அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, November 18, 2017

ஓய்வுநாளில் நீர்க்கோவை நோயாளி குணம் பெறல்

ஓய்வுநாளில் நீர்க்கோவை நோயாளி குணம் பெறல் - லூக்கா  14: 1-6

சில ஆண்டுகளுக்கு முன்பாக, அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியில் இருக்கும் ஓர் ஆற்றங்கரையில் பெரியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் ஆற்றைக் கடந்து மறுகரைக்குப் போகவேண்டும் என்ற நோக்ககத்தோடு இருந்தார். ஆனால், அவர் தனியாளாய் இருந்ததாலும், வயதானவராக இருந்ததாலும் ஆற்றைக் கடந்துபோக அவர் மிகவும் யோசித்தார். ஆற்றில் தண்ணீர் வேறு அதிகமாகப் போய்க்கொண்டிருந்தது.
அந்நேரத்தில் தொலைவில் வீரர்கள் குதிரைகள் வருகின்ற சத்தம் கேட்டது. சரி, இந்தக் குதிரைகளில் வரக்கூடிய யாராவது ஒரு வீரரிடம் உதவி கேட்டு மறுகரைக்குச் சென்றுவிடலாம் அவர் யோசித்துக்கொண்டிருந்தார். தொலைவில் வந்துகொண்டிருந்த குதிரைகள் அருகே வரத் தொடங்கின. ஒன்று இரண்டு மூன்று என்று குதிரை வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆற்றைக் கடந்து போனார்கள். ஆனால் யாரிடமும் அவர் உதவி கேட்கவில்லை.
கடைசியில் ஒரு குதிரை வீரர் வந்தார். அவரிடம் பெரியவர், “என்னை மறுகரைக்குக் கூட்டிக்கொண்டு போகமுடியுமா?... ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருகின்றது, வயது வேறு எனக்கு அதிகமாகிவிட்டது” என்றார். அந்தக் குதிரை வீரரும் பெரியவரைக் குதிரையில் ஏற்றிக்கொண்டு மறுகரையில் அல்ல, அவர் எந்த இடத்திற்குப் போகவேண்டுமோ அந்த இடத்தில் கொண்டு போய்விட்டார். பெரியவரை அவருடைய இல்லத்தில் இறங்கிவிட்டதும் அவர் அந்த பெரியவரிடத்தில் கேட்டார், “எனக்கு முன்பாக நிறைய வீரர்கள் குதிரையில் போனார்கள். ஆனால், அவர்களிடம் எல்லாம் உதவி கேட்காமல், என்னிடத்தில் மட்டும் ஏன் உதவி கேட்டீர்கள்” என்று கேட்டார். “குதிரையில் வந்த எல்லா வீரர்களுடைய கண்களையும் நான் உற்றுப் பார்த்தேன். யாராவது எனக்கு உதவி செய்வார்களா? என்று. ஆனால், உங்களைத் தவிர ஏனையோர் யாவருமே என்னைக் கண்டுகொள்ளக்கூடவில்லை. நீங்கள்தான் என்னை ஏறெடுத்துப் பார்த்தீர்கள். உங்களுடைய கண்களில் உதவி செய்யக்கூடிய மனநிலை நிரம்பி வழிந்தது. அதனால்தான் உங்களிடத்தில் உதவி கேட்டேன்” என்றார்.
பெரியவருக்கு உதவிய அந்தக் குதிரை வீரர் வேறு யாரும் கிடையாது முன்னாள் அமெரிக்க அதிபராகிய தாமஸ் ஜெபர்சன் என்பவரே ஆவார்.   
இந்த உலகத்தில் இருக்கின்ற நிறைய மனிதர்கள்  நம்முடைய உதவியை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். நாம்தான் அவர்களைக் கண்டுகொள்ளாமல் போய்விடுகின்றோம் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் தேவையில் இருந்த, உதவி தேவைப்பட்ட நீர்கோவை நோயாளியை கண்டும் காணாமல் செல்லாமல், ஆண்டவர் இயேசு உதவி செய்து, அவருடைய நோயைக் குணப்படுத்துவதைக் குறித்துப் படிக்கின்றோம். இயேசு செய்த இந்த அற்புதச் செயல் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அது எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது என்று பார்ப்போம்.
ஆண்டவர் இயேசு ஓய்வுநாள் ஒன்றில் பரிசேயர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். இயேசு உணவருந்தச் சென்றது சாதாரண நாள் கிடையாது, ஓய்வுநாள் என்பதை நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். உணவருந்தச் செல்லும் இடத்தில் இயேசு நீர்க்கோவை நோயாளி ஒருவர் இருப்பதைக் காண்கிறார். இயேசு அவரைக் கண்டதை அறிந்த பரிசேயர்கள் அவர் அவருக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை கூர்ந்து கவனிக்கத் தொடங்குகின்றார்கள். அப்போதுதான் இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா?” என்று கேட்கின்றார். அவர்கள் அமைதியாய் இருப்பதைப் பார்த்த இயேசு நோயாளியை குணமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கிக் கூறுகின்றார், “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனைத் தூக்கிவிட மாட்டாரா?” என்று.
நோய்வைப்ப்பட்டுக் கிடந்த மனிதருக்கு ஒரு உதவியும் செய்யாத பரிசேயர்கள் மற்றும் திருச்சட்ட அறிஞர்கள், இயேசு அந்த மனிதரைக் குணப்படுத்தப் போகிறார் என்று தெரிந்ததும் அவரிடம் குற்றம் காணத் தொடங்கிவிடுகின்றார்கள்.
நம்மில் நிறையப் பேர் இப்படித்தான் தாங்களும் எந்தவொரு நன்மையும் செய்யாமல், உதவி செய்கின்றவர்களிடம் குற்றம் காணத் தொடங்கிவிடுகின்றார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை நாம் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து நற்காரியங்களைத் தேவையில் இருக்கின்ற மனிதர்களுக்குச் செய்யவேண்டும் என்பதைத் தான் இயேசுவின் வாழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பல நேரங்களில் அடுத்தவர் என்ன சொல்வாரோ, அவர் என்ன நினைப்பாரோ என்று நினைத்துதான், செய்ய நினைக்கின்ற உதவிகளையும் செய்யாமல் விட்டுவிடுகின்றோம். இந்நிலை நம்மிடத்திலிருந்து மாறவேண்டும். ஆண்டவர் இயேசுவைப் போன்று எல்லாச் சூழ்நிலையிலும் நன்மை செய்து கொண்டே இருக்கவேண்டும்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், நமக்கு வரும் இடர்பாடுகளைக் கண்டு கலங்காமல், தொடர்ந்து இறைப்பணியைச் செய்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

No comments:

Post a Comment