அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 21, 2017

நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில் இயேசு கூறியது: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். அவர்களும் சென்றார்கள்.

மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அவர்கள் அவரைப் பார்த்து, `எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றார்கள்.

அவர் அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார்.

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வை யாளரிடம், `வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார்.

எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, `கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே' என்றார்கள்.

அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, `தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார்.

இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


தாராள உள்ளம் கொண்ட கடவுள்!

ஒரு தாயும் அவளுடைய ஐந்து வயது மகனும் ஒரு பல்பொருள் அங்காடிக்குச்  சென்றார்கள். கடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களையெல்லாம் தாயானவள் வாங்கிக் கொண்டிருந்தாள். மகனோ கடையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அப்போது அவனுடைய கண்ணில் கடைக்காரருக்கு முன்னால் இருந்த இனிப்பு டப்பா பட்டது. உடனே அதிலிருந்த இனிப்பு முட்டைகளை எப்படியாது வாங்கிச் சாப்பிட வேண்டும் என்கிற ஆர்வம் அவனுக்குள் தோன்றியது. கடைக்காரர் இதைக் கவனித்துக் கொண்டே இருந்தார்.

இதற்கிடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களையெல்லாம் வாங்கிக்கொண்டு, பொருட்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக தாயானவள் கடைகாரருக்கு முன்பாக வந்து நின்றாள். அவள் பணத்தைச் செலுத்திவிட்டு கிளம்புகிற வேளையில், கடைக்கார் சிறுவனிடம், “தம்பி! உன்னை வந்ததிலிருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றேன். உனக்கு இந்த மிட்டாய்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். வேண்டுமானால் எடுத்துக்கொள்” என்றார். அவனோ அமைதியாக இருந்தான். உடனே அருகே இருந்த தாயானவள், “அதான் கடைக்காரர் சொல்கிறாரே மிட்டாய்களை எடுத்துக்கொள்” என்றாள். அப்போதும் சிறுவன் அமைதியாக இருந்தான். கடைசியாக கடைக்காரர் மிட்டாய் டப்பாய்க்குள் தன்னுடைய கையை விட்டு, மிட்டாய்களை அள்ளித் தந்தபிறகுதான், அவற்றை வாங்கிக்கொண்டு தன்னுடைய தாயோடு வீட்டுக்குக் கிளம்பினான்.

வீட்டுக்குப் போகின்ற வழியில் தாயானவள் மகனிடத்தில் கேட்டாள், “கடைக்காரர் மிட்டாய் டப்பாயிளிருந்து மிட்டாய்களை எடுத்துக்கொள் என்று திரும்பித் திரும்பச் சொன்னபோதும், ஏன் எடுக்கவில்லை”. அதற்கு மகன் தாயிடத்தில் சொன்னான், “நான் மிட்டாய் டப்பாயிலிருந்து மிட்டாய்களை எடுத்தால் என்னுடைய கையில்  கொஞ்சமாகத் தான் வரும், அதுவே கடைக்காரர் தன்னுடைய கையினால் மிட்டாய்களை எடுத்துத் தந்தால், அதிகமாக வரும் அல்லவா, அதனால்தான் நான் அப்படிச் செய்தேன்”.

இந்த நிகழ்வினைச் சொல்கின்ற ஆயர் பேர்சிவல் பெர்னாண்டஸ் (Bishop Percival Fennandez), “கதையில் வரும் கடைக்காரர் போன்று, கடவுள் எப்போதுமே தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடைகளையும், ஆசிர்வாதங்களையும் வாரி வழங்குவதில் வள்ளலாக இருக்கின்றார் என்று விளக்கம் தருவார். அதுதான் உண்மை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையை சொல்கிறார். இந்த உவமையை ஆழமாக சிந்தித்துப் பார்க்கும்போது கடவுள் எந்தளவுக்கு தன்னுடைய மக்கள்மீது அதிகமான அன்பும், இரக்கமும், தாராள உள்ளமும் கொண்டவராக இருக்கின்றார் என்று புரிந்து கொள்ளலாம். கடவுளின் இரக்கமும் தாராள உள்ளம் இயேசு சொல்லக் கூடிய இந்த உவமையில் எப்படி வெளிப்படுகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு சொல்லக்கூடிய உவமையானது ஏதோ கற்பனை கிடையாது. மாறாக, பாலஸ்தின நாட்டில் அன்றாடம் நடைபெற்ற ஒரு செயலாகும். குறிப்பாக மழைக்காலம் வருவதற்கு முன்னதாக  திராட்சைத் தோட்ட உரிமையாளர்கள் எவ்வளவு தொழிலாளிகளை அழைக்க முடியுமோ, அவ்வளவு தொழிலாளிகளை அழைத்து, தங்களுடைய திராட்சைத் தோட்டத்தில் பழங்களைப் பறிப்பார்கள். நற்செய்தியில் வரக்கூடிய திராட்சைத் தோட்ட உரிமையாளரும் அப்படித்தான் சந்தைவெளியில் நின்று கொண்டிருந்த தொழிலாளர்களை காலை ஆறு மணிக்கும், ஒன்பது மணிக்கும், நண்பகல் பனிரெண்டு மணிக்கும், பிற்பகல் மூன்று மணிக்கும், மாலை ஐந்து மணிக்கும் அழைக்கின்றார்.

திராட்சைத் தோட்ட உரிமையாளர்களின் நிலை இவ்வாறு இருக்க, தொழிலாளர்களின் நிலையோ வேறாக இருந்தது. அவர்களுக்கு ஒரு நாளுக்கான ஊதியம் ஒரு தெனாரியம் மட்டுமே. அதைக் கொண்டுதான் அவர்கள் குடும்பத்தைப் பராமரிக்கவேண்டும். ஒருவேளை ஒருநாளுக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டாலோ அல்லது தாமதமாக வேலை கிடைத்தாலோ அவர்களுடைய பாடு திட்டாட்டம்தான். இத்தகைய பின்னணியில் இயேசு கூறும் உவமையைப் பார்த்தால் இயேசு கூறும் உவமையின் அர்த்தம் மிகத் தெளிவாக விளங்கும்.

திராட்சைத் தோட்ட உரிமையாளரோ கடைசியில் வந்தவர் தொடங்கி, முதலில் வந்தவர் வரைக்கும் ஒரு தெனாரியத்தைத் தருகிறார். கடைசியில் வந்தவர்களுக்கு குறைவாகத் தந்திருக்கலாம், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக எல்லாருக்கும் ஒரு தெனாரியம் கூலியைத் தருகிறார். அவர் இவ்வாறு செய்ததன் நோக்கம், ஒரு தெனாரியத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொழிலாளியின் குடும்பம் அது கிடைக்காமல் போனால், கஷ்டம் என்பதற்காகத்தான். ஆனால், முதலில் வந்தவர்களோ தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முணுமுணுகிறார்கள். திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை, மாறாக, அவர்களுக்கு உரியதைத்தான் கொடுத்தார். ஆனால் கடைசி வந்தவர்களிடம்தான் அவர் இரக்கத்தோடும், தாராள உள்ளத்தோடும் நடந்துகொள்கிறார்கள்.

கடவுள் எப்போதும் தாராள உள்ளத்தோடுதான் நடந்துகொள்கிறார், அதனை உணராமல்தான் ஒருசிலர் அவரிடம் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

ஆகவே, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கடவுளைப் போன்று எளியவர் மீது இரக்கத்தோடும் தாராள உள்ளத்தோடும் நடந்துகொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj,Palayamkottai. 2017.

No comments:

Post a Comment