அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

ஆண்டவருக்கு மட்டும் ஊழியம் செய்வோம்

ஆண்டவருக்கு மட்டும் ஊழியம் செய்வோம்

நடுத்தர வயது நண்பர்கள் இருவர் காலார நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். அப்போது இருவரில் ஒருவரின் அலைபேசி ஒலித்தது. உடனே அவர் அதை எடுத்து பேச ஆரம்பித்தார். ஆனால் சத்தம் சரியாகக் கேட்கவில்லை. அதனால் வெளி ஒலிப்பானை (Speaker) அழுத்தினார். அப்போது சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது.

எதிர்முனையில் இருந்தது வெளியூரில் தங்கி படித்துக்கொண்டிருக்கும் அவருடைய அன்புமகன். இரண்டு பேரும் நீண்ட நேரம் அன்பொழுகப் பேசி, ஒருவர்மீது ஒருவருக்கு இருக்கும் தங்களது பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள்.

சிறுது நேரம் கழித்து மகன், “அப்பா! அடுத்த வாரம் எங்களுடைய கல்லூரியிலிருந்து ‘ஆல் இந்தியா டூர்’ போகிறோம். அதற்காக ஐந்தாயிரம் ருபாய் வேண்டும்” என்று பேசி முடிப்பதற்குள் அவனுடைய தந்தை, “ஹலோ மகனே! நீ பேசுவது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை. கொஞ்சம் சத்தமாகப் பேசு” என்றார். எதிர்முனையில் இருந்த மகன், “ஹெலோ அப்பா! நீங்கள் பேசுவது எனக்குத் தெளிவாகக் கேட்கின்றது. அடுத்த வாரம் எங்களுடைய கல்லூரியிலிருந்து ‘ஆல் இந்தியா டூர்’ போகிறோம்” என்று சொல்லி முடிப்பதற்குள் தந்தை இடைமறித்து, ‘மகனே! நீ பேசுவது எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. சிக்னல் இருக்கும் இடத்திற்கு வந்து பேசு’ என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.

இதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அவருடைய நண்பர், “உன் மகன் பேசுவது தள்ளிவரும் எனக்கே தெளிவாகக் கேட்கிறது. அப்புறம் எதற்கு உன்னுடைய மகனிடம் பொய் சொல்கிறாய்” என்று கேட்டார். அதற்கு அவர், “உனக்குத் தெளிவாகக் கேட்கிறதல்லவா? அப்படியானால் நீயே அவன் கேட்கும் ஐயாயிரம் ரூபாயை அனுப்பி வை” என்று ஒரு போடு போட்டார்.

பணத்திற்காக பெத்த மகனையே புறக்கணிக்கும் பெற்றோர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள் என்பதை இக்கதையானது அருமையாக எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “நீங்கள் செல்வத்திற்கும், கடவுளுக்கும் பணிவிடை செய்ய முடியாது” என்கிறார். காரணம் செல்வம் என்பது தன்னகத்தில் சுயநலத்தைக் கொண்டது. அதனால்தான் இயேசு தன்னைப் பின்பற்ற வந்த செல்வந்தனாகிய இளைஞனிடம், “நீ போய், உம் உடமைகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” என்கிறார் (மத் 19: 21). செல்வம் இறைவனின் ஆட்சியை அடைவதற்கு நமக்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கிறது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும்கூட பலவேளைகளில் நாம் ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவை மறந்து, நிரந்தரமற்ற செல்வமாகிய பணத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றோம். அதிலே நாம் மூழ்கி விடுகின்றோம். ஆனால் உண்மை என்னவெனில் அரும்பாடு பட்டு சேர்க்கும் செல்வத்தினால், நம்மால் நிம்மதியாக வாழ்க்கை வாழ முடியாது (லூக் 12:15). மாறாக இறைவனுக்குப் பணிந்து, அவர் காட்டும் வழியில் நடக்கும்போது நமக்கு எல்லா ஆசிரும், அருளும் கிடைக்கும்.

இணைச்சட்ட நூல் 6:13 ல் வாசிக்கின்றோம் “உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்குப் பணிந்து நட” என்று. அதேபோன்று திருத்தூதர் பணிகள் நூல் 16: 31 ல் வாசிக்கின்றோம் “ஆண்டவராகிய இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும், உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்று. ஆம், இறைவனால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைவன் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, அவருக்கு பணிவிடை செய்து வாழ்ந்தோம் என்றால் இறைவனின் ஆசி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

ஆதலால் உலக செல்வங்களுக்குப் பணிந்து நடப்பதை விடுத்து, உண்மைச் செல்வமாகிய இயேசுவுக்கு பணிவிடை செய்துவாழுவோம். இறைவன் அருளை நிறைவாய் பெறுவோம். Fr Palay Maria Antonyraj, Palayamkottai.








No comments:

Post a Comment