அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, August 26, 2018

ஒழுக்கம் சார்ந்த விதிகள்

யூதர்கள் பின்பற்றிய மோசேயின் சட்டத்தை விடவும் கடுமையான நீதி போதனைகளை இயேசு கிறிஸ்து வழங்கினார். சினம் கொள்ளுதல், விபசாரம், ஆணையிடுதல், பழி வாங்குதல், தீர்ப்பு அளித்தல் ஆகியவற்றின் பின்னிருக்கும் தீமைகளை இயேசு விளக்குகிறார்.

சினங்கொள்ளுதல்

“‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.” (மத்தேயு 5:21-24)

விபசாரம்

“‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.” (மத்தேயு 5:27-32)

ஆணையிடுதல்

“‘பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்தில் இருந்து வருகிறது.” (மத்தேயு 5:33-37)

பழி வாங்குதல்

“‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.” (மத்தேயு 5:38-42)

தீர்ப்பு அளித்தல்

“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், ‘உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.” (மத்தேயு 7:1-5)

அறச்செயல்கள் செய்தல்

“மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்” (மத்தேயு 6:1) என்று இயேசு கிறிஸ்து கூறினார். கடவுளிடம் இருந்து கைம்மாறு பெற விரும்பினால், நாம் செய்யும் நன்மைகள் அனைத்தும் மறைவாக இருக்க வேண்டும் என்று இயேசு போதிக்கிறார்.

தர்மம் செய்தல்

“நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.” (மத்தேயு 6:2-4)

நோன்பு இருத்தல்

“நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.” (மத்தேயு 6:16-18)

கடவுளை நம்பி வாழ்தல்

மகனாகிய கடவுள் இயேசு கிறிஸ்து, தாம் இவ்வுலகைச் சாராதவர், மேலிருந்து வந்தவர் என்று கூறினார். கடவுளை நம்பி வாழ்வோருக்கு எந்த நன்மையும் குறைவுபடாது என்ற போதனை வழியாக தமது இறைத்தன்மையை அவர் காட்டுகிறார்.

கவலை வேண்டாம்

“நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?
உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?

ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.” (மத்தேயு 6:25-34)

நற்செய்தி அறிவித்தல்

இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார். அப்போது அவர்களை நோக்கி, “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டிக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள். (லூக்கா 9:1-6)

மகனும் தூய ஆவியாரும்

மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய இயேசு கிறிஸ்து, தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதரானார். திரித்துவத்தின் மூன்றாம் ஆளான தூய ஆவியாருடன் தமக்குள்ள தொடர்பு குறித்து இறைமகன் இயேசு என்ன கூறினார் என்பதை இங்கு காண்போம்.

ஆவியாரின் துணை

“நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா? என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.” (மத்தேயு 12:28-32)

ஆவியாரில் வாழ்வு

“ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்.” (யோவான் 3:5-6) “வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை.” (யோவான் 6:63-64)

தந்தையின் ஆவியார்

“உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.” (யோவான் 14:16-17,26)

மகனுடன் ஒன்றிப்பு

“உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.” (யோவான் 16:13-14) இயேசு சீடர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். (யோவான் 20:21-22)

ஆவியாரின் சான்று

“தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.” (யோவான் 15:26) “என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள். அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே.” (மாற்கு 13:9-11)

தந்தையும் மகனும்

இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தவர் என்றால், அவருக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. தந்தையாம் கடவுளுக்கும் தமக்கும் உள்ள தொடர்பு பற்றி இறைமகன் இயேசு என்ன போதித்தார் என்பதை இங்கு காண்போம்.

மகனின் உரிமை

“தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்.” (மத்தேயு 11:27)
“தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெறுவர்.” (யோவான் 3:35-36) “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் 5:19) “என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (லூக்கா 22:29)

மகனின் அதிகாரம்

“தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை; தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் மகனுக்கு அளித்துள்ளார்.” (யோவான் 5:22) “நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்ல வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது பற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார்.” (யோவான் 12:49) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” (யோவான் 14:6)
“மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.” (மத்தேயு 16:27) “உயிர்ப்பும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.” (யோவான் 11:25) “மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்.” (யோவான் 6:40)

மகனின் ஒன்றிப்பு

“என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.” (யோவான் 5:17,26) “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள். நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்.” (யோவான் 14:7,11)
“தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.” (யோவான் 17:21) “நான் செய்துவரும் செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும். என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார்.” (யோவான் 5:37) “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.” (யோவான் 6:44)

மகனின் உறுதி

“உங்களுள் இருவர் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனம் ஒத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (மத்தேயு 18:19-20) “விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.” (மத்தேயு 12:50)
“என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்.” (மாற்கு 8:38) “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.” (மத்தேயு 10:32-33)

மகனே நல்லாயர்

“நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.” (யோவான் 10:14-18)

மகனின் ஒப்புதல்

“தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறை மகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்.” (யோவான் 10:36-38)
தலைமைக் குரு, “போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?” என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, “நானே அவர்; மேலும் மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள்” என்றார். (மாற்கு 14:61-62)

விண்ணிலிருந்து வந்தவர்

இயேசு கிறிஸ்து உண்மையில் கடவுளின் மகனா அல்லது ஒரு சாதாரண இறைவாக்கினரா என சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இதற்கு விடை கண்டறிய இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இது குறித்த நற்செய்தி பகுதிகளை இங்கு காண்போம்.

இறங்கி வந்தவர்

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவது இல்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.” (யோவான் 3:13-18)

விண்ணக உணவு

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.” (யோவான் 6:51-58)

உலகைச் சாராதவர்

“நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ‘இருக்கிறவர் நானே’ என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள். “நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, ‘நானே அவர்’; நானாக எதையும் செய்வதில்லை; மாறாக, தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் 8:23-28,41,56-58)

அவர் இறைமகன்

“‘நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறைமகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்.” (யோவான் 10:34-38)

இயேசுவின் போதனைகள் - அறிமுகம்

இயேசு கிறிஸ்து தமது பணி வாழ்வில் பல்வேறு காரியங்கள் குறித்து கற்பித்ததாக விவிலியம் குறிப்பிடுகிறது. இயேசு வழங்கிய போதனைகளை கடவுள் சார்ந்தவை, மனிதர் சார்ந்தவை என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.

கடவுள் சார்ந்தவை

இயேசுவின் போதனைகள் விண்ணரசு அல்லது இறையாட்சியை மையப்படுத்தியதாக இருந்தன. தமது அதிகாரம் குறித்து விளக்கும் இயேசு, தம்மை இறைமகன் என்றும் விண்ணகத் தந்தையால் அனுப்பப்பட்டவர் என்றும் கூறுகிறார். தந்தையும் மகனும் ஒன்றித்து இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து தூய ஆவியார் புறப்படுகிறார் என்றும் இயேசு போதித்தார். இவ்வாறு, தந்தை, மகன், தூய ஆவியாருக்கு இடையில் நிலவும் உறவை எடுத்துரைக்கும் இயேசு, கடவுள் ஒருவரே என்றும் போதித்ததால் ஒரே கடவுளில் மூன்று ஆட்கள் இருக்கின்றனர் என்று நாம் நம்புகிறோம். மேலும், கடவுளின் நீதி, இரக்கம், அன்பு ஆகியவை பற்றியும் இயேசு கற்பித்தார். உலகின் முடிவில் மக்கள் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கும் அரசராக தாம் வரவிருப்பதாகவும் இயேசு கூறியிருக்கிறார்.

மனிதர் சார்ந்தவை

மனிதர்கள், கடவுளையும் பிறரையும் அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய இயேசு, அனைவரும் தம்மைப் போல் பிறரை அன்பு செய்யுமாறு வலியுறுத்தினார். பிறரைத் தீர்ப்பிட வேண்டாம் என்றும், பகைவரையும் அன்பு செய்ய வேண்டும் என்றும் அவர் போதித்தார். உடல் இச்சையை விலக்க வேண்டும் என்றும், திருமண உறவை முறிக்கக் கூடாது என்றும் அவர் கற்பித்தார். கடவுளை நம்பி வாழ வேண்டும் என்றும், உலகப் பொருட்கள் மீது பற்று வைக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். உலகின் முடிவில் இறந்தோர் அனைவரும் உயிர்த்தெழுவர் என்றும், அப்போது ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கு ஏற்ப நிலை வாழ்வையோ தண்டனையையோ பெறுவர் என்றும் இயேசு கூறியிருக்கிறார்.

விண்ணேறிய இயேசு

மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு பலமுறை காட்சி அளித்ததாக அறிகிறோம். நாற்பதாம் நாளில் விண்ணேற்றம் அடைந்த அவர், தந்தையாம் கடவுளின் வலது பக்கத்தில் இறை மாட்சியுடன் அமர்ந்திருக்கிறார்.

பேதுருவின் தலைமை

இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என் மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.
மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம் மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணிவளர். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

அதிகாரம் அளித்தல்

பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். இயேசு அவர்களை அணுகி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர். அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.
மேலும் இயேசு, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ‘பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்றார்.

விண்ணேற்றம்

இயேசு துன்புற்று இறந்த பின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். இறுதியாக, இயேசு தம் சீடர்களுக்கு எருசலேமில் தோன்றினார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்” என்று கூறினார்.
பின்பு இயேசு, அவர்களை ஒலிவ மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமை பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.

இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவர்கள் பார்வையிலிருந்து அவரை மறைத்து விட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.

திருச்சபை தோற்றம்

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர்.
அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “இஸ்ரயேல் மக்களே, நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே. கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின் படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக் கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.”

அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்” என்றார். மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிக்கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட மூவாயிரம் பேர் அன்று திருமுழுக்கு பெற்றார்கள்.

இறைமகனின் உயிர்ப்பு

இயேசு கிறிஸ்துவின் மரணத்தோடு அவருக்கு முடிவு கட்டி விட்டதாக யூத மதத் தலைவர்கள் நினைத்தார்கள். ஆனால் இறந்த மூன்றாம் நாளில் இயேசு வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்து, தாம் இறைமகனே என்று நிரூபித்தார். அவரது மாட்சி பெற்ற உடல், தடைகளைத் தாண்டி செல்லும் தன்மை கொண்டிருந்தது.

கல்லறைக்கு காவல்

மறுநாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், “ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது ‘மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள் வரை கல்லறையைக் கருத்தாய் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, ‘இறந்த அவர் உயிருடன் எழுப்பப் பட்டார்’ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையை விடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்” என்றனர். அதற்கு பிலாத்து அவர்களிடம், “உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்” என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

இயேசு உயிர்த்தார்

ஓய்வு நாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள், திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்று செத்தவர் போலாயினர். அவர்கள் எழுந்து பார்த்தபோது, கல்லறைக்குள் இருந்த இயேசுவின் உடலைக் காணவில்லை. காவல் வீரர்கள் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.
விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையில் இருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். சீமோன் பேதுரு நேரே கல்லறைக்குள் நுழைந்து, அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்து கொள்ளவில்லை. பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.

மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்ல இருக்கிறேன்’ எனச் சொல்” என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்.

எம்மாவு சீடர்கள்

அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து எம்மாவு என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப் பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, “வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருப்பது என்ன?” என்று கேட்டார். அவர்களுள் கிளயோப்பா என்பவர் அவரிடம் மறுமொழியாக, “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அவருக்கு மரண தண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர், வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடு இருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்” என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்தவற்றை நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!” என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர் வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்க வைத்தார்கள். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்து போனார்.

சீடர்களுக்கு காட்சி

யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். மாலை வேளையில் இயேசு அவர்கள் நடுவில் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்ப முடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள்.
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். எட்டு நாள்களுக்குப்பின், தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.

கலிலேயாவில் இயேசு

அன்று வாரத்தின் முதல் நாள். பெண்கள் சிலர் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, “நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்” என்றார். அவர்கள் அச்சமுற்றாலும், பெருமகிழ்ச்சியுடன் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.
அந்த பெண்களின் வார்த்தைகளைக் கேட்டு, சீடர்கள் கலிலேயாவுக்கு சென்றனர். சீமோன் பேதுரு, தோமா, நத்தனியேல், செபதேயுவின் மக்கள் உள்ளிட்டோர் திபேரியக் கடலில் மீன்பிடிக்கச் சென்றார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. விடியற்காலையில் இயேசு கரையில் நின்று கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “பிள்ளைகளே! படகின் வலது பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், ‘நீர் யார்?’ என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

இயேசுவின் மரணம்

இயேசு கிறிஸ்துவை  கைது செய்த மதத் தலைவர்கள், அவருக்கு மரண தண்டனை விதித்தனர். அதை செயல்படுத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லாததால், உரோமை ஆளுநர் முன் நிறுத்த காரணம் தேடினர். இயேசுவை உரோமை அரசுக்கு எதிரானவராகக் காட்டி, அவரை சிலுவையில் அறைந்து கொல்ல அனுமதி பெற்றனர்.

அன்னா விசாரித்தல்

படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதக் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, முதலில் அவரை அன்னாவிடம் கொண்டு சென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார். ‘இந்தக் கயபாதான், “மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது” என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர். சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார். பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார்.
தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் அவரிடம் கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலுமே எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும்” என்றார். அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், “தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?” என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார். இயேசு அவரிடம், “நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” என்று கேட்டார்.

பேதுரு மறுதலித்தல்

அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார். வாயில் காவல் செய்த பணிப்பெண் பேதுருவிடம், “நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே?” என்று கேட்டார். பேதுரு, “இல்லை” என்றார். அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பேதுருவும் சென்று அவர்களோடு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் பேதுருவிடம், “நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே” என்று கேட்டனர். அவர் “இல்லை” என்று மறுதலித்தார். தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், “நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?” என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப் பட்டவருக்கு இவர் உறவினர். பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார். “இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

தலைமைச் சங்கம்

பின்னர் அவர்கள் இயேசுவைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச் சென்றார்கள். பொழுது விடிந்ததும், மறைநூல் அறிஞரும் மூப்பர்களும் அங்கே கூடி வந்தார்கள். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், “இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்” என்று கூறினார்கள். அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?” என்று கேட்டார்.
ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், “நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்” என்றார். அதற்கு இயேசு, “நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, “இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” எனப் பதிலளித்தார்கள்.

பிலாத்து முன்பு

அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை. எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, “நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்” என்றார்கள். பிலாத்து அவர்களிடம், “நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்” என்றார். யூதர்கள் அவரிடம், “சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது” என்றார்கள்.
பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார்.

இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று, “இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே” என்றான். மேலும், “பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்” என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன். பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து, “யூதரின் அரசே வாழ்க!” என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.

மரணத் தீர்ப்பிடல்

பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், “அவனை நான் உங்கள் முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்றான். இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், “இதோ! மனிதன்” என்றான். அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும், “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்றான்.
யூதர்கள் பிலாத்துவைப் பார்த்து, “எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அந்த சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமை கொண்டாடுகிறான்” என்றனர். பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான். அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. அப்போது பிலாத்து, “என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?” என்றான். இயேசு மறுமொழியாக, “மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது” என்றார். அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினான்.

ஆனால் யூதர்கள், “நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது” என்றார்கள். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். “கல்தளம்” என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், “இதோ, உங்கள் அரசன்!” என்றான். அவர்கள், “ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா? என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், “எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை” என்றார்கள். அப்போது பிலாத்து அவரை சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான்.

சிலுவையில் மரணம்

யூதர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையை சுமந்து கொண்டு ‘கொல்கொதா’ என்னுமிடத்திற்குச் சென்றார். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் “நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.
யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், “‘யூதரின் அரசன்’ என்று எழுத வேண்டாம்; மாறாக, ‘யூதரின் அரசன் நான்’ என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்” என்று கேட்டுக் கொண்டார்கள். பிலாத்து அவர்களைப் பார்த்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான். இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக் கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, “அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்” என்றார்கள்.

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேர முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். புளித்த திராட்சை இரசத்தில் கடற்பஞ்சை தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி, அவர்கள் அதை அவரது வாயில் வைத்தார்கள். அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

கல்லறையில் அடக்கம்

அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்து சடலங்களை எடுத்து விடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக் கொண்டார்கள். ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படை வீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத்தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோகிராம் கொண்டு வந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப் பட்டிருந்த இடத்தில் இருந்த தோட்டத்தில் ஒரு புதிய கல்லறை ஒன்று இருந்தது. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாள் என்பதாலும், அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.

இறுதி பாஸ்கா

இயேசு கிறிஸ்துவின் செயல்பாடுகள் யூத மதத் தலைவர்களுக்கு நேரடி சவாலாக அமைந்தன. எருசலேம் கோவிலின் பெயரால் அவர்கள் செய்து வந்த அநீதிகளை எதிர்த்து இயேசு வன்மையாக போராடினார். தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த யூதேயாவை, இயேசு பறித்துக் கொள்வாரோ என்று பயந்த மத குருக்கள் அவரைக் கொலை செய்வதுதான் தீர்வு என்று நினைத்தனர்.

சாவின் முன்னறிவிப்பு

இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து, “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்று அவர்களிடம் கூறினார்.

இறைவேண்டலின் வீடு

இயேசு பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது, சீடர்கள் போய் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைந்தது.
பின்பு இயேசு கோவிலுக்குள் சென்றார்; அங்கே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். “என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். பின்பு கால் ஊனமுற்றோரும் பார்வையற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர். இயேசு அவர்களைக் குணமாக்கினார். அவர் வியத்தகு செயல்கள் செய்வதையும் “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று கோவிலுக்குள் சிறு பிள்ளைகள் ஆர்ப்பரிப்பதையும் கண்டு தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் கோபம் அடைந்தனர்.

கொல்லத் திட்டம்

பின்பு இயேசு அவர்களை விட்டு அகன்று நகரத்திற்கு வெளியே உள்ள பெத்தானியாவுக்குச் சென்று தங்கினார். இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்திருந்த கிரேக்கர் சிலரும் இயேசுவைக் கண்டு அவரை நம்பினர்.
அப்போது இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்” என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று ஒலித்தது. பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, “இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்.

சீடருக்கு அறிவுரை

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்’ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்” என்றார். இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்து விட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவே மாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவா விட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார்.

சீடர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்.”

இறுதி இரவுணவு

இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த சீடர், “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், “நீ செய்யவிருப்பதை விரைவில் செய்” என்றார். உடனே யூதாசு வெளியே போனான்.
அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த பொழுது, இயேசு அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, “இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, “இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்க மாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

கைது செய்தல்

இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர். படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக்கொண்டு, விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் யூதாசு அங்கே வந்தான். தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள்.
இயேசு, “நான்தான்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்று கொண்டிருந்தான். இயேசு அவர்களைப் பார்த்து, “‘நான்தான்’ என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு. இயேசு பேதுருவிடம், “வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?” என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார். அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்றனர்.

மதவாதிகளின் சூழ்ச்சி

இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மற்றும் அற்புதங்களால் கவரப் பட்ட ஏராளமான மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். இதனால் தங்கள் ஆதிக்கத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய யூத மதத் தலைவர்கள், இயேசுவை கொலை செய்ய சூழ்ச்சி செய்தனர்.

பரிசேயரின் சூழ்ச்சி

பரிசேயர்கள் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட் படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள்பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று அவர்கள் கேட்டார்கள். இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டார்.
அவர் அவர்களிடம், “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப் பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார். இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

கூடார விழா

இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார். திருவிழாவின்போது, “அவர் எங்கே?” என்று யூதர்கள் இயேசுவைத் தேடினார்கள். மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இயேசுவைப்பற்றிக் காதோடு காதாய்ப் பலவாறு பேசிக் கொண்டனர். சிலர், “அவர் நல்லவர்” என்றனர். வேறு சிலர், “இல்லை, அவர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார்” என்றனர்.
பாதித் திருவிழா நேரத்தில் இயேசு கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார். “படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?” என்று யூதர்கள் வியப்புற்றார்கள். எருசலேம் நகரத்தவர் சிலர், “இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக் கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே” என்று பேசிக் கொண்டனர்.

கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார். இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. கூட்டத்திலிருந்த பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அவர்கள், “மெசியா வரும்போது இவர் செய்வதை விடவா மிகுதியான அரும் அடையாளங்களைச் செய்யப் போகிறார்?” என்று பேசிக் கொண்டார்கள்.

காவலரின் சான்று

இயேசுவைப் பற்றி மக்கள் இவ்வாறெல்லாம் காதோடு காதாய்ப் பேசுவதைப் பரிசேயர் கேள்விப்பட்டனர். எனவே அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி காவலர்களை அனுப்பினார்கள். இயேசு, “இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்; பின்னர் என்னை அனுப்பியவரிடம் செல்வேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால் காண மாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது” என்றார். இதை கேட்ட யூதர்கள், “நாம் காண முடியாதவாறு இவர் எங்கே செல்ல போகிறார்? ஒரு வேளை கிரேக்கரிடையே சிதறி வாழ்வோரிடம் சென்று கிரேக்கருக்கு கற்றுக் கொடுக்கப் போகிறாரோ?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர். வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை. தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர்.

தோற்றம் மாறுதல்

ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு, பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக் கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

அர்ப்பண விழா

எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்து கொண்டிருந்தது. யூதர்கள் இயேசுவைச் சூழ்ந்து கொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள் தான் நம்பவில்லை. ஏனெனில் நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும் விடப் பெரியவர். நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார். அவர்மேல் எறிய யூதர்கள் கற்களை எடுத்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். யூதர்கள் மறுமொழியாக, “நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறை மகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என்றார். இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

இலாசரின் உயிர்ப்பு

யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்கு கொடுத்து வந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, “ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்” என்று தெரிவித்தார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு இயேசு தம் சீடரிடம், “யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்” என்றார். அவருடைய சீடர் அவரிடம், “ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்” என்றனர். அப்போது இயேசு அவர்களிடம், “இலாசர் இறந்து விட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு புறப்பட்டார்.
இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப் பட்டதும் மார்த்தாவும், மார்த்தாவும் அவரைப் பார்க்க சென்றனர். மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.

இயேசு கல்லறைக்கு அருகில் சென்று, “கல்லை அகற்றி விடுங்கள்” என்றார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார். இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

மீண்டும் கலிலேயாவில்

இயேசு கிறிஸ்து தமது பணி வாழ்வின்போது, கலிலேயாவிலேயே அதிக நாட்கள் செலவிட்டதாக நற்செய்திகளில் காண்கிறோம். யூதேயாவில் சிறிது காலம் இறையாட்சி பற்றி போதித்த பிறகு, இயேசு மீண்டும் கலிலேயா திரும்பினார். தமது சீடர்களும் இறையாட்சி பணியாற்ற அவர் பயிற்சி அளித்தார்.

சீடருக்கு பயிற்சி

இயேசு பல்வேறு ஊர்களுக்குச் சென்று மக்களுக்கு இறையாட்சி குறித்து கற்பித்து வந்தார். அப்பொழுது பன்னிரு திருத்தூதரையும் அவர் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும் வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார்; அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

சிறுமியின் உயிர்ப்பு

ஒருநாள் தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார். இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.
இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார். இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர், “விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார் அவளும் உயிர்பெற்று எழுந்தாள். இச்செய்தி கலிலேயா நாடெங்கும் பரவியது.

நலம் அளித்தல்

இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட இயேசு கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, “அது பேய்” என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்.

மூதாதையர் மரபு

பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, “உம்சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே” என்றனர். அவர் அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்? கடவுள், ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும், ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் உரைத்திருக்கிறார். ஆனால் நீங்கள், ‘எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘உமக்கு நான் தரக் கடமைப்பட்டிக்கிறது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை’ என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்” என்றார்.
இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, “நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும்” என்றார். பேதுரு அவரை நோக்கி, “நீர் சொன்ன உவமையை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டார். இயேசு அவரிடம், “வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது. மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன” என்றார்.

இயேசுவின் கண்டனம்

இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள். அவர்களை போல நீங்கள் இருக்க வேண்டாம். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.”
மேலும் இயேசு, “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை. வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்” என்று கண்டித்தார்.

இரண்டாம் பாஸ்கா

இயேசு கிறிஸ்து யூதேயாவிலும் கலிலேயாவிலும் பல இடங்களில் பணி செய்ததை நற்செய்திகளில் காண்கிறோம். அவரது பணி வாழ்வின் இரண்டாம் பாஸ்கா விழாவையொட்டி, நற்கருணை குறித்த போதனையை இயேசு வழங்கினார் என்பது சிறப்பானது.

இளைஞரின் உயிர்ப்பு

இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள்.
அப்பொழுது இயேசு, “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

பரிசேயருக்கு பதில்

அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்” என்றார்கள். அவரோ அவர்களிடம், “ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.
இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றி வந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகவே தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

ஒழுக்க நெறிகள்

தம்மை நாடி வாழ்ந்த மக்களுக்கு இயேசு வழங்கிய அறிவுரைகள் பின்வருமாறு: “‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப் பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.”
“‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். ‘தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.”

அப்பம் பலுகியது

இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார்.
இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள்.

விண்ணக உணவு

மக்கள் கூட்டமாய் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக் கொண்டார்கள்.
இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்” என்றார். அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார்.

யூதேயாவில் பணி

இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

இயேசு, பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், “நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப் பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.