ஆண்டவரின் உருமாற்றம் விழா
நாள்: ஆகஸ்ட் 6
வகை: விழா
பின்னணி
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. இந்த நிகழ்வே, ஆண்டவரின் உருமாற்ற விழா கொண்டாட்டத்துக்கு அடிப்படையாக உள்ளது.
வரலாறு
தபோர் மலையின் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இயேசு கிறிஸ்து உருமாற்றம் அடைந்தார் என்ற நம்பிக்கை, கி.பி. 3ஆம் நூற்றாண்டில் உருவானது. இந்த நம்பிக்கையின் விளைவாக, அவ்விடத்தில் 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் ஆகஸ்ட் 6ந்தேதி புனிதப்படுத்தி திறக்கப்பட்டது. அந்நாள் முதல், ஆண்டவரின் உருமாற்ற விழாவை ஆகஸ்ட் 6ந்தேதி சிறப்பிக்கும் வழக்கம் கிழக்கத்தியத் திருச்சபைகளில் தோன்றியது. 8ஆம் நூற்றாண்டில், மேற்கத்திய திருச்சபையின் சில பகுதிகளில் இவ்விழாவைக் கொண்டாடும் வழக்கம் உருவானது. 1456 ஜூலை 22ந்தேதி துருக்கியருக்கு எதிரான சிலுவைப் போரில் கிறிஸ்தவ வீரர்கள் வெற்றி பெற்றனர். அச்செய்தியை ஆகஸ்ட் 6ந்தேதி அறிந்த திருத்தந்தை 3ம் கலிக்ஸ்து, ஆண்டவரின் உருமாற்ற விழாவை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்தார். இதையடுத்து 1457ஆம் ஆண்டு முதல், இவ்விழா மேற்கத்திய திருச்சபையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment