பகுதி மூலக் காரணமாக அமைந்துள்ளது. கடைசி இராவுணவு, யூதர்களின் பாஸ்கா விழாவின் போது இடம் பெற்றது என்பதும் அப்பொழுதே இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார் என்பதையும் மறந்து போகலாகாது.

1.2 யூதர்கள் பெராக்கா (BERAKAH)

பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்கு ஒவ்வொரு உணவு வேளையும் முக்கியமானது. மேலும் ஒவ்வொரு உணவும் வழிபாட்டு தன்மை உடையதாக இருந்தது. அதிலும் சிறப்பாக பாஸ்கா விழாவிற்கு முந்தின நாள் மாலை உணவு திருவழிபாட்டு தன்மையுடையதாக இருந்தது. மேலும் அப்பத்தையும், இரசகிண்ணத்தையும் கையில் எடுத்து, இறைவனுக்கு, அவருடைய அன்புக்கும், கருணைக்கும், வியத்தகு செயல்களுக்கும் நன்றி கூறுவது 'இறைபுகழ்ச்சியாக" அமைந்தது. இதனையே எபிரேய மொழியில் 'பெராக்கா" என்று அழைப்பதுண்டு.

1.3 புதிய ஏற்பாடு

'இறைவனின் புகழை உரைத்தல்" அல்லது இறைவனுக்கு நன்றி செலுத்துதல் என்பது ஒரே கருத்தையே வலியுறுத்துக்கின்றது. பழைய ஏற்பாட்டில் இதனை வெளிப்படுத்த 'பெராக்கா" (Berakah)) என்ற எபிரேயச் சொல் பயன்படுத்தபட்டாலும், புதிய ஏற்பாட்டு கிரேக்க மொழியின் படி 'நன்றி கூறுதல்" (Eucharistein), 'புகழுரைத்தல்" (Eulogein) என்றசொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தோன்றியது எவ்வாறு?

திருச்சபையின் ஆரம்பகாலத்தில் நற்கருணை மன்றாட்டுக்கள் இன்று உள்ளது போல் எழுதிவைக்கப்பட்ட அதிகாரபூர்வமான செபங்களாக இருக்கவில்லை. தொடக்க காலத்தில் நற்கருணை மன்றாட்டுக்கள் தேவைக்கும், சூழலுக்கும் ஏற்ப சொல்லப்பட்டன. ஆகவே 4ஆம் நூற்றாண்டின்முன், ஒரு நற்கருணை மன்றாட்டு மாத்திரம் இருந்ததாகவும், மேலும், அது திருவழிபாட்டுக்கு தலைமை ஏற்பவரின் திறமைக்கு ஏற்பச் சொல்லப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றார். 4ஆம் நூற்றாண்டு முதல் இலத்தீன் மொழி, வழிபாட்டு மொழியாக மாறியது. இக்காலகட்டத்தில் தான் படிப்படியாக உரோமையில் 'உரோமை நற்கருணை மன்றாட்டு" உருவாகியது. இதனை ROMAN CANON அல்லது CANON I என்று அழைப்பது உண்டு.

“CANON” என்ற சொல்லுக்கு 'அளவு கோல்" என்று பொருள் கொள்ளலாம். அதாவது எந்தவித மாற்றமும் இல்லாமல், செபத்தை கூட்டியோ குறைத்தோ செபிக்க முடியாது. எழுதியுள்ளபடியே செபிக்க வேண்டும். 2ம் வத்திக்கான் சங்கம் வரை இந்த உரோமை Canoan தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏன் இத்தகைய இறுக்கம்?

4ம் நூற்றாண்டு வரை சூழலுக்கும், தலைமை ஏற்பவரின் திறமைக்கும் ஏற்ப செபிக்கப்பட்ட இச்செபம் இத்தகைய இறுக்க நிலைக்கு செல்வதற்கு காரணம் அக்காலத்தில் முளைக்கத் தொடங்கிய தப்பறை கொள்கைகள் (உ + ம் ஆரியனிஸம் (Arianism). இக்கொள்கைகளுக்கு எதிராக கிறிஸ்தவ சமய கோட்பாடுகளை பாதுகாக்கவும், உறுதிப்படுத்தவும் அவசியம் ஏற்பட்டது. எனவே தான் எழுதப்பட்டஅதிகாரப் பூர்வமான ஒரேயொரு நற்கருணை மன்றாட்டு 1970 வரை பன்படுத்தப்பட்ட வந்துள்ளது. இன்று பல புதிய நற்கருணை மன்றாட்டுகள் தோன்றிவிட்டன.
✠ திருப்பலியில் நற்கருணை வழிபாடு - III ✠

நற்கருணை மன்றாட்டுக்கள்

இப்பதிவிலே நற்கருணை மன்றாட்டில் உள்ள பல்வேறு கூறுகளைப் பற்றி பார்ப்போம். அந்த வகையிலே நற்கருணை மன்றாட்டின் ஆரம்பமாக இருப்பது தொடக்கவுரை.

✠ தொடக்கவுரை ✠

தொடக்கவுரை நற்கருணை மன்றாட்டின் ஆரம்பமாக இருக்கின்றது. அதாவது 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்ற உரையாடலுடன் தொடங்குவது. தொடக்கவுரையின் நோக்கம் யாது என்பதை உரையாடலில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது 'நம் இறைவனாகிய ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம், அது தகுதியும் நீதியுமானதே" ஆக நம் கடவுளை போற்றுவது தான் தொடக்கவுரையின் நோக்கம் இதனை ஆங்கிலத்தில் "Preface'' என்றழைப்போம். மீட்பின் வரலாற்றில் கடவுள் ஆற்றியுள்ள வியப்பிற்குரிய செயல்களையும், அன்புக்குரிய செயல்களையும் எடுத்துரைத்து நன்றி சொல்லி அவரை புகழ்வதாகும். இன்று நமது திருப்பலிப் புத்தகத்தில் திருவழிபாட்டுக் காலங்களுக்கும், விழாக்களுக்கும், புனிதர்களின் விழாவிற்கும், பல்வேறு தேவைகளுக்கும் ஏற்ப நூறுக்கும் மேற்பட்ட தொடக்கவுரைகள் உள்ளன. இனிமேல் திருப்பலியில் பங்கேற்கும் போது, நாம் எதற்காக நன்றி கூறுகின்றோம் என்பதை அவதானமாக கவனியுங்கள். அர்த்தம் உணர்ந்து பங்கு கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தொடக்கவுரையை நிறைவுக்கு கொண்டு வருவது தூயவர், தூயவர் என்ற ஆர்ப்பரிப்பு பாடல்.

✠ தூயவர்... தூயவர்.... ✠

இது வானதூதரின் வாழ்த்தொலியும் 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர், மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" (எசா6:3) இயேசு எருசலேமுக்குள் நுழைந்த போது, மக்கள் கூட்டம் எழுப்பிய ஆர்ப்ரிப்பும் 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் ஓசான்னா" (மத்21:9) இணைத்த ஓர் பாடலாகும். ஒவ்வொரு திருப்பலியிலும் பாடுவதே சிறந்தது. காணிக்கை மீது தூய ஆவி தூயவர் என்ற பாடலைத் தொடர்ந்து காணிக்கை பொருட்களாகிய அப்ப, இரசம் மீது அவற்றைப் புனிதப்படுத்தவும், அவை இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுவதற்கு தூய ஆவியானவரை வேண்டும் நேரமிது. இறைவன், தன் ஆவியின் வல்லமையில் இதனை செய்து முடிக்கின்றார். 'ஆகவே இறைவா, உம் தூய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளை புனிதப்படுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசுவின் உடலும், இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக". எனவே இது குருவானவருடைய ஆற்றலால் அல்ல, தூய ஆவியின் வல்லமையால் ஏற்படுகின்றது.

✠ நற்கருணையை ஏற்படுத்தல் ✠

இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை விவரிக்கும் இப்பகுதி, நற்கருணை மன்றாட்டின் மிக முக்கிய பகுதியாகும். புதிய ஏற்பாட்டில் நற்கருணையை ஏற்படுத்திய வரலாற்றை யோவான் தவிர்ந்த ஏனைய மூன்று நற்செய்தியாளர்களும், பவுல் அடிகளாரும் தந்துள்ளார்கள். இவர்கள் வெவ்வேறு வேறுபாடுகளோடு இந்நிகழ்வை எழுதி வைத்துள்ளார்கள். இதற்கு காரணம் இவர்கள் எழுதுவதற்கு முன்னதாக, கிறிஸ்தவர்கள் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்திய வெவ்வேறு வாய்மொழி பாடல்கள் இவை. இவை மிகவும் பழமை வாய்ந்தவை. முன்னைய திருத்தந்தை மறைந்த 6ம் பவுல், அனைத்து நற்கருணை மன்றாட்டுக்களிலும் ஒரே மாதிரியான பாடல்கள் இருக்க வேண்டுமென விரும்பினார். இன்று ஒரே பாடலையே அனைத்திலும் பயன்படுத்துகின்றோம். இந்த வேளை ஆராதனைக்குரிய நேரமல்ல, சில இடங்களில் இவ்வேளையில் 'என் ஆண்டவரே என் தேவனே" என மக்கள் ஆர்ப்பரிப்பு சொல்வதை காண்கின்றோம்.

இந்த நடைமுறையில் தவிர்க்கப்பட வேண்டியதாகும். இருப்பினும் மறைமாவட்ட ஆயரின் அனுமதி இருப்பின் பயன்படுத்தலாம். நம்பிக்கை மறைபொருள் ஆர்ப்பரிப்பு நற்கருணை ஏற்படுத்தப்பட்ட பகுதியை தொடர்ந்து, இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், அவரின் வருகையை எதிர் நோக்கோடு காத்திருக்கவும் வேண்டும் என விளக்குவதாய் அமைகின்றது.

இதனையே பின்வரும் ஆர்பரிப்பு காட்டும் 'ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்" புதிய திருப்பலி புத்தகத்தின் படி மூன்று மாற்று பாடல்கள் பயன்பாட்டுக்காக தரப்பட்டுள்ளன.

✠ மக்கள் மீது தூய ஆவி ✠

காணிக்கை பொருளான அப்ப, இரசம் கிறிஸ்துவின் உடலாக இரத்தமாக மாற வேண்டி கூவியழைத்த தூய ஆவி மீண்டும் கூவியழைக்கப்படுகிறது. கூடியுள்ள இறைமக்கள் மீது பொழியப்பட வேண்டப்படுகின்றது. இறைமக்கள் மீது வேண்டப்படும் தூய ஆவி என்ன செய்ய வேண்டும் என கேள்வி கேட்க கூடும். 'உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள், கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று, கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக" கிறிஸ்துவின் மறையுடலாம் இறைமக்கள் சமூகம் ஒன்று சேர்க்கப்பட வேண்டுமென்று குருவானவர் செபிக்கின்றார்.

✠ திருச்சபையின் தேவைகளுக்காக ✠

இப்பகுதியிலே வாழ்வோருக்காக மன்றாடுகின்றோம். திருத்தந்தை உட்பட பல்வேறு பணிநிலைகளில் இருக்கும் அனைவருக்காகவும், மேலும் மக்கள் அனைவரும் ஆழ்ந்த இறையன்பில் நிறைவு பெற வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.

✠ இறந்தோருக்காக ✠

வாழ்வோருக்காக மன்றாடியதைத் தொடர்ந்து, இப்பொழுது இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு, கிறிஸ்துவில் துயில் கொள்ளும் அனைவரையும், இறைவன் கருணையோடு நினைவு கூர்ந்து விண்ணகப் பேரின்பத்தில் அவர்களுக்குப் பங்களிக்க வேண்டுமென்று பரிந்துரைக்கின்றார்.

✠ தூயோர் நினைவு ✠

நற்கருணை மன்றாட்டின் நிறைவுக்கு முன்னதாக, தூயோரை நினைவு கூறுகின்றோம். ஏற்கனவே விண்ணக வாழ்வின் நிறைவை சுவைக்க பேறுபெற்ற கன்னிமரியாள், திருத்தூதர்கள், புனிதர்கள், இவர்களின் பரிந்துரையால், பயணிக்கும் திருச்சபை இவர்களோடு தோழமை கொண்டு முடிவில்லா வாழ்வில் பங்பெற மன்றாடுகின்றோம்.

✠ இறுதிப் புகழுரை ✠

நற்கருணை மன்றாட்டின் 'கொடுமுடி" அல்லது 'சிகரம்" இது தான், நன்றி, புகழ்ச்சி இவற்றின் உச்சக்கட்டம் இது. இதனை 'இறுதி சிறப்புப் புகழுரை" என்றழைப்போம். திருச்சபை முழுவதும் தூய ஆவியோடு ஒன்றித்து, கிறிஸ்து வழியாக விண்ணக தந்தைக்கு நன்றியும், புகழும் கூறுகின்றது. இம்மன்றாட்டின் இறுதியில் மக்கள் அனைவருமாக 'ஆமென்" என்று பதிலளிப்பர். சில இடங்களில் இச்செபத்தை, அதாவது இறுதி புகழுரையை மக்கள் செபிப்பது வழக்கமாக உள்ளது. இது தவறான நடைமுறையாகும்.
✠ திருவிருந்துச் சடங்கு ✠

5ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நற்கருணை மன்றாட்டைத் தொடர்ந்து, நற்கருணை விருந்து இடம் பெற்றது. 'டிடாக்கே" என்ற ஆவணத்திலிருந்து இது தெளிவாகின்றது. திருவிருந்துச் சடங்கில் இருக்கும் பல்வேறு கூறுகள் வெவ்வேறு காலங்களில் சேர்க்கப்பட்டவையாக உள்ளன. பல்வேறு காலங்களில் இக்கூறுகளின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஈற்றில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தினூடாக இக்கூறுகள் ஓர் கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டன. இன்று உரோமைத் திருப்பலியில் நற்கருணை திருவிருந்து சடங்கில் பின்வரும் கூறுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1. இயேசு கற்பித்த செபம்,
2. அமைதிக்கான சடங்கு
3. அப்பத்தை பிட்குதல்
4. சிறுதுண்டு திரு அப்பம் இரத்தத்தோடு கலத்தல்
5. உலகின் பாவம் போக்கும் செம்மறி
6. குருவானவர் தம்மை ஆயத்தம் செய்யும் தனிப்பட்ட செபம்,
7. திருவிருந்துக்கு அழைப்பு, திருவிருந்துப் பல்லவி அல்லது பாடல்,
8. நன்றி மன்றாட்டு

✠ இயேசு கற்பித்த செபம் ✠

திருப்பலியில் வசீகரத்தின் பின் செபம் சொல்வது மிகவும் பழமையான மரபாகும். 4 ஆம் நூற்றாண்டு அளவில் இது நடைமுறையில் இருந்துள்ளது. நற்கருணை மன்றாட்டுக்குப் பிறகும், திருவிருந்தில் பங்கேற்கும் முன்னும் இச்செபம் சொல்லப்பட்டது.

ஏன் இவ்விடத்தில் இச்செபம் சொல்லப்பட்டது?

இச்செபத்தின் முதல் பகுதி இறைவனை புகழ்வதாகும், ஆகவே நற்கருணை மன்றாட்டின் ஓர் தொடர் போன்று உள்ளது. மேலும் இரண்டாம் பகுதி அன்றாட உணவிற்காக, பாவ மன்னிப்புக்காக செபிப்பது திருவிருந்து சடங்கோடு இணைக்கின்றது. இயேசு கற்பித்த செபம் நற்செய்தியாளர்கள் மத்தேயு 6: 9- 13, லூக்கா 11:2-4 ஆகியோரால் தரப்பட்டுள்ளன. இருப்பினும் மத்தேயு நற்செய்தியில் உள்ள செபமே திருப்பலியில் பயன்படுத்தப்படுகின்றது.

ஆண்டவரே தீமை... (THE EMOLISM) இயேசு கற்பித்த செபத்தின் தொடர்ச்சியாக 'ஆண்டவரே தீமைகள்..." என்ற செபம் இடம் பெறுகிறது. இச்செபத்திற்கு கிரேக்க மொழியை தழுவிய ஒரு சொல் பாவிக்கப்படுகின்றது. அது “EMOLISM” என்றழைக்கப்படுகின்றது. இதன் பொருள் 'இடைச் செருகல்" என்பதாகும். இயேசு கற்பித்த செபத்திலே 'எங்களை தீமைகளில் இருந்து பாதுகாத்தருளும்" என்று செபித்து முடிக்க, அதன் தொடர்ச்சியாக அனைத்து தீமைகளிலிருந்தும் எம்மை பாதுகாக்க, அதாவது குழப்பங்கள், பாவம் போன்றவற்றிலிருந்து சகலவிதமான அங்கலாய்ப்புக்களில் இருந்து பாதுக்க வேண்டுவதோடு, நீதி நிறைந்த அமைதி குடி கொள்ள மன்றாடுகின்றோம்.

உலகில் அமைதி வேண்டுமெனில் தனிமனித வாழ்வில் அமைதி தேவை என்பதை மறத்தலாகாது. ஈற்றிலே நாம் இறையேசுவின் மீள் வருகைக்காக மகிழ்வோடு கூடிய எதிர்நோக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று குருவானவர் செபிக்க, 'ஏனெனில், அரசம், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமக்கே" என்று இறைமக்கள் சமூகம் ஆர்ப்பரித்து பதில் சொல்லும்.

✠ அமைதிக்கான செபம் ✠

திருவிருந்தில் பங்கேற்குமுன் சமாதான உறவுப் பரிமாற்றம் அவசியம். இச்செபம் கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு கொடுத்த வாக்குறுதியோடு ஆரம்பாமாகிறது. 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன் என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்".. (யோ 14: 27) எபிரேய மொழியில் அமைதிக்கு 'ஷாலோம்" என்பர். இதன் பொருள் 'நலமாக இருத்தல்" அதாவது இறைவனோடு, அயலாரோடு, இயற்கையோடு, தன்னோடு, நலமான உறவு இருப்பது அவசியம் அமைதியோடு வாழ்வதற்கு. இத்தகைய அமைதி இயேசுவின் பாஸ்கா மறைபொருளினால் நமக்கு கிடைத்த கொடை.

சமாதான வாழ்த்து மற்றும் பரிமாற்றம் இச்செபத்தைத் தொடர்ந்து, உறவின் வாழ்த்தை அறிவித்து, அமைதியை பகிர்ந்து கொள்ள இறைமக்களை குரு அழைக்கின்றார். ஏனெனில் தம் சகோதர, சகோதரிகளோடு சமாதானம் இன்றி, நற்கருணை விருந்தில் பங்கேற்பது பொருள் அற்றது. (மத் 5:24) ஆகவே மக்கள் உண்மையாகவே மற்றவரோடு சமாதான உறவை பகிர வேண்டும். ஒருவரை ஒருவர். விசேஷமாக எனக்கு தீங்கு செய்தவரை நான் மன்னிக்க வேண்டும். கடமைக்காக, கட்டாயத்திற்காக, வாடிக்கையாக இச் சடங்கில் பங்கேற்கக்கூடாது. ஒருவர் ஒருவருடைய முகத்தைப்பார்த்து, புன்முறுவலோடும், மகிழ்வோடும், சமாதானத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் இரு பக்கமும் யாருமில்லாத போதும் கும்பிடுவதும், தலையாட்டி போன்று இருபக்கமும் தலையாட்டுவதும் பொருளற்றது. எனவே தவிர்க்கப்படவேண்டியது.
✠ அப்பம் பிட்குதல... (உலகின் பாவம்...)  ✠

சமாதானப் பகிர்வை தொடர்ந்து இடம் பெறுவது 'அப்பம் பிட்கும்" சடங்காகும். இது மிகவும் பழமையான சடங்காகும். மேலும் ஆதித்திருச்சபையிலே நாம் இன்று திருப்பலி என்று அழைப்பதை அவர்கள் 'அப்பம் பிட்குதல" என்றே அழைத்தனர். (தி.ப. நூல் 2:42, 46 ; 20:7, 1கொரி 10:16). அப்பம் ஏன் பிட்;க்கப்பட வேண்டும்? பகிர்ந்து கொடுப்பதற்கு என்பதே பதில். முன்னர் மக்கள் பெரிய அப்பங்களை கொண்டு வந்தனர். ஆகவே அவை பகிர்வதற்கு உடைக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் 'உலகின் பாவம் போக்கும்" என்ற செபம் சொல்லாப்படும், இச்செபம் கி.பி7ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செபத்தின் பின்னனி யோ 1:23 இல் திருமுழுக்கு யோவான் இயேசுவை உலகின் பாவம் போக்கும் செம்மறியாக சுட்டிக் காட்டுகின்றார். (1கொரி 5:7, 1பேதுரு 1: 18-19)

ஆனால் இன்று தனித்தனி அப்பங்கள் சிறு, சிறு துண்டுகளாக (வட்டம்) தயார் செய்யப்பட்டு திருப்பலியில் பயன்படுத்தப்படுகின்றது. எனவே குரு தமக்குரிய பெரிய அப்பத்தை மட்டும் உடைத்து, ஒரு சிறு துண்டை இரத்தத்தில் கலக்கின்றார். இது தொடக்க காலத்தில் இருந்தே வரும் "COMMINGLING” என்றழைக்கப்படும் மிகப்பழமையான பழக்கமாகும். இது உரோமை ஆயராம் திருத்தந்தைக்கும் ஏனைய தலத் திருச்சபைக்குமிடையே உள்ள 'ஒன்றிப்பின் அடையாளம்" என்று சொல்லப்படுகின்றது. திருத்தந்தை அருகில் இருக்கும் பங்குகளுக்கு தனது திருப்பலியில் பயன்படுத்தப்படும் அப்பத்தில் இருந்து ஒரு சிறு துண்டை பகிர்வார். அவர்கள் (குரு) தங்களுடைய அடுத்த திருப்பலியில் இரத்தத்தில் இடுவார்கள். அவ்வாறே ஏனைய ஆயர்களும் தங்கள் குருக்களோடு பகிர்வார்கள். இது கிறிஸ்துவின் பலியின் ஒன்றிப்பினை குறித்துக் காட்டுகின்றது.

✠ நன்றி மன்றாட்டு ✠

நற்கருணை விருந்தை தொடர்ந்து இடம் பெறுவது நன்றி மன்றாட்டு. நற்கருணை விருந்தின் பொழுது பொருத்தமான பாடல் பாடப்படுகின்றது. நற்கருணை பெற்றவர்களும், பெறவிருப்பவர்களும் பாடலில் பங்கேற்க வேண்டும். நற்கருணை பெற்றவர்கள் ஆண்டவர்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற உணர்வில் பெரும்பாலும் அமைதியாகி விடுவார்கள். அப்படியில்லாமல் மனதாலே ஆண்டவர்க்கு நன்றி சொன்ன வண்ணமே தொடர்ந்து பாடலில் பங்கேற்பது வரவேற்கத்தக்கது. அனைவரும் நற்கருணை பெற்றுக் கொண்டதன் பிற்பாடு, புனித பாத்திரங்களை துப்பரவு செய்ததன் பிற்பாடு, குருவானவர் மன்றாடுவோமாக என்று அனைவரையும் செபிக்க அழைக்கின்றார். இதனை நன்றி மன்றாட்டு என்போம். குருவானவருடைய அழைப்பை தொடர்ந்து அனைவரும் சற்று நேரம் மௌனமாக ஆண்டவர்க்கு நன்றி கூறி செபிப்பார்.

அதனைத் தொடர்ந்து குருவானவர் தந்தையாம் கடவுளுக்கு நன்றி கூறிச் செபிப்பார். வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளுக்காக, புத்துயிர் அளிக்கும் கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தத்திற்காக நன்றி கூறுகின்றார். மீட்புக்காக நன்றி கூறுகின்றார். ஈற்றிலே கிறிஸ்தவ மதிப்பீடுகளை வாழ்வாக்க, கிறிஸ்தவ ஓழுக்கத்தில் வளர, அதனூடாக வானக விருந்தில் பங்கு பெற தேவையான அருளை வேண்டி மன்றாடுகின்றார். அனைவரும் 'ஆமென்" என்று பதில் அளிப்பார். இத்தோடு நற்கருணைச் சடங்கு நிறைவு பெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருப்பலியின் நான்காம் பகுதியும், இறுதிப் பகுதியுமான 'முடிவுச் சடங்கு" இடம் பெறும்.
✠ முடிவுச் சடங்கு ✠

அறிவித்தல்கள் வழமையாக பெரும்பாலான ஆலயங்களில் நற்கருணை விருந்தின் பின், அறிவித்தல்கள், திருமண அறிவித்தல்கள் இடம் பெறுவதை காண்கின்றோம். ஆனால் இவையெல்லாம் நன்றி மன்றாட்டுக்குப் பிறகு தான் வாசிக்கப்பட வேண்டும் என்பது திருச்சபையின் போதனையாக இருக்கின்றது. (எண் 123)

இறுதி ஆசீர்:

7ம் நுற்றாண்டு சவால்களில். இறைமக்களை ஆயர் ஆசீர்வதித்தார். 11ம் நூற்றாண்டின் பின் தான் இறைமக்கள் ஆசீர்வதிக்க குருக்கள் அனுமதிக்கப்பட்டனர். 2ம் வத்திக்கான் சங்கத்தின் விளைவால் புதிய திருப்பலி புத்தகத்தில் மூன்று வகையான ஆசீர்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

(அ) சாதாரண ஆசீர் :-

இது தினமும் திருப்பலியில் பயன்படுத்தப்படும் ஆசீர் (எல்லா வல்ல இறைவன் பிதா....)

(ஆ) சிறப்பு ஆசீர் :-

இச்சிறப்பு ஆசீரில் பொதுவாக மூன்று ஆசியுரைகள் இருக்கும். இவ்வாசீர் வழங்கப்படும் போது, இறைமக்கள் யாவரும் சிரம் தாழ்த்தி வேண்டுவர். ஒவ்வொரு ஆசியுரைக்கு பிறகு மக்கள் 'ஆமென்" என்று பதில் கூறுவர். அதன் பிறகு குரு மக்களுக்கு ஆசீர் வழங்குவார்.

(இ) மக்கள் மீது மன்றாட்டு :-

மேலே கூறப்பட்ட சிறப்பு அசீருக்குப் பதிலாக குரு 'மக்கள் மீது மன்றாட்டு" எனப்படும் சிறப்பு ஆசீரை மக்கள் மீது கைகளை விரித்து செபிக்க, மக்கள் சிரம் தாழ்த்தி நின்றவர்களாய். செபத்தின் நிறைவில் 'ஆமென்" என்று பதிலளிக்க, குருவானவர் ஆசீர் வழங்குவார். இத்தகைய 'மக்கள் மீது மன்றாட்டுக்கள்" மொத்தம் 27 திருப்பலி புத்தகத்தில் உண்டு.

அனுப்பி வைத்தல்:

நிறைவாக, இறை ஆசீர் பெற்ற, இறைமக்கள் சமூகத்தை நோக்கி, குருவானவர் 'சென்று வாருங்கள் திருப்பலி முடிந்தது" என்கின்றார். மக்களும் 'இறைவா உமக்கு நன்றி" என்று பதில் அளிக்கின்றார். திருப்பலி முடிந்து மக்கள் வீட்டிற்கும். பணி வாழ்விற்கும் திரும்பிச் செல்லும் போதும், திருப்பலியில் செவி கொடுக்கப்பட்ட இறைவார்த்தைகள் வாழப்பட வேண்டுமென்பதையும், பங்கேற்ற திருவிருந்தைப் போன்று நாமும் பிறர்க்காக வாழ பலியாக்கப்பட வேண்டுமென்பதையும் நினைவூட்டி
வழியனுப்பி வைக்கப்படுகின்றனர் 'வாழ்விருந்து மலர்வதே வழிபாடு. அவ்வழிபாட்டின் தொடர்ச்சியே வாழ்க்கை" என்பதை உணர்வோம்.

திருப்பலி மறை உண்மை: முற்றும்.

உங்களுக்குத் தெரியுமா..........................

கி.பி 1200ல் திருத்தந்தை மூன்றாம் இன்னாசென்ட் திருவழிப்பாட்டிற்குறிய ஆடைகளில் பல்வேறு வண்ணங்களை நிர்ணயித்தார்.

வெள்ளை - சாதாரண திருவிழா

சிவப்பு - பெந்தகோஸ்தே மற்றும் மறைசாட்சிகளின் நினைவு
கருப்பு - நோன்பு காலங்களிலும் இறந்தோர் திருப்பலியிலும்

No comments:

Post a Comment