அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, April 5, 2018

திருப்பலி விளக்கம் - காணிக்கை

இயேசு கிறிஸ்து தமது கல்வாரி சிலுவைப்பலியை முன்கூட்டியே தமது இறுதி இரவு உணவின்போது கொண்டாடினார். இன்று அதே சிலுவைப்பலியைத் திருஅவை பீடத்தில் கொண்டாடுகிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று சொன்ன அவரது வார்த்தைகளாகும்.

இயேசு சொன்ன வார்த்தைகளும் அவர் செய்த செயல்களும் இன்று நற்கருணை வழிபாட்டை அமைக்க திருஅவைக்கு உதவுகின்றன. இந்த நற்கருணை வழிபாடு “நன்றி வழிபாடு” என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் நற்கருணையைக் குறிக்கும் ‘யூக்கரிஸ்தியா’ (Eucharistia) என்ற கிரேக்கச் சொல் ‘நன்றி கூறுதல்’ என்று பொருளுடைய ‘யூக்கரிஸ்தெயின்’ (eucharistrein) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது.

இந்த நற்கருணை வழிபாடு (1) காணிக்கைப் பொருள்களைத் தயாரித்தல், (2) நற்கருணை மன்றாட்டு, (3) நற்கருணையைப் பிட்டு உட்கொள்ளுதல் ஆகிய ஆக்கக்கூறுகளால் ஆனது. இவை ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தை இங்கு காண்போம்.

அ.காணிக்கைகளைத் தயார் செய்தல்

முற்கால நடைமுறை
திருஅவையின் தொடக்க காலத்திலிருந்தே மக்கள் அனைவரும் தத்தம் காணிக்கைகளை மகிழ்வோடு பாடிக்கொண்டு பவனியாக பீடத்திற்குக் கொண்டு வந்தார்கள். இக்காணிக்கைகள் முதலில் அப்பமும், இரசமுமாயிருந்தன. நாளடைவில் பீடத்திற்குத் தேவையான பொருள்கள் அனைத்தும், அதாவது எண்ணெய், மெழுகுவர்த்தி, மலர்கள், மற்றும் ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க பழம், காய்கறிகள் கொணரப்பட்டன. இவற்றிலிருந்து அந்நாள் திருப்பலிக்குத் தேவையான அப்பமும், இரசமும் மட்டும் ஒதுக்கி பீடத்தின்மீது வைக்கப்பட்டன. ஒதுக்கி வைக்கப்பட்டதால் விeஆreஆழிமிற்து இவை ‘செக்கெரேத்தும்’ (Secretum) என்று அழைக்கப்பட்டன. இவற்றின்மீது சொல்லப்பட்ட செபத்தை ‘சீக்ரெட்’(Secret), அதாவது ஒதுக்கி வைக்கப்பட்டவை மீது செபம் என்று அழைக்கப்பட்டது. இதை அறியாதவர் அதை அமைதி செபம், அதாவது அருள்பணியாளர் காணிக்கைகள் மீது அமைந்த குரலில் சொல்லும் செபம் என்றார்கள். இவ்வாறு அமைந்த குரலில் சொல்வது கட்டளையாகவும் இருந்தது.

தொடக்கக்காலத்தில், அதாவது கி.பி.2-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவெடுத்தக் காணிக்கைப் பவனி 8-ஆம் நூற்றாண்டு வரை சிறப்பான முறையில் திருப்பலியில் நடைப்பெற்றது. அதன்பிறகு தன் முக்கியத்துவத்தைப் படிப்படியாக இழந்து, கடைசியில் முற்றிலும் கைவிடப்பட்டது.

இரண்டாவது வத்திக்கான் சங்கம் கொணர்ந்த மறுமலர்ச்சி
கைவிடப்பட்ட காணிக்கைப் பவனியைப் புதுப்பித்து. அருள்பணி யாளருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காணிக்கைகளை ஒப்புக் கொடுத்தல் என்று அழைக்கப்பட்ட பகுதி, மாற்றப்பட்டு “காணிக்கைகளைத் தயார் செய்தல்” என்று அழைக்கப்பட்டது. இதில் பலியை நிறைவேற்றும் அருள்பணியாளருடையவும், காணிக்கைகளைப் பவனியாகக் கொணரும் நம்பிக்கையாளர்களுடையவும் ஈடுபாடு அடங்கியுள்ளது. அருள்பணியாளரின் திருநிலைப் பாட்டில் அப்பத்தட்டையும், திருப்பலி கிண்ணத்தையும் ஆயர் அவர் கைகளில் கொடுத்து “மக்கள் கொண்டுவரும் காணிக்கைகளை ஏற்று நீர் திருப்பலி ஒப்புக்கொடுப்பீராக” என்று சொல்வது இரு சாராருடைய ஈடுபாட்டை தெளிவாக்குகின்றது.

காணிக்கையின் இறையியல்
திருப்பலி என்பது இயேசுகிறிஸ்து கல்வாரியில் செலுத்திய பலியை அடையாளங்கள் வழியாக பலிபீடத்தில் நிகழ்த்துவதாகும். இயேசுகிறிஸ்து கல்வாரி மலையில் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்தையாம் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தார். அதேபோல் திருப்பலியில் அருள்பணியாளரும், நம்பிக்கையாளர்களும் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்கவேண்டும். இயேசுகிறிஸ்து கல்வாரியில் தம் உயிரை மாய்த்து, இரத்தத்தைச் சிந்தி பலியை ஒப்புக்கொடுத்தார். அதேபோல் இன்று செய்ய திருஅவை அப்பத்தையும், இரசத்தையும் அடையாளங்களாகப் பயன்படுத்தி தன்னைப் பலியாக்குகிறது. இதற்கான வழியை இயேசு கிறிஸ்துவே தமது இறுதி இரவு உணவில் அப்பத்தையும், இரசத்தையும் பயன்படுத்தியதின் வழியாக வகுத்துக் கொடுத்தார்.

கோதுமை மணிகளிலிருந்து அப்பம் தயார் செய்ய இடம்பெறும் செயல்பாடுகளும், அதேபோல் திராட்சை பழங்களிலிருந்து இரசம் தயாராக இடம்பெறும் செயல்பாடுகளும் பலியை ஒப்புக்கொடுக்கும் அருள்பணியாளர், நம்பிக்கை யாளர்களுடைய வாழ்வில் செயலாக்கம் பெறவேண்டும். இந்த உருவ மாற்றத்தில் பாஸ்கா அடங்கியுள்ளது. அதாவது கோதுமை மணிகள் உடைக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, பிசையப்பட்டு அப்பம் உருவாவதுபோல் பீடத்தில் பலியை ஒப்புக்கொடுப்பவர்கள் உடைக்கப்பட வேண்டும், நொறுக்கப்பட வேண்டும். அதேபோல் திராட்சை பழங்கள் பிழியப்பட்டு, சாராக்கப்பட்டு இரசமாவது போல பலியை ஒப்புக்கொடுப்பவர்கள் கசக்கப்பட வேண்டும். இந்த உண்மையை உணர்த்தும் விதமாகத்தான் “கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்” (உரோ 12 : 1) என்கிறார் புனித பவுல். அதாவது, நம்முடைய நொறுங்குண்ட உள்ளத்தை நாம் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
திருப்பலியை நிகழ்த்தும் அருள்பணியாளர் அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் போது சொல்லும் மன்றாட்டு இதைத் தெளிவாக்குகிறது.

“ஆண்டவரே. அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப் பெறுவீராக.ஏனெனில், உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்”.

இதே போன்று இரச கிண்ணத்தை அருள்பணியாளர் எடுத்து சொல்கிறார்.

“ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப் பெறுவீராக. ஏனெனில், உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சை செடியும் மனித உழைப்புத் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு ஆன்ம பானமாக மாறும்”.

காணிக்கைப் பவனியும், காணிக்கை பாடலும்
அப்பத்தையும், இரசத்தையும் ஒப்புக்கொடுப்பது வெறும் சடங்காக மட்டும் இராமல், மேலே நாம் குறிப்பிட்ட இறையியல் சிந்தனைகள் பொருள் உள்ளதாக மாற வேண்டுமானால் காணிக்கை பவனி மக்கள் பெருவாரியாகக் கூடிவரும் திருப்பலிகளில் எல்லாம் இடம்பெற வேண்டும். நம்பிக்கை யாளர்கள் கொண்டுவரும் காணிக்கைகளாகிய அப்பமும், இரசமும், இன்னும் மற்ற பொருள்களும் அவர்களுடைய வாழ்க்கைப் பலிகளின் வெளிப்பாடும், அடையாளங்களாகவும் இருக்கும்போது இறைமக்களுடைய பொது குருத்துவம் செயலாக்கம் பெறுகிறது.

“முற்காலத்தில் நடந்ததுபோல், இன்று நம்பிக்கையாளர் தங்கள் உடைமைகளிலிருந்து திருவழிபாட்டிற்காக அப்ப, இரசத்தைக் கொண்டு வருவதில்லை என்றாலும் காணிக்கைப் பொருள்களைக் கொண்டுவரும் சடங்கு இன்றும் ஆன்மீக ஆற்றலும், பொருளும் கொண்டுள்ளது” (றூணூயூனி, 73).

இக்காணிக்கைகள் பவனியின் போது, தகுதியான பாடல் பாடப்பெறுவதால் பவனி மாண்புறுகிறது; பவனியின் பொருள் வெளிக்கொணரப்படுகிறது. இந்தக் காணிக்கைப் பாடல் காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கும் போது சொல்லப்படும் மன்றாட்டையும், மேலே நாம் விளக்கிய இறையியல் சிந்தனையைப் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும். அர்த்தமற்ற பாடல்களைப் பாடக்கூடாது.

எடுத்துக்காட்டாக : “சின்ன குழந்தை இயேசுவுக்கு என்ன கொடுப்பது - நாம் என்ன கொடுப்பது” என்று பாடுவது முறையற்றது. ஏனெனில் பலியில் காணிக்கைகள் கடவுளுக்கு மட்டுமே ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்பது மேலே நாம் குறிப்பிட்ட “ஆண்டவரே. அனைத்துலகின் இறைவா ....” என்ற செபத்திலிருந்து தெளிவாகிறது.

காணிக்கைகளைப் பவனியாகக் கொண்டு வரவில்லை என்றாலும், காணிக்கையை ஒப்புக்கொடுக்கும் சடங்கின் போது காணிக்கைப் பாடல் எப்பொழுதும் இடம்பெறும்.

உண்டியல் எடுத்தல்
காணிக்கை நேரத்தில் உண்டியல் எடுத்து பீடத்தருகில் வைக்கும் பழக்கம் தொடக்கத்திலிருந்தே இடம்பெறும் ஒரு நிகழ்வு. இதைப் பொருள் உள்ள முறையில் அமைப்பது நல்லது. திருப்பலியில் மக்கள் மன்றாட்டுகளைச் சொல்லும் போது உண்டியல் எடுப்பதைத் தொடங்கி முடித்து காணிக்கைப் பவனியின்போது கொண்டு வந்து காணிக்கைகளை ஏற்கும் அருள்பணியாளரிடமோ, திருத்தொண்டரிடமோ கொடுப்பது நல்லது. திருஅவையின் தேவைக்காக காசு தண்டுவதற்கு விவிலியத்தில் ஆதாரங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக புனித பவுல் பின்வருமாறு கூறுகிறார் : “இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்துப் பார்ப்போம் .... நீங்கள் ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். நான் வரும்போது அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்” (1கொரி 16 : 1 - 4; காண் உரோ 15 : 28; 2 கொரி 8 : 1 - 24).
காணிக்கைப் பவனியின்போது கொண்டு வரப்பட்ட பணத்தையும் மற்றக் கொடைகளையும் .... பலி பீடத்திற்குப் புறம்பே தகுந்த இடத்தில் வைக்க வேண்டும் (GIRM,73). பலி பீடத்திற்கு முன் திருப்பலி முடியும் வரை வைத்திருக்கக்கூடாது.

அடையாள காணிக்கையும், பொது மன்றாட்டுகளும்
தமிழகத்தில் ஒரு புதிய பழக்கம் உருவாகியுள்ளது. அதாவது சில அடையாள காணிக்கைகளை காணிக்கையாக்கும்போது பொது மன்றாட்டுகளை அதற்கேற்றவாறு மாற்றி செபிப்பது. இது அறியாமையால் ஏற்படும் ஒரு குழப்பத்துக்குரிய செயல். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் பொது மன்றாட்டுகள் அதாவது விசுவாசிகளின் மன்றாட்டுகள் “வார்த்தை வழிபாட்டை” முடித்து வைக்கும் ஒரு செயல். காணிக்கைகளைப் பவனியாகப் பலிபீடத்திற்குக் கொண்டு வருதல் “நற்கருணை வழிபாட்டைச் சார்ந்த ஒரு தொடக்கச் செயல். காணிக்கைகளைத் தயார் செய்வதின் முதல்படியாகும். எனவே , இவற்றை இணைப்பது பொருத்தமற்றது.”

அடுத்து ‘அடையாள காணிக்கை’ என்ற சொற்களைச் சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். பலிபீடத்தில் இயேசுகிறிஸ்து கல்வாரி மலையில் ஒப்புக்கொடுத்த அதே பலி அப்பம்இரசம் என்ற அடையாளங்கள் வழியாக ஒப்புக் கொடுக்கப்படுகிறது என்பதில் உள்ள பொருள் செறிவை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். மேலே காணிக்கையின் இறையியல் சிந்தனையில் சொல்லப்பட்டது போல நாம் கிறிஸ்துவின் சிலுவைப்பலியோடு நம்மை ஒன்றிணைக்க வேண்டுமானால் நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த மனப்பாங்கை செயலாக்கும் விதத்தில் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவே பயன்படுத்திய அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாக்குகிறோம். அதனால் நமது பலி அடையாளங்கள் வழியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்கிறோம்.

ஆனால் அப்பம்இ-ரசம் தவிர்த்து, நாம் கொண்டுவரும் மற்ற பொருள்களைக் காணிக்கைகளாகக் கொண்டு வரும்போது அவற்றின் நோக்கம் இருவித பயன்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். ஒன்று திருப்பலியோடு தொடர்புடைய பயன்பாடாக இருக்க வேண்டும்: பீட துகில் வாங்க, மெழுகுவர்த்திகளும், அவற்றைத் தாங்கும் நிலைபேழை (Stands), தூபக் கலசம் போன்றவைகளை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். அடுத்து உணவுப் பண்டங்கள், உடைகள் போன்றவை ஏழை மக்களுக்கு பகிர்வதற்காக இருக்க வேண்டும்.

இந்த இரண்டுவித பயன்பாடுகளைத் தவிர்த்து அடையாளங்களாக நாம் கொண்டுவரும், உலகம் முழுவதையும் குறித்துக் காட்டும் க்ளோபு (Globe), பேனா, புத்தகம், விவிலிய நூல், மண்வெட்டி, உப்பு, தண்ணீர், காய்ந்த (பட்ட) குச்சி, முள், சர்க்கரை, தேய்ந்து போன மிதியடி போன்றவைகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்து, அவை குறிக்கும் உண்மை - அதாவது உழைப்பு, அர்ப்பணம், கரைதல், எரிதல், வெறுமை, ஒன்றுமில்லாமை - பற்றி விளக்கங்களை வாசித்துவிட்டு, அவற்றை கொண்டு வந்தவர்களே எடுத்து போவது சரியன்று. இத்தகைய அடையாள காணிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். அடையாளம் என்ற பெயரில் சிறிதும் பொருத்தமே இல்லாத சடங்குகளும் இடம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக தனது வெறுமையையும், ஒன்றுமில்லாமையையும் குறித்துக்காட்டும் விதமாக ஓர் அருள்சகோதரி பவனியாக வந்து குருவிடம் தமது காலியாக உள்ள இருகரங்களையும் இணைத்து அருள்பணியாளரிடம் விரித்துக் காட்டுவது கேலி கூத்தாகிவிடும். இதனால் யாருக்கு என்ன பயன்?

அப்ப - இரசத்தை ஒப்புக்கொடுத்தல்
அப்ப-இரசத்தைப் பெற்றுக் கொண்ட அருள்பணியாளர் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அதற்குரிய மன்றாட்டோடு இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார் (காண். மேலே). இரசத்தை ஒப்புக்கொடுக்கும்முன் அதனுள் சிறிதளவு தண்ணீர் சேர்க்கப்படுகிறது. இந்த செயல் யூதர்களின் பழக்கத்திலிருந்து வருகிறது. அதாவது யூதர்கள் எப்போதும் இரசத்தோடு சிறிதளவு தண்ணீர் கலந்தே பருகினர். இது கிறிஸ்துவுடன் நாம் ஒன்றாக கலந்து விடுவதைக் குறிக்கிறது என்கிறார் புனித சிப்ரியன். எனவே இன்று இரசத்தோடு தண்ணீரைக் கலக்கும்போது “இந்த தண்ணீர் இரசம் வழியாக நாமும் அவரது இறையியல்பில் பங்கு பெறுவோமாக” என்று செபிக்கிறார் அருள்பணியாளர். இந்த செபம் புனித பவுல், யோவான் ஆகியோர் தரும் போதனைகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதாவது இறைமகன் மனிதஉரு எடுத்து மனிதரானார். அவரை ஏற்றுக் கொள்வோருக்கு கடவுளின் பிள்ளைகளாகும் பேற்றினைத் தந்தார் என்கிறார்கள் (காண். கலா 4 : 6 - 7; உரோ 8 : 15 - 17; யோவா 1 : 12 -14).

பலியை நிகழ்த்தும் அருள்பணியாளர் அப்ப - இரசத்தை ஒப்புக்கொடுத்தப்பின், “ஆண்டவரே, தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் கொண்ட எங்களை ஏற்றருளும். ஆண்டவராகிய இறைவனே, நாங்கள் இன்று உமது திருமுன் ஒப்புக்கொடுக்கும் பலி உமக்கு உகந்தது ஆவதாக” என்று தாழ்ந்த குரலில் செபிக்கிறார். ஆனால் இச்செபம் பன்மையில் இருப்பதால் எல்லா மக்களுக்கும் கேட்கும்படி சப்தமாகத் தெளிவான குரலில் சொல்லலாம் என்பது எமது கருத்து. இதை அருள்பணியாளரின் தனி செபம் என்பது சரியானதாகத் தோன்றவில்லை.

அருள்பணியாளர் கைகளைக் கழுவுதல்
கைகழுவுதல், உடல் தூய்மை, ஆசார முழுக்கு ஆகியவற்றை ‘முன்னோர்’ பரம்பரை என யூத மக்கள் கருதினர். (காண். மத் 15 : 1,2,10 ‡ 20) கைகள் தூய்மையாவது போல் உள்ளமும் தூய்மையாக வேண்டும் என்பதைக் குறிக்கும் விதத்தில், ஆண்டவரே, எனது குற்றம் நிங்க என்னை கழுவியருளும்; என் பயத்திலிருந்து என்னைத் தூய்மையாக்கும் என அருள்பணியாளர் சொல்லிக் கொண்டு தமது கைகளைக் கழுவுகிறார். வெளிப்படையாக செய்யும் கைகளைக் கழுவும் செயல் உள்ளத்தூய்மைக்கு அடையாளமாக இருக்கிறது (காண் எபி 10 : 22). இதைத்தான் அப்பொழுது சொல்லப்படும் செபம் உணர்த்துகிறது.

அருள்பணியாளர் தமது கைகளைக் கழுவுவதற்கு வேறு ஒரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. அதாவது பலவித காணிக்கைப் பொருள்களைக் காணிக்கை பவனியின்போது அருள்பணியாளர் பெற்றதால், மாசுபட்ட கைகளின் கறையைப் போக்கவும் கைகள் கழுவப்படுகின்றன என்பது. அப்படியானால் இச்செயல் எப்போது இடம் பெற வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுகிறது. காணிக்கைகளை மக்களிடமிருந்து பெற்றவுடன், அப்ப ‡ இரசத்தை ஒப்புக்கொடுக்கும்முன் இச்செயல் நடந்தால் சரியாக இருக்கும் என்பது எமது கருத்து. மேலே குறிப்பிட்ட உள்ளத்தூய்மையைக் குறிக்கும் அடையாளம் கைகளைக் கழுவுவதில் இருக்கிறது என்ற விளக்கம்கூட காணிக்கைகளைப் பெற்றபின் கைகளைக் கழுவுவதோடு ஒத்துப் போகும் என்பதும் எமது கருத்து.

ஒப்புக்கொடுக்கப்பட்ட அப்ப இரசங்களுக்கு தூபம் காட்டுதல்
பாடல் திருப்பலிகளில் தூபம் பயன்படுத்துவது திருவழிபாட்டின் நீண்ட கால மரபு ஆகும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும், பெருவிழாக்களிலும் பாடல் திருப்பலி நிகழ்த்தலாம். திருப்பலியில் நான்கு முறை தூபம் காட்டப்படுகிறது. முதல்முறை திருப்பலியின் தொடக்கத்தில் பலிபீடத்துக்கு வணக்கம் செலுத்தியபின் அருள்பணியாளர் பலிபீடத்திற்கும், பாடுபட்ட சுரூபமுடைய சிலுவைக்கும் தூபம் காட்டுகிறார். இரண்டாவது முறையாக நற்செய்தி பறைசாற்றும் முன் வாசக நூலுக்குத் தூபம் காட்டப்படுகிறது. அப்ப இரசத்தைக் காணிக்கையாக்கிய பின், காணிக்கைகளுக்கும் பலி பீடத்திற்கும், பாடுபட்ட சிலுவைக்கும், அருள்பணியாளர்களுக்குத் தூபம் காட்டப்படுகிறது. எழுந்தேற்றத்தின்போது கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறிய அப்பம் இரசக்கிண்ணத்திற்குத் தூபம் காட்டப்படுகிறது.

ஆனால் இச்செயலைச் செய்வதில் சில குறைபாடுகளைக் காணமுடிகிறது. பலிபீடம் கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருப்பதால் அதற்குத் தூபம் காட்டப்படுகிறது. ஆனால் பல முறைகளில் பீடத்திற்குத் தூபம் காட்டாமல் பீடத்தைச் சுற்றியுள்ள தரைக்கு (Floor) தூபம் காட்டப்படுவதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் கவனக்குறைவும், பீடத்தை சுற்றியுள்ள மலர் தொட்டிகளும் மெழுகுதிரி நிலை பேழைகளும் (ளீழிஐdயிe றீமிழிஐdவி) மற்றும் பீடத்திற்கு முன் வைக்கப்பட்டிருக்கும் காணிக்கைப் பொருள்களும் ஆகும். இக்குறையைத் தவிர்க்க வேண்டுமானால் அருள்பணியாளர்கள் கிறிஸ்துவை குறித்துக் காட்டுவது பலி பீடம் என்பதை உணரவேண்டும். அடுத்து பீடத்தைச் சுற்றி தூபம் காட்டிக் கொண்டு வரும்போது இடையூர்களாக உள்ளப் பொருள்கள் அகற்றப்பட வேண்டும்.

அடுத்துவரும் முக்கியமான காரியம், எவ்வாறு தூபம் காட்ட வேண்டும் என்பது நற்கருணைக்கும், பாடுபட்ட சுரூபமுடைய சிலுவைக்கும் மூன்று மூன்று வீச்சுகளாக மும்முறை காட்டவேண்டும். அருள்பணியாளர்களுக்கு இரண்டு வீச்சுகளாக மூன்று முறையும், புனிதர்களின் சுரூபத்திற்கும். திருக்குழுமத்திற்கும் ஒருவீச்சாக மூன்று முறையும் காட்டவேண்டும். திருப்பலிக்குத் தலைமைத் தாங்கி சடங்கை நிகழ்த்துபவருக்குத் தனியாக தூபம் காட்டவேண்டும். அதன்பின் அவரது வலது இடது புறம் இருக்கும் அருள்பணியாளர்களுக்குத் தனியாகவும் மற்ற கூட்டுப்பலி அருள்பணியாளர்களுக்குத் தனியாகவும் தூபம் காட்ட வேண்டும்.

காணிக்கை மீது மன்றாட்டு
காணிக்கை மீது மன்றாட்டைச் சொல்லுமுன் அருள்பணியாளர் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை, அதாவது அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் திருவுடலாகவும், திருஇரத்தமாகவும் மாற்றிடவும், அது கடவுளுக்கு உகந்தப் பலிபொருளாகவும் செபிக்க நம்பிக்கையாளர்களை பின்வரும் வார்த்தைகளினால் அழைக்கிறார் : “சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம்வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்”.

இதைச் சரியாக புரிந்துக் கொள்ளாமல் உயர் அதிகாரத்தில் இருக்கும் சிலரும், சில அருள்பணியாளர்களும் அன்றைய திருப்பலிக் கருத்துகளையும், வார்த்தைப்பாடு, ஜுபிலி விழாக்கள் கொண்டாடுபவர்களுக்காகவும் செபிக்க அழைக்கிறார்கள். இது தவறு. திருப்பலி அமைப்பின் அறியாமையின் வெளிபாடாகிறது.

இறுதியாக பீடத்தின்மீது காணிக்கையாக்கப்பட்டிருக்கும் பலிபொருளை ஏற்றுக்கொண்டு, கூடி வந்திருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு அருள், ஆசிர் வழங்கும்படி அருள்பணியாளர் செபிக்கிறார். இதோடு காணிக்கைகளை தயாரிக்கும் சடங்கு நிறைவு பெறுகிறது.



1 comment: