இதுதான் மாதா; இதுதான்
ஜெபம் (கானாவூர் திருமணம்) :
திருமண வீட்டில் திராட்சை இரசம்
தீர்ந்துவிட்டது. எல்லோரையும் போல் அல்லது நம்மவர்களைப்போல் அன்னையால் இருக்க
முடியவில்லை.“ என்ன பெரிசா கல்யாணம் நடத்திட்டான். இரசம் பாதியிலேயே
தீர்ந்துவிட்டது “ என்று பரிகாசம் பண்ணவில்லை. அந்த திருமண வீட்டினரின்
துன்பத்தில் பங்கேற்கிறார்கள். உடனே தன் மகனிடம் அவர்கள் குறை தீர ஜெபிக்க
சென்றுவிட்டார்கள். ஏன்? தன் மகனை கடவுள் என அன்னை
அறிந்திருந்தார்கள். நம் தெய்வம் இயேசுவை முழுமையாக அறிந்தவர்கள் நம் அன்னை
மட்டுமே. தன் மகனால் இந்த இல்லத்தின் குறையை தீர்க்க முடியும் என்று உறுதியாக
நம்பினார்கள்.
சரி அவர்கள் எப்படி ஜெபித்தார்கள்,
“ மகனே இரசம் தீர்ந்து விட்டது" ஒரே வரியில்
அன்னையின் ஜெபம் முடிந்துவிட்டது. “என் நேரம் இன்னும் வரவில்லை" என்று தன்
குமாரன் பதில் கூறினாலும் அன்புத்தாய் பணியாட்களிடம் “அவர் உங்களுக்குச்
சொல்வதையெல்லாம் செய்யுங்கள்" என்கிறார்கள். இதை இரண்டுவிதமாக பார்க்கலாம்,
1. தாயின் சொல்லை தன் தனையன் தட்டமாட்டான்
என்ற விசுவாசம்
2. கடவுள் நமக்கு புதுமைகள் செய்ய
வேண்டுமானால் நாம் அவரின் கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது.
இரண்டுமே சரிதான். அன்னையின் ஜெபங்கள்
இரண்டு வரியில் முடிந்து விட்டது. ஜெபம் உடனே கேட்கப்பட்டது. புதுமை
நடந்துவிட்டது. முடிவில்தான் ஒரு அற்புத முடிச்சு உள்ளது. கடைசி வரியை கவனித்தால்
புரியும். “அவருடைய சீடர் அவரில் விசுவாசங்கொண்டனர்” இதுதான் மிகவும் முக்கியமானது.
இந்த புதுமையை அன்னை ஏன் தன் குமாரனை
செய்ய வைத்தார்கள்,
1. திருமண வீட்டாரின் குறையைத் தீர்க்க
வேண்டும்
2. தன் குமாரனுக்கு நேரம் வந்துவிட்டது
என்பதை உணர்த்த வேண்டும்.
3. அவர் சீடர்கள் தங்கள் தலைவர் யார்
என்பதை உணர வேண்டும்.
அன்னையின் உடனிருப்பு இருக்கிறது
என்றால் நாம் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. ஒரு தாய்க்குத்தான் தெரியும் தன்
குமாரர்களுக்கு எது எப்போ எவ்வளவு தேவை என்பது. அன்னையின் தாய்மையும் சரி; தூய்மையும் சரி என்றுமே நிகரற்றது. இயேசு தெய்வம் வாழ்ந்த காலத்தில்
அவரிடமிருந்து எவ்வளவோ கடவுளின் ஞானத்தையும், கொடைகளையும்
அன்னை மரியம்மாள் கற்றிருந்தாலும், பெற்றிருந்தாலும் அந்த அன்னையின்
துணையும்; ஆதரவும்; அன்பும்;
நம் தெய்வத்திற்கு தேவைப்பட்டது என்பதே உண்மை. உண்மைக் கடவுளுக்கு
ஒரு உண்மையான அன்பும், நேசமும், பரிவும்,
தாய்மையும் தேவைப்பட்டது என்றால் நாம் எம்மாத்திரம்.
நமக்கும் அன்னையின் அன்பு நாம் சாகும்
வரை கட்டாயமாக தேவை என்பதே உண்மை. அந்த அன்னையின் அன்பு தேவையில்லை என்றால்
அன்னைக்கு நஷ்ட்டமில்லை. நமக்குத்தான் நஷ்ட்டம். கடவுளுக்கே அன்னை தேவைப்பட்டபோது
சிலர் எங்களுக்கு அன்னை தேவையில்லை என்று ஒதுக்கிறார்கள்; ஒதுங்குகிறார்கள்..
அவர்கள் மீண்டும் ஒரு முறை கானாவூர் புதுமையை வாசிக்கட்டும், தியானிக்கட்டும்..
கானாவூர் புதுமை சாதாரன விசயமல்ல நிறைய
விசயங்களுக்கு அதுவே தொடக்கம்..இயேசுவின் சிலுவைப்பாடுகளுக்கும் அதுவே
அடித்தளம்... அதனால்தான் புனித அருளப்பர் தன் இரண்டாம் அதிகாரத்திலே கானாவூர்ப்
புதுமையை சொல்லிவிட்டார்..
நற்செய்தி தொடர்கிறது..
மூன்றாம் நாள், கலிலேயாவிலுள்ள
கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. 'இயேசுவின் தாய்
அங்கு இருந்தாள். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைக்கப்பெற்றிருந்தனர்.
திராட்சை இரசம் தீர்ந்துவிடவே, இயேசுவின் தாய் அவரை நோக்கி, "இரசம்
தீர்ந்துவிட்டது" என்றாள். அதற்கு இயேசு, "அம்மா!
அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை"
என்றார்.
அவருடைய தாய் பணியாட்களிடம்,
"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"
என்றாள்.யூதரின் துப்புரவு முறைமைப்படி ஆறு கற்சாடிகள் அங்கே இருந்தன. அவை
ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் பிடிக்கும்.
இயேசு அவர்களை நோக்கி, "இச்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். அவர்கள் அவற்றை
வாய்மட்டும் நிரப்பினார்கள். பின்பு அவர், "இப்பொழுது
முகந்து பந்திமேற்பார்வையாளனிடம் எடுத்துச்செல்லுங்கள்" என்றார்.
அவர்கள் அப்படியே செய்தனர். பந்தி
மேற்பார்வையாளன் திராட்சை இரசமாய் மாறின தண்ணீரைச் சுவைத்தான். இத் திராட்சை இரசம்
எங்கிருந்து வந்ததென்று அவனுக்குத் தெரியாது. - ஆனால் தண்ணீரைக் கொண்டுவந்த பணியாட்களுக்குத்
தெரியும். -
அவன் மணமகனை அழைத்து, "எல்லாரும் முதலில் நல்ல இரசத்தைப் பரிமாறுவர். நன்றாய்க் குடித்தபின்
கீழ்த்தரமானதைத் தருவர். நீரோ நல்ல இரசத்தை இதுவரை வைத்திருந்தீரே" என்றான்.
இதுவே இயேசு செய்த அருங்குறிகளில்
முதலாவது. இது கலிலேயாவிலுள்ள கானாவூரில் நிகழ்ந்தது. இவ்வாறு அவர் நமது
மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடர் அவரில் விசுவாசங்கொண்டனர்.
அருளப்பர் 2: 1-11
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
No comments:
Post a Comment